தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit



லா சீஸன் தொடங்கிவிட்டது. சாலையோரம் தள்ளுவண்டியில் பலாப்பழத்தை இரண்டாகப் பிளந்துவைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள். பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவை, நினைத்தாலே சாப்பிடத் தோன்றும். அதன் மணமும் அலாதியானது. அதற்காகப் பலாச்சுளைகளில் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நழுவிவிட முடியாது. அதன் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். கோடைக்காலம்தான் பலாப்பழத்துக்கு சீஸன் என்றாலும், அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக நம்மிடம் இருக்கிறது. இதனாலேயே பலரும் அதைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதும் உண்டு.

 

Sponsored


``உண்மையில் பலாப்பழம் உடல் சூட்டை அதிகரிக்குமா, யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது’’ - ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.

Sponsored


``வருடத்தின் 12 மாதங்களை உடல் பலவீனம் அடையும் காலமாக ஆறு மாதங்களையும், உடல் பலம் உண்டாகும் காலம் என ஆறு மாதங்களையும் ஆயுர்வேதம் இரண்டாகப் பிரித்துவைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கோடைக்காலத்தை `உடல் பலவீனம் அடையும் காலம்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த உடல் பலவீனத்தைத் தவிர்க்க, இயற்கை கொடுத்த கொடைதான் 'சீஸனல் ஃபுருட்ஸ்.’ அந்த வகையில், உடல் பலவீனமாக இருக்கும் காலத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப சாப்பிடுவதற்காகவே சீஸனல் ஃபுருட்ஸ் விளைகின்றன. இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம்.

Sponsored


பலாப்பழத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் இதைப் போன்ற பலன்கள் பிற காலங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, டானிக்காகத் தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதற்கு சம்ஸ்கிருத்தில் `பழ ஆசவ...’ என்று பெயர். உதாரணமாக, சில குழந்தைகள் சாப்பிட்டவுடன் மலத்தை வெளியேற்றிவிடுவார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து தங்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த நிவராணியாகப் பலாப்பழத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பலா, உடல் மெலிந்தவர்களை தேற்றும்; நல்ல சதைப்பிடிப்புடன் ஆரோக்கியமாக உடலைப் பருக்கச்செய்யும்; ரத்த பித்த நோய் எனப்படும் (Bleeding Disorder) ரத்தப்போக்கு நோய்களை தடுக்க உதவும்; மலச்சிக்கல் போக்கும்.

பலாப்பழம் அனைவரும் சாப்பிட ஏற்றப் பழம்தான். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமளிக்கும் பழம். இதன் சுளை மட்டுமல்ல, பலாவின் கொட்டை முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக்குணங்களைக் கொண்டவை.

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

அஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

மரத்திலேயே பழுக்காத பலாப்பழத்தை பழுக்கவைத்து சாப்பிட்டாலோ, நன்றாகப் பழுக்காத பழங்களை சாப்பிட்டாலோ பல உடல் தொந்தரவுகளை  அவை கொடுக்கும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்; பசி மாந்தம் (பசியின்மை), வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.

பலாப்பழத்தால் ஏற்படும் தொந்தரவுகளைப் போக்க, மிளகை இடித்து கொதிக்கவைத்து அருந்தலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'அஷ்ட சூரணம்' வாங்கி மோரில் கலந்து குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

ஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம்’’ என்கிறார் பாலமுருகன். 



Trending Articles

Sponsored