ஆண்டுக்கு 59,000 பேரை பலிவாங்கும் ரேபிஸ்... தவிர்ப்பது எப்படி? #RabiesAlert



உலகம் முழுவதும் ஒன்பது நிமிடத்துக்கு ஒருவரும், ஆண்டுக்கு 59,000 பேரும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். சர்வதேச அளவிலான மொத்த உயிரிழப்பில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் (ஆண்டுக்கு 26,000 பேர்) இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருக்கும் எட்டு நாடுகளில்தான் ஏற்படுகின்றன. எனவே, ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிடுமாறு இந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

Sponsored


'ரேபிஸ்' என்பது ஒருவகை வைரஸ் தொற்று. இது நாய், பூனை, குதிரை, வௌவால் போன்ற விலங்குகளைத் தாக்கும். பாதிக்கப்பட்ட அந்த விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், மனிதர்களுக்கும் இது பரவும். இந்தியாவில், பெரும்பாலும் நாய்க்கடி மூலமாகத்தான் மனிதர்களுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

Sponsored


ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு, தமிழக சுகாதாரத்துறை என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

Sponsored


``ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. உயிழப்புகளைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறோம். நாயோ அல்லது வேறு ஏதேனும் விலங்கோ கடித்துவிட்டால், கடித்தவுடன்; மூன்று நாள்கள் கழித்து; ஏழு நாள்கள் கழித்து; இருபத்தெட்டு நாள்கள் கழித்து... என நான்கு தடுப்பூசிகள் போட வேண்டும். இந்தத் தடுப்பூசிகள், எல்லா அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் இலவசமாகக் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

இந்தியாவில், ஆண்டுக்கு 15,000 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 20 பேர் மட்டுமே உயிரிழக்கிறார்கள். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தொலைபேசியில் அழைத்துத் தொடர் சிகிச்சையளித்துவருகிறோம். எங்களின் விடாமுயற்சியால், நாய்க்கடியால் உரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்துவருகிறது. 2015-ம் ஆண்டில் 41 பேர், 2016 -ம் ஆண்டு 25 பேர் , 2017-ம் ஆண்டு 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

யாருமே உயிரிழக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். அதற்கு, மக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். சிலர் வீட்டு நாய்தான் கடித்தது என்று கவனமில்லாமல் இருப்பார்கள். ஒரே ஒரு தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதோடு சிலர் விட்டுவிடுவார்கள். இப்படி அக்கறையில்லாமல் யாரும் இருக்கக் கூடாது. நாய் மட்டுமல்ல... பூனை, குரங்கு போன்ற எந்த விலங்கு கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடித்தவுடனே, கடித்த இடத்தை ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட வேண்டும். கடித்த இடத்தைத் துணியால் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

ரேபிஸால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை வெறும் கையால் தூக்கக் கூடாது. கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பிளீச்சிங்  பௌடர் போட்டுப் புதைக்க வேண்டும். வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், நாய்களுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், தமிழ்நாட்டை ரேபிஸ் இறப்பில்லா மாநிலமாக நிச்சயமாக மாற்ற முடியும்’’ என்கிறார் குழந்தைசாமி.

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டால், அதன் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை கால்நடை மருத்துவர் நாகராஜன் (Ballo pet clinic) விளக்குகிறார்...

`` நாய்களுக்கு சில நேரங்களில் வெறிகுணம் (Aggression) ஏற்படும். அதன் காரணமாகக் கடிக்கும். அதனால், பெரிய பாதிப்பு எதுவுமில்லை. இருந்தாலும் மருத்துவர்களைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. நாயையும் கால்நடை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

அதேசமயம், வெறிநோயால் (ரேபிஸ்) பாதிக்கப்பட்ட நாய்கள் கடித்தால், மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு நாய்க்கு வெறிநோய் தாக்கிவிட்டால், அதன் நாக்கின் நிறம் மாறும், கீழ்த்தாடை தொங்க ஆரம்பித்துவிடும். பக்கவாதம் உண்டாகும். அனைவரையும் கடிக்கும். உமிழ்நீர் அதிகமாக வெளியேறும். கூப்பிட்டால் திரும்பிப் பார்க்காது. இந்த மாதிரியான மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாக நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிட வேண்டும்’’ என்கிறார் நாகராஜன்.



Trending Articles

Sponsored