கோடையில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா... ஓர் அலெர்ட்!



Sponsored



வெடவெடக்கும் குளிரா..? சூடாக டீ, காபி , பருத்திப்பால் சூப்... இப்படி அருந்தினால் தொண்டைக்கு இதமாக இருக்கும், இல்லையா? கோடைக்காலம் என்றால் இளநீர், விதவிதமான ஃபுரூட் ஜூஸ், மோர்... குளிர்ந்த பானங்கள் தொண்டைக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும். பொதுவாக, தட்பவெப்பநிலைக்கேற்பதான் நம் உடலின் உணவுத்தேடல் இருக்கும்.

அதேசமயம், சுவை என்பது குளிர்காலமோ, பனிக்காலமோ, வெயில்காலமோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மாம்பழம், எந்தக் காலத்திலும் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையாயோடுதான் இருக்கும். பாகற்காய் எப்போதுமே கசப்புச் சுவையுடதுதான். ஆக, காரமான ஓர் உணவுப்பொருள் எந்தத் தட்பவெப்பநிலையிலும் காரமாகத்தானே இருக்கும்? உடலுக்கு நன்மையோ, தீமையோ எந்தப் பருவநிலையிலும் ஒரே மாதிரியான விளைவுகளைத்தானே காரம் தர வேண்டும். அப்படியிருக்க, `வெயில் காலத்தில் மட்டும் காரமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது” என்று சொல்கிறார்களே... ஏன்? மருத்துவர்களிடம் அதற்கான விளக்கங்களைக் கேட்டறிந்தோம்.

Sponsored


``குளிர்காலத்தில், மழைக்காலத்தில் நம் உடலுக்கு வெப்பம் தேவை. அப்போது காரமான, எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்டால், அவை உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைக் கொடுக்கும். அதே நேரத்தில் கோடைக்காலத்தில் இயல்பாகவே உடலில் நீர்வறட்சி ஏற்படும். அப்போது காரமான உணவுகளைச் சாப்பிட்டால் உடல் சூடாகி, மேலும் நீர் வறட்சியே ஏற்படும். அதனால், ஏப்பம், வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு, செரிமானக் கோளாறுகள் போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். சிலருக்கு ரத்த வாந்திகூட வரலாம்.

Sponsored


கோடைக்காலத்தில், காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிற்றில் செரிமானத்துக்காகச் சுரக்கும் அமிலங்களுடன் உணவு கலந்து அல்சர் பாதிப்புகள் உண்டாகும். இதனால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுச் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிறு குடலுக்கு, உணவை உட்கிரகிக்கும் திறன் குறைந்துபோகும். இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்ய குறைந்தது ஆறு மாதங்களாவது சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். இதனால் வெயில் காலத்தில் காரமில்லாத, எளிதில் செரிமானமாகக்கூடிய, எண்ணெயில் பொரிக்காத உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ்வரன்.

சித்த மருத்துவர் வேலாயுதம் இது குறித்து விரிவாக விளக்குகிறார், 

``கோடைக்காலத்தில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அசிடிட்டி அதிகமாகும். இதனால் உடல்சூடு, வயிற்றில் புண்கள், செரிமானக் கோளாறுகள், வயிற்று மந்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். `காரமான உணவுகள் தீயின் அம்சத்தைக்கொண்டவை’ என்கிறது சித்த மருத்துவம். வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது நாம் சாப்பிடும் உணவும் தீயின் அம்சமாக இருந்தால், உடலின் சூடு மிக அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும். குளிர்காலத்தில் இந்த பிரச்னைகள் ஏற்படாது.

பொதுவாக, வெளியில் உள்ள தட்பவெப்பநிலையைச் சமாளிக்கும்விதமாக நம் உணவு முறை இருக்க வேண்டும். வெயில் காலத்தில் இனிப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். இவை, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இளநீர், நுங்கு, பதநீர் போன்ற துவர்ப்பும், இனிப்பும் நிறைந்த பானங்கள் உடலுக்கு மிகவும் நல்லவை. காரம், புளிப்பு, உப்பு ஆகிய சுவையுடைய உணவுப் பொருள்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவது நல்லது.

கோடைக்காலத்தில், சாதம், கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றை முதல் நாள் தயாரித்து ஒருநாள் வைத்திருந்து சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். வீட்டில் சமைக்கும் குழம்பில் மிளகாய்த்தூள் மற்றும் புளியைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மல்லித்தூளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகுக்காரம் பித்தத்தைக் குறைக்கக் கூடியது. அதனால் உணவில் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். காரக்குழம்பில் சிறிது வெல்லம் சேர்த்துக்கொள்வது சிறப்பு. ஊறுகாயைத் தவிர்த்துவிட வேண்டும். துவையல் அரைத்துச் சாப்பிடலாம்.

நீர் ஆகாரங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பழங்கள் இனிப்புச் சுவையுடன்தான் இருக்கும். அதனால் அனைத்து வகைப் பழங்களையும் சாப்பிடலாம். அதேபோல எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அது, வயிற்று மந்தம், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

எண்ணெயைப் பொறுத்தவரை, கடலை எண்ணெய் , ரீபைஃண்டு ஆயிலைத் தவிர்த்துவிட்டு நல்லெண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.



Trending Articles

Sponsored