'பாப்பாக்களுக்கு மட்டுமல்ல, தாத்தாக்களுக்கும் தேவை தடுப்பூசி!' #WorldImmunizationWeek



Sponsored



போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குணப்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியாது. எத்தனை லட்ச ரூபாய் செலவு செய்தாலும், எந்த நாட்டில் சிகிச்சையெடுத்துக்கொண்டாலும் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவரைச் சரிசெய்யவே முடியாது. அதே நேரத்தில், அதற்கான தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால் போலியோ வராமல் தற்காத்துக்கொள்ள முடியும். அதிகமாகச் செலவு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. தடுப்பு மருந்துகளின் அவசியத்தையும் தேவையையும் நாம் இதன் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம், தட்டம்மையால் உலகம் முழுவதும், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துகொண்டிருந்தார்கள். தடுப்பு மருந்துகள் கொடுப்பட்ட பிறகு, (2000 - 2016) கிட்டத்தட்ட 84 சதவிகிதம் தட்டம்மையால் ஏற்படும் இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

`எதற்கெடுத்தாலும் தடுப்பு மருந்தா? பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக, வலுக்கட்டாயமாகத் தடுப்பு மருந்துகள்

கொடுக்கப்படுகின்றன’ என்றும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அப்படி விமர்சனம் வைப்பவர்கள்கூட தடுப்பு மருந்துகள் அறவே கூடாது என்று சொல்வதில்லை. அனைத்து நோய்களுக்கும், எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுவதை மட்டுமே கண்டிக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 - 30 தேதி வரை உலகத் தடுப்பு மருந்து வாரம் (World Immunization Week) கடைப்பிடிக்கப்படுகிறது. தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக உலகம் முழுவதும் ஏராளமான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. `தடுப்பு மருந்து செயலாற்றுகிறது’ (Immunization works) என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள் வாசகம்.

Sponsored


தடுப்பு மருந்துகளின் அவசியம் குறித்து குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் ராம்குமார் விளக்குகிறார்... ``தடுப்பு மருந்துகள் மிகவும் அவசியமானவை. தடுப்பு மருந்துகளால் உலகில் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. குழந்தைகளை மிகவும் அச்சுறுத்திக்கொண்டிருந்த பெரியம்மை 1978-ம் ஆண்டு தடுப்பு மருந்துகளின் மூலமாக உலகம் முழுக்க ஒழிக்கப்பட்டது. அதுபோல், போலியோ தடுப்பு மருந்துகள் வழங்காத தேசங்களான பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்புகள் இருக்கின்றன. மற்ற அனைத்து நாடுகளிலும் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது.

Sponsored


இந்தியாவில் 2011-ம் ஆண்டு முழுமையாகப் போலியோ பாதிப்பு ஒழிக்கப்பட்டுவிட்டது. தட்டம்மை வெகு விரைவில் ஒழிக்கப்பட

இருக்கிறது. உங்கள் குழந்தைகளை, தொண்டை அடைப்பான், கக்குவான், ரண ஜன்னி, மஞ்சள்காமாலை, மூளைக் காய்ச்சல், நிமோனியா, ஃப்ளூ என்ற பன்றிக் காய்ச்சல், புட்டாலம்மை, ரூபெல்லா, டைஃபாய்டு, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், பேதி போன்ற பல பாதிப்புகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்."

'பாப்பாக்களுக்கு மட்டுமல்ல தாத்தாக்களுக்கும் தடுப்பூசி' என்னும் வாசகங்களோடு விழிப்புஉணர்வு ஏற்படுத்திவரும் முதியோர் நல மருத்துவர் நடராஜன், முதியோர்களுக்கு ஏன் தடுப்பூசி தேவை என்பது குறித்து விளக்குகிறார்... ``முதியோர்கள் பலர் நிம்மோனியாவில் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாக ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புஉணர்வு ஏற்படுத்திவருகிறோம். ஒருமுறை போட்டுக்கொண்டாலே வாழும் காலம்வரை நிம்மோனியா ஏற்படாது. வருகிற சனிக்கிழமை, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இதற்கான விழிப்புஉணர்வு பேரணி நடத்தவிருக்கிறோம். 'போலியோ இல்லாத நாடுபோல் நிம்மோனியா இல்லாத நாட்டை உருவாக்குவோம் 'என்பதே எங்கள் பேரணியின் நோக்கம்.’’

தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்... ``1,477 கிராமங்களில் இரண்டு நாள்கள் (26 - 27) சிறப்பு முகாம்கள் நடத்துகிறோம். குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடுவதற்கான வசதிகளைச் செய்திருக்கிறோம். மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று மலேரியா ஒழிப்பு குறித்து விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறோம்’’ என்றார்.



Trending Articles

Sponsored