பிராய்லர் சிக்கனை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா? #HealthAlertசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள்-மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்புஉணர்வு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று  நோய்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள்.  

Sponsored


அந்த வகையில், இன்று (14.5.2018)  இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் துறை சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில்,  அந்தத் துறையின் இயக்குநரும் பேராசிரியருமான அபி ஆஸ்மா, பேராசிரியர்கள் உஷா, தங்கமணி, மணிச்செல்வி, நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினர். 

Sponsored


இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் துறை இயக்குநர் அபிஆஸ்மா, ``அதிகரித்து வரும் புற்றுநோய்க்கு முக்கிய காரணம் நம் பாரம்பர்ய உணவுப்பழக்கத்தை மறந்து, மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான்" என்று கூறினர். மேலும், புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள், அறிகுறிகள், பரிசோதனை, தடுப்பு நடவடிக்கை பற்றியும் விரிவாகப் பேசினார். 

Sponsored


``புற்றுநோய் வந்துவிட்டால், `அவ்வளவுதான்... வாழ்க்கை முடிந்து விட்டது' என்று பலரும் நினைக்கிறார்கள். புற்றுநோயும் குணப்படுத்தக்கூடிய நோய்தான். எனவே, அந்த அச்சத்தை தவிர்க்கவேண்டும். குறிப்பாக, ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கு முதலில் புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வு தேவை. உடலில் நகம், முடியை தவிர எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் ஏற்படலாம். நீண்ட நாள் பசியின்மை, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவை புற்றுநோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரைப்பை, குடல் புற்றுநோய் ஏற்பட்டால், மலத்தில் ரத்தம் கலந்துபோதல், மலச்சிக்கல், ரத்த வாந்தி, ரத்தசோகை, செரிமானப் பிரச்னை போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

தடுக்க, தவிர்க்க...

*புற்றுநோய் எந்த வயதினருக்கும் வரலாம். மரபு வழியில் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், 30 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கண்டிப்பாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* புகையிலை பயன்பாடு, புகை பிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். 

*ஒரு முறை சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பதும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதும் நல்லதல்ல. 

* கிரில் சிக்கன், தந்தூரி போன்ற நீண்ட நேரம் சூடுபடுத்தும் உணவுகளை அதிகம் சேர்க்கக் கூடாது. 

* பிராய்லர் கோழிகள் சீக்கிரம் வளர்வதற்காகப் பயன்படுத்தப்படும் `ரோக்ஸார்ஜோன்' என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, கூடுமானவரை பிராய்லர் சிக்கனைத் தவிர்ப்பது நல்லது. 

*  அதிக ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களைச் சாப்பிட்டாலும் புற்றுநோய் வரலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

*காய்கறிகள், பழங்கள், கீரைகள், நார்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 

* பூரி, வடை, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை விட,  இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*புளிப்புச்சுவையுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த உணவுகள், புற்றுநோயைத் தடுக்க உதவும்." என்றார் அபி ஆஸ்மா.Trending Articles

Sponsored