30 வயதுக்கு மேல், 8-ல் ஒருவரைப் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம் - ஒரு அலர்ட்! #Highbloodpressure



Sponsored



யர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல் சொத்தை போன்ற தொற்றா நோய்கள் குறித்து `நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே' சார்பில் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100 மாவட்டங்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 30 வயதுக்கு மேற்பட்ட எட்டில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. 2015-16-ம் ஆண்டில் 11 பேரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. இப்போது எட்டுப் பேரில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. 

ரத்த அழுத்தப் பரிசோதனையின்போது 130/90 mmHG அல்லது 140/90 mmHg என்ற அளவை உயர் ரத்த அழுத்தம் என்பார்கள். `நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே' அறிக்கையின்படி 8.6 சதவிகித இந்தியர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 10.4 சதவிகித ஆண்களும் 6.7 சதவிகிதப் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sponsored


இந்த ஆய்வு முழுவதும் ஆரம்பச் சுகாதார மையங்கள், துணை சுகாதார நிறுவனங்களின்மூலம் கிராமப்புற மக்களிடையே நடத்தப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோருக்குத் தாங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவில்லை. 

Sponsored


நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், உயர் ரத்த அழுத்தத்தின் தாக்கம் கிராமப்புறங்களை விட அதிகமாக இருக்கிறது என்கிறது `கார்டியாலஜி சொசைட்டி ஆஃப் இந்தியா' (Cardiology society of India). நகரங்களில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மூன்றில் ஒருவரும் பிரிட்டனில் நான்கில் ஒருவரும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். 

நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்கு, பரபரப்பான வாழ்க்கை முறை, அழுத்தம் மிக்க பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால், கிராமங்களில் வசிப்போருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது தற்போது மருத்துவ உலகத்தை அதிரச் செய்திருக்கிறது.  

2025-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களைத் தடுக்கும் தேசியத் திட்டத்தின் மூலம், இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளை 25 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது இந்தியச் சுகாதார அமைச்சகம். இதேபோல்,  நாம் உட்கொள்ளும் உப்பு அல்லது சோடியத்தின் அளவுகளை 30 சதவிகிதம் குறைக்க முடிவு செய்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதுடன் அதற்கு முறையாகச் சிகிச்சை எடுப்பதும் அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஐ.எம்.சி.ஆர் (The Indian Council of Medical Research) வழிநடத்தும் ஐ.ஹெச்.எம்.ஐ (India Hypertension Management Initiative) எனும் திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மருத்துவர் வசந்தியிடம் கேட்டோம்.

"உயர் ரத்த அழுத்தத்துக்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றமே. இன்றைய காலகட்டத்தில் உடலுழைப்பு குறைந்து `செடன்டரி லைஃப் ஸ்டைல்' (Sedentary Lifestyle) வந்துவிட்டது. இது நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கும் பரவி வருகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, டென்ஷன், குடிப்பழக்கம் போன்றவையும் சேர்ந்துகொண்டு உயர் ரத்த அழுத்தத்துக்கு வழி வகுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்துக்கு என்று அறிகுறிகள் எதுவும் இல்லை. இது, படிப்படியாகத்தான் அதிகரிக்கும். தொடர்ந்து சோதனை செய்யும்போதே தீவிரம் தெரியவரும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொள்வது நல்லது. உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

உயர் ரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றால் ஏற்படுவது முதல் வகை. சிறுநீரகம், நாளமில்லாச் சுரப்பிகள் (Endocrine System), இதயம் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களால் ஏற்படுவது இரண்டாவது வகை. இதனால் சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுகிறதா, விழித்திரையில் பாதிப்பு உள்ளதா என அறிந்துகொள்வது அவசியம். இதைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஏற்ற மருந்துகள் அளிக்கப்படும். இதனுடன் சேர்த்து வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உடலில் கொழுப்பு, உணவில் உப்பு, மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பது அவசியம். 

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் யோகாசனம், தியானம் செய்வதன்மூலம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இவையனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்தால் உயர் ரத்த அழுத்தத்தால் வரும் நோய் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்" என்கிறார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவோம். உயர் ரத்த அழுத்தத்துக்கு `குட்பை' சொல்வோம்! 



Trending Articles

Sponsored