இரவு நறுக்கி வைக்கும் காய்கறி, வாரம் ஒருமுறை துவைத்தல்... வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் 8 தவறுகள்!



காலையில் அலாரம் அடித்து எழுப்பும்போது ஆரம்பிக்கும் வேகம் சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை பூமியைப் போல் நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய பணி, வேலைக்குச் செல்லும் பெண்களுடையது. தொடர்ந்து பயணிக்கும் வாழ்க்கையில் அவர்கள் செய்யும் தவறுகள் சில... அது இயல்புதானே என்பவர்களுக்கு... அதனால் உடல்நலமும், குடும்ப நலனும் அல்லவா பாதித்துவிடும். இதோ வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் சில தவறுகள்..

1. காய்கறிகளை முதல் நாள் இரவே நறுக்கிவைப்பது.

Sponsored


வேலைக்குச் செல்லும் சில பெண்கள், காலை நேரத்துப் பரபரப்பை குறைக்க, முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்துக்கள் உள்ளன. சமைப்பதற்கு வேகு நேரத்துக்கு முன்பே காய்களை நறுக்கி, ஃப்ரீட்ஜில் வைப்பதால், இந்த வைட்டமின், நார்ச்சத்துகள் பெரும்பாலும் காற்றில்  கலந்துவிடும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஏற்கெனவே வைத்திருக்கும் சில பொருள்கள், எளிதில் பாக்டீரியாவை பரப்பும். எனவே, நறுக்கிய காய்களிலும் பாக்டீரியா பரவலாம். அதனால், காய்களை இரவே நறுக்கிவைக்கும் பழக்கத்தை தவிர்க்கவும்.

Sponsored


Sponsored


2. காலை உணவைத் தவிர்ப்பது!

அதிக வேலை, நேரம் இல்லை, டயட் என எந்தப் பெயரில் சொன்னாலும், காலை உணவை ஸ்கிப் செய்வது, பல நோய்களுக்கு இன்விடேஷன் கொடுத்து வரவைப்பதற்குச் சமம். இரவு உணவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளி காரணமாக இரைப்பையில் அதிக அமிலம் சுரந்திருக்கும். இந்தச் சமயத்தில் உணவைத் தவிர்த்தால், அமிலத்தால் இரைப்பை சிதையத் தொடங்கும். முதல் நாள் இரவில் இயல்பாக ஏறிய பித்தம், மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப்புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் எனப் பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். காலை உணவைத் தாமதமாக எடுத்துக்கொண்டாலும், உடலில் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும் கலோரியும் அதிகரித்து, அடிவயிற்றில் படியும். ஆகவே, காலை உணவைக் தவிர்க்க வேண்டாம் தோழிகளே!

3. குழந்தைகளை அக்கம்பக்கம் வீட்டாரிடம் விடுவது!

கூட்டுக் குடும்பம் அரிதாகிவிட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களில் பலர், குழந்தையைப் பக்கத்தில் உள்ள வீட்டார்களிடம் ஒப்படைக்கிறார்கள். இது, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள நெருக்கத்தை உடைக்கும். தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துவரும் சூழலையும் மனதில்கொள்ள வேண்டும். எனவே, தனது அல்லது கணவனின் தாய் போன்ற நெருங்கிய உறவினரிடம் ஒப்படையுங்கள். முடியாதபட்சத்தில், தரமான குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பது நல்லது.

4. அழகு சாதனப் பொருள்கள் பயன்பாடு!

அலுவலகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சில பெண்கள் எப்போதுமே மேக்கப்பில் இருப்பார்கள். அந்த அழகு சாதனப் பொருள்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறையான வழிகாட்டல் இல்லாமல், இஷ்டத்துக்குப் பயன்படுத்துவார்கள். இது, சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, தோல் மருத்துவரை அணுகி, உங்களின் ஸ்கினுக்கு ஏற்றதைத் தேர்வுசெய்து, சரியான அளவில் பயன்படுத்துங்கள். அழகுடன் ஆரோக்கியமும் இருக்கும்.

5. அலுவலக வேலையை வீட்டில் பார்ப்பது!

பல பெண்கள் அலுவலக வேலையையும் வீட்டு வேலையையும் சமன் செய்வதில்தான் பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். சரியான திட்டமிடலுடன் செயல்படுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். அலுவலகப் பணியை வீட்டில் பார்க்கும்போது, உங்கள் குழந்தை மற்றும் கணவருக்குச் செலவிடும் நேரத்தையும் அன்பையும் இழக்கிறீர்கள் என்பதை மனதில்கொண்டு, திட்டமிட்டுச் செயல்படுங்கள்.

6. மாதவிடாய் காலம்!

அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், மாதவிடாய் நாள்கள். அதிக வேலை, ஆண்களுக்கு மத்தியில் பணிபுரியும் சூழல் போன்றவற்றால், நாப்கின்களை கழிப்பறைக்கு எடுத்துச்செல்லத் தயங்கி, மணிக்கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இது, தொற்றுநோய், சரும அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கும். மேலும், மாதவிடாய் காலத்தில் அதிக அளவு உதிரப்போக்கினால் சில பெண்கள் சோர்ந்து இருப்பர். இது, அலுவலகத்தில் உங்களின் திறமை குறித்த மதிப்பைக் கெடுக்கும். எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டு, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் செயல்படுங்கள்.

7. சேர்த்துவைத்து துணிகளைத் துவைத்தல்!

அலுவலகம் செல்லும் பெண்களில் 90% பேர், அலுவலகத்துக்கு போடும் துணிகளைத்தவிர மற்ற நாள்களில் பயன்படுத்திய துணிகளை ஒரு கூடையிலோ, வீட்டின் ஓரத்திலோ போட்டு வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்திய ஆடைகளில் வியர்வையின் காரணமாக பாக்டீரியா, கிருமிகள் இருக்கும். பயன்படுத்திய ஆடைகளை மொத்தமாகப் போட்டு வைக்கும்போது, வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு உடையவர்களுக்குக் கெடுதல் ஏற்படும். எனவே, சிரமம் பார்க்காமல், பயன்படுத்திய துணிகளை அன்றாடம் துவைத்துவிடுவது நல்லது.

8. பாலியல் சீண்டல்கள்!

சில பெண்கள் அலுவலகத்தில் பாலியல் சீண்டல்கள், கேலிகளுக்கு ஆளாகலாம். இதுபோன்ற சூழலில் பயம் மற்றும் தயக்கத்தால் பிரச்னையைத் தள்ளிப்போடுவார்கள். இது, தவறு செய்பவர்களுக்கு நம் மீதான பார்வையை, கேரக்டரை வேறு மாதிரியாக மாற்றிவிடும். எனவே, ஆரம்பத்திலே சரியான பதிலடி கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவித்து விஷயத்தை முடிக்க வேண்டும்.



Trending Articles

Sponsored