காசநோயைக் கண்டுபிடிக்க அரசு நடமாடும் ஆய்வுக்கூடம்! - மருத்துவ வசதிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள்`மிகக் கொடிய நோய்’ என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது காசநோய். ஆனால், அதற்கும்  சிகிச்சைகளைக் கண்டுபிடித்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும், உலக அளவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துவருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது வேதனை. உலக காச நோயாளிகளில் 25 சதவிகிதம் பேர் இந்தியர்கள். `இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு இன்னமும் முழுமையாகப் பொதுமக்களிடம் சென்று சேரவில்லை’ என்பதே மருத்துவர்களின் ஆதங்கம். 

Sponsored


ஏற்கெனவே உலகச் சுகாதார நிறுவனம், `2030-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதையடுத்து, `காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை 2025-ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திரமோடியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான், தாம்பரம் சானடோரியத்திலுள்ள அரசு நெஞ்சக நோய்

மருத்துவமனையில் காசநோயைக் கண்டுபிடிப்பதற்கான எக்ஸ்ரேயுடன் கூடிய நடமாடும் மருத்துவ வாகனத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. காசநோய்க்கான குறுகிய கால சிகிச்சை முறை அறிமுக விழாவாக நடந்தது நிகழ்வு. தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  தொடங்கி வைத்தார். ``இந்தத் திட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகளில்லாத குக்கிராம மக்களும் பயனடைவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார் விஜயபாஸ்கர். 

Sponsored


``இந்த வாகனத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன... இது எந்த வகையில் காசநோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவும்?" -  தமிழ்நாடு மாநில காசநோய் திட்ட அலுவலர் செந்தில் ராஜுடம் கேட்டோம். 

Sponsored


`` `மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால்தான் காசநோய் வருகிறது. இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். புகைபிடிப்பவர்கள், ஊட்ட சத்துக்குறைபாடு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், சர்க்கரை நோயாளிகள், எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இது வருகிற வாய்ப்பு அதிகம். ஒருவருக்குக் காசநோய் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய ரத்தப் பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற பல பரிசோதனைகளும் இருக்கின்றன. இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. பொதுவாக, காசநோய் 90 சதவிகிதம் நுரையீரலையே பாதிக்கும். மீதி 10 சதவிகிதம்தான் மற்ற உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.  

காசநோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கின்றனவோ, அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். சளியில் மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium Tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் இருந்தால், அது காசநோய் இருப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்வதாக அர்த்தம். எனவேதான், சளி மூலம் இந்த நோயைக் கண்டறிவது முக்கியமான பரிசோதனையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சளி பரிசோதனை செய்யும் இயந்திரம்  (Cartridge Based Nucleic Acid Amplification Testing (CB-NAAT)  பொருத்தப்பட்ட  நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் உதவியோடு ஒரு மணி நேரத்தில் முடிவைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.  முதல்கட்டமாக இரண்டு நடமாடும் வாகனங்களை `உலகக் காசநோய் தின’த்தில் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இது பல மாவட்டங்களுக்கும் செல்லவிருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அந்தத்தந்த மாவட்ட கலெக்டர் இந்த நடமாடும் வாகனத்தைத் தொடங்கிவைப்பார். அந்த வாரம் மாவட்டம் முழுக்கப் பல பகுதிகளுக்கு இந்த வாகனம் செல்லும். ஏற்கெனவே, இந்த வாகனங்கள் இந்த மாதம் 1 -7-ம் தேதிவரை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும்,  8-14-ம் தேதி வரை திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், 15-21-ம் தேதி வரை விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பரிசோதனையை முடித்துவிட்டன. 

அடுத்ததாக இந்த வாகனங்கள் செல்லவிருக்கும் மாவட்டங்கள்... 

* ஏப்ரல் 22- 28:  கடலூர், தர்மபுரி 

* ஏப்ரல் 29 - மே 5:  நாகப்பட்டினம், சேலம் 

* மே 6- 12:   திருவாரூர், ஈரோடு 

* மே 13-19: தஞ்சாவூர், கோவை 

* மே 20 -26: புதுக்கோட்டை, நீலகிரி 

* மே 27-  ஜூன் 2:  சிவகங்கை, திருப்பூர் 

* ஜூன்  3-9:  ராமநாதபுரம், நாமக்கல் 

* ஜூன்  10-16:  மதுரை, கரூர் 

* ஜூன் 17- 23: தேனி, திண்டுக்கல் 

* ஜூன் 24- 30: விருதுநகர், திருச்சி  

* ஜூலை 1- 7: திருநெல்வேலி, பெரம்பலூர் 

* ஜூலை 8 - 14: தூத்துக்குடி, அரியலூர் 

* ஜூலை 15- 21: கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் பயணம் செய்யவிருக்கிறது. 

நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி இந்த வாகனம் ஊர் ஊராகச் செல்லும். விருப்பப்பட்டவர்கள் நேரடியாக சளிப் பரிசோதனை செய்துகொள்ளலாம். ஒருவருக்கு, காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால். முதற்கட்டமாக ஒரு மாதத்துக்கான மருந்துகள் அவருக்கு அளிக்கப்படும். அதோடு, அவரது வங்கிக் கணக்கில் சிகிச்சை காலத்துக்கு, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் தமிழக அரசால் செலுத்தப்படும். 

பன்மருந்து எதிர்ப்பு காசநோய்க்கு 18 முதல் 24 மாதங்கள்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இப்போது 9 முதல் 12 மாதங்களுக்குள் குணப்படுத்திவிடலாம்; அதற்கு குறுகியகால சிகிச்சை முறை தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. பரிசோதனை முடிவில் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். தாம்பரம் சானடோரியத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, `ரோட்டரி இந்தியா டிபி கட்டுப்பாட்டு திட்டம்’ ( Rotaray India TB Control Programme) என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்களிலுள்ள நோயாளிகளை, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று காசநோயைக் கண்டுபிடிப்பதற்கான நவீன டிஜிட்டல் எக்ஸ்ரேயுடன்கூடிய நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான  வாகனத்தை ரோட்டரி சங்கம் அர்ப்பணித்திருக்கிறது. இந்த வாகனத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, சளிப் பரிசோதனைக் கருவி இருக்கும். நெஞ்சக நோய் மருத்துவர், லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் அடங்கிய குழுவினர் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த வாகனத்தில் எக்ஸ்ரே, சளிப் பரிசோதனையை இலவசமாகச் செய்துகொள்ளலாம்.  இந்த பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் முழுமையான வெற்றி பெற்றால், தமிழகம் முழுவதற்கும், `ஒரு மாவட்டத்துக்கு ஒன்று’ என்ற கணக்கில் இந்த மருத்துவ வாகனத்தை வாங்குவதற்கான யோசனையும் இருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாகப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் செந்தில் ராஜ்.
 


 Trending Articles

Sponsored