பச்சிளம் குழந்தை முதல் 64 வயது வரை யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? #DataStory



Sponsored



தூக்கம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முக்கியமான ஒன்று. ஆனால், அதிகமாகத் தூங்குவதும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; குறைவாகத் தூங்குவதும் நல்லதல்ல. எந்தெந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எப்படித் தூங்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டு அதன்படி உறங்கினால் உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் நன்மையே!

தூங்கும் நேரத்தைத் தவிர நம் கண்கள் எப்போதும் இயக்கத்திலேயேதான் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் மிக அவசியம். இன்றைக்கெல்லாம் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதிலிருந்து தூங்க வைப்பதுவரை செல்போன், கணினி இல்லாமல் பெற்றோர்களால் எதையும் செய்ய முடிவதில்லை. இதைத் தவிர்க்க குழந்தைகளாகவே மாறி அவர்களின் உலகத்துக்குள் செல்லவேண்டியிருக்கிறது. 

Sponsored


இரவு 11 மணிக்கு மேல் தூங்கச் செல்லும் குழந்தை, சரியாகச் சாப்பிடாமல் அரைகுறை வயிற்றோடு இரவில் எழுந்துகொள்ளும்; உணவுக்காக அழும். இதனால் தாமதமாகத் தூங்கிய குழந்தை மீண்டும் தூக்கத்தை தொலைத்துவிடும். சில தாய்மார்கள் இது போன்ற குழந்தைகளை, காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே எழுப்பி உணவு கொடுப்பார்கள். இதனால் குழந்தை, தான் தூங்கவேண்டிய நேரத்தில் பாதியை இழந்துவிடுகிறது.     

Sponsored


இப்படிப் பல்வேறு காரணங்களால் சரியாகத் தூங்காத குழந்தைகள் மீது பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். `இதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டால், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, அவர்களது எடை அதிகரித்து உடல் பருமனாகும் நிலை ஏற்படும்’ என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. 

குறைந்த நேரம் தூங்குவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள்...

சாதாரணமாகப் பெரியவர்களுக்கே சரியான தூக்கம் இல்லையென்றால், பல்வேறுவிதமான உடல் மற்றும் மனப் பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. `சரியான தூக்கம் இல்லாமல், குறைந்த அளவு நேரம் மட்டும் தூங்கும் குழந்தைகள் உடல் பருமன் மட்டுமின்றி இதயநோய், இரண்டாம் ரக சர்க்கரைநோய், மூச்சுத்திணறல், சோர்வு, ஞாபகசக்திக் குறைபாடு, மனம் சார்ந்த பிரச்னைகள்... எனப் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று இங்கிலாந்திலுள்ள வார்விக் பல்கலைக்கழக (University of Warwick) ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சரியான தூக்கம் எவ்வளவு நேரம்?

இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பச்சிளங் குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான 75,499 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அவர்களில் `குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகள்’, `சரியான நேரம் தூங்கும் குழந்தைகள்’ என்று இரு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் 0 முதல் 3 மாத வயதுள்ள பச்சிளங் குழந்தைகள் 14 முதல் 17 மணி நேரமும், 4 முதல் 11 மாத வயதுள்ள பச்சிளங் குழந்தைகள் 12 முதல் 15 மணி நேரமும் தூங்க வேண்டும் என்றும், 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் தினமும் 10 முதல் 13 மணி நேரமும், 6 முதல் 13 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகள் தினமும் 9 முதல் 11 மணி நேரமும், 14 முதல் 17 வயது வரையிலான இளம் பருவத்தினர் தினமும் 8 முதல் 10 மணி நேரமும் நன்றாகத் தூங்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தைகள் குறைந்த நேரம் தூங்குவதால், அவர்கள் சாப்பாடு மற்றும் தின்பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுகிறார்கள்; அதனால் அவர்களின் உடல் பருமனாகிவிடுகிறது என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

சரியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் எப்போதும் விரைவாகச் சோர்வடைந்துவிடுவார்கள். தூங்கினால் மட்டுமே சுறுசுறுப்பைப் பெற முடியும். எனவே, அவர்களுக்குத் தூங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; வெறும் வயிற்றுடன் தூங்க வைக்கக் கூடாது. இதனால், பாதியில் விழித்துக்கொள்வார்கள். எனவே, எளிதில் செரிமானமாகக்கூடிய உணவை, அதையும் அதிகம் கொடுக்காமல், அளவாகக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும். தினமும் இரவில் சரியான நேரத்தில் தூங்க, அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கவைக்கக் கூடாது. விடுமுறை நாள்களிலும்கூட இந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம். அப்போதுதான் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.

படுக்கையறையில் கணினி / செல்போன் போன்ற எந்த மின்னணுச் சாதனத்தையும் வைக்காமலிருந்தால், குழந்தையின் தூக்கத்துக்குத் தடை இருக்காது. படுக்கையறையின் திரைகளை மூடி, விளக்குகளை அணைத்து, சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது குழந்தைகள் விரைவாகத் தூங்குவதற்கு வசதியாக இருக்கும். எப்போதும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குழந்தைகளை நன்கு விளையாடவிட வேண்டும். விளையாடிய களைப்பில் விரைவாகத் தூக்கம் வரும். அதேபோல், இறுக்கமில்லாத ஆடைகளை அணிவித்துத் தூங்கவைத்தால், சிரமமில்லாமல் தூங்குவார்கள். 

நன்றாகத் தூங்குபவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்னதான் குழந்தைகளை அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்தாலும், அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அவர்களின் உடல்நலத்தைச் சரியாகப் பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு கொடுக்கவேண்டியது அவசியம். நம் குழந்தைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி தூக்கம் என்பதைப் புரிந்துகொள்வோம்; அவர்கள் தேவையான அளவுக்குத் தூங்க உதவுவோம்! 



Trending Articles

Sponsored