ஈக்களால் பரவும் நோய்கள்... தப்பிப்பது எப்படி? #HouseFlyAlertSponsored`ஈ...’ ராஜமௌலி இயக்கத்தில், நானி நடிப்பில் பார்ப்பதற்கு வேண்டுமானால் ரசனைக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஈக்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் நமக்கு உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. திறந்தவெளியில், தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுப் பண்டங்களில் ஈக்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். அங்கே அமர்வதற்கு முன்னர் அது சாக்கடையில் உட்கார்ந்திருந்ததா அல்லது அசுத்தமான வேறு ஏதாவது ஓரிடத்திலிருந்து கிளம்பி வந்ததா என்பதை நம்மில் யாருமே யோசித்துப் பார்ப்பதில்லை. ஈக்களால் ஏற்படும் சுகாதாரக்கேடு இப்போது ஆய்வுபூர்வமாகவே நிரூபணமாகியிருக்கிறது. `நம் வீட்டைச் சுற்றும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்களால் சுமார் 600 வகையான பாக்டீரியாக்கள் பரவுகின்றன’ என்கிறது அமெரிக்காவின் பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வு ஒன்று.  

ஈக்களின் உடலின் மேலும், உடலுக்குள்ளும் இருக்கும் நுண்ணுயிரிகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. வீட்டைச் சுற்றியிருக்கும் ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களையும், வெயில் காலத்தில் மட்டுமே வலம்வரும் நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களையும் பரப்புவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. இந்த ஆய்வு, பலரைக் கலவரப்படவும் வைத்திருக்கிறது. ஏனென்றால், ஈக்களால் பரவும் ஆபத்தான கிருமிகளால் பரவும் நோய்கள் என்று முன்னர் சொல்லப்பட்ட எண்ணிக்கையைவிட இது மிக அதிகம்.

Sponsored


ஈக்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம். ``ஈக்கள், அவற்றின் கால்கள், இறக்கைகள், ரோமங்கள் மூலம் ஆபத்தான பாக்டீரியாக்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரப்புகின்றன. கழிவுகள், குப்பைகள், சாக்கடை, அழுகியப் பொருள்கள் என ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரும். அப்படி நாம் உண்ணும் உணவுகள் மீதும் உட்காரும். அப்போது அவற்றின் கால்களில் ஒட்டியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவுகள் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்தக் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காயங்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுதல், நிமோனியா, டைஃபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

Sponsored


ஈக்களால் வரும் நோய்கள் ஏராளம். ஏடிஸ் கொசுவால் டெங்குக் காய்ச்சல் பரவும் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால், ஈக்களால் பரவும் நோய்களைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. ஈக்கள் பரப்பும் சால்மோனெல்லா (Salmonella), ஈ-கோலை (E-coli) போன்ற பாக்டீரியாக்களால் குடல்புண் (Ulcer), புண்கள் மூலம் ரத்தத்தில் விஷம் பரவுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அண்மையில் நடந்த ஆய்வில், 65-க்கும் மேற்பட்ட நோய்கள் ஈக்களால் பரவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஆந்த்ராக்ஸ் (Anthrax), காசநோயும் அடங்கும். மேலும், ஒட்டுண்ணிப் புழுக்களின் (Parasitic Worms) முட்டைகளை நம் உடலில் சேர்க்கின்றன. கதகதப்பான நம் உடலில் அந்த முட்டைகள் பொரிந்து புழுக்களாக வளர்கின்றன. அவை வளர்வதுகூட நமக்குத் தெரியாது. 

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஈக்களால் பொதுவாகப் பரவும் நோய்களுடன் ஒரு பட்டியலையும் சேர்த்திருக்கிறார்கள். ஹெல்மிந்த் தொற்று (Helminth infections) என்ற ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களால் இரைப்பையில் பாதிப்பு ஏற்படலாம். ட்ரகோமா (Trachoma), எபிடமிக் கஞ்சங்க்டிவிட்டிஸ் (Epidemic Conjunctivitis) போன்ற மோசமான கண் பாதிப்புகள் ஏற்படலாம். சருமத்தில், யாஸ் (Yaws), க்யூடேனியஸ் டிப்தீரியா (Cutaneous Diphtheria), மைகோசெஸ் (Mycoses), தொழுநோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

இந்தப் பாதிப்புகளெல்லாம் ஏற்படாமல் தவிர்க்க, உணவுகள், தண்ணீர் ஆகியவற்றில் ஈக்கள் உட்காராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திறந்தவெளியில் உணவுப் பொருள்களை வைக்கக் கூடாது. கழிவுகளிருக்கும் இடம்தான் ஈக்களின் இருப்பிடம். வீட்டுக் கழிவுகளை பைகளில் கட்டி, முறையாக வெளியேற்ற வேண்டும். ஈக்கள் வராமல் தடுக்கும் மருந்துகளைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம். ஈக்கள் வீட்டுக்குள் வர முடியாதபடி கதவுகள், ஜன்னல்களுக்குத் திரையிடுவது நல்லது. வெயில் காலத்தில் வீட்டுக்கு அதிகமாக வரும் ஈக்களை அண்டவிடாமல் தடுத்து, ஆரோக்கியமாக வாழலாம்’’ என்கிறார் சிவராமக்கண்ணன்.Trending Articles

Sponsored