ப்ளஸ் டூ ரிசல்ட் வரப் போகிறது.... இனி பெற்றோரும் மாணவர்களும் செய்யவேண்டியது என்ன?



ப்ளஸ் டூ ரிசல்ட் வரப் போகிறது. நீட் (NEET), ஐஐடி ஜே.ஈ.ஈ (IIT JEE)... எனப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதி முடித்து, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் பீதியை ஏற்றவந்துவிட்டது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு. ப்ளஸ் டூ மார்க் ஷீட்டை எடுத்துக்கொண்டு கல்லூரிகள், பல்கலைக்கழகம், கவுன்சலிங்... என அலைவது ஒரு பக்கம் என்றால், நான்கு நாள்களுக்கு விடாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைபேசி மற்றொரு பக்கம். அத்தை, மாமாவில் ஆரம்பித்து நான்கு வருடங்களுக்கு முன்னர் ஊர்த் திருவிழாவில் பார்த்த யாரோ ஒருவர்... என மார்க்கைக் கேட்டு போன் செய்யும் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மதிப்பெண்களைக் கேட்டு வாழ்த்திவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டால் தொல்லையே இல்லை. `அடுத்து என்னப்பா படிக்கப் போறே... இன்ஜினீயரிங்கா எம்.பி.பி.எஸ்ஸா?’ என ஆரம்பித்து, அவர்கள் `இதுதான் படிக்க வேண்டும்...’ என ஒரு பெரிய கதையே சொல்லிட்டுத்தான் போனை வைப்பார்கள். இவை அனைத்தையும் எப்படி மன உறுதியும் மன அமைதியும் கெடாமல் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் மனநல மருத்துவர் ஸ்வாதிக்கும், மைண்ட் ஃப்ரெஷ் நிறுவனத்தின் இயக்குநர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தியும்.

Sponsored


கீர்த்தன்யா அழுத்தமான குரலில் பேசுகிறார்... ``தேர்வு முடிவுகளை எதிர்நோக்கும் மாணவர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். முதல் வகை, `நாம் நேரத்தை வீணடிக்காமல் இன்னும் கவனமாகப் படித்திருந்தால், இதைவிட அதிகமாக மார்க் எடுத்திருக்கலாமே...’ என வருந்துபவர்கள். இது மிகவும் நல்லது. இவர்கள் இதே தவற்றைத் திரும்பச் செய்யாமல் இருப்பார்கள். இந்தச் சமயத்தில் இவர்களை `நீ நன்றாகப் படித்திருக்கிறாய். உன்னுடைய மதிப்பெண்கள் போதுமானது’ எனப் பெற்றோர்கள் அவர்களைத் தேற்றிவிட்டால், அங்கே அவர்களின் சுயமுன்னேற்றம் தடைப்பட்டுப் போகிறது. இந்தச் சமயங்களில் பெற்றோர், `இது நல்ல மதிப்பெண்கள்தான். இருந்தாலும், உன்னால் இதைவிட நிறைய எடுத்திருக்க முடியும். கல்லூரியில் நன்றாகப் படி’ என ஊக்கப்படுத்த வேண்டும்.

Sponsored


இரண்டாம் வகை, `நம் மார்க்கைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் என்ன சொல்வார்கள், என்ன நினைப்பார்கள்’ என்று சமுதாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இன்று மதிப்பெண்களில் தொடங்குவது, நாளை வேலை, பிறகு கல்யாணம், குழந்தை... என தொடர்ந்துகொண்டே போகும். இவர்கள் நினைவு தெரிந்த நாள் முதல், தங்கள் கடைசிக் காலம் வரை வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்’’ என்கிற கீர்த்தன்யா, நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்? நாம் செய்த தவறுக்காக வருந்தலாமே தவிர, ஒரு நாள்கூட சமுதாயத்தின் வார்த்தைகளை எண்ணி வருந்தக் கூடாது. மற்றவர்களை திருப்திப்படுத்த நினைத்தால், நமக்கு தோல்விதான் வரும்’’ என்கிறார்.

Sponsored


``இன்று வரும் தேர்வு முடிவுகள் மாணவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கும். முதலில் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்து, விரும்பிய படிப்பைப் படிக்கப் போகும் மாணவன். இந்த வகையினருக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மற்ற வகையினர், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமலோ அல்லது பரீட்சையில் தோல்வியுற்றோ இருப்பார்கள். இவர்களின் மேல் அதிகக் கவனம் வைக்க வேண்டும். குறைந்த மதிப்பெண்களால் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தத்தில் தொடங்கி தற்கொலை எண்ணம் வரை பல பிரச்னைகளுக்கு வழிவகை செய்யும். இந்த நேரத்தில் மிகப்பெரிய துணையாக இருக்கவேண்டியது பெற்றோர்களே. பெற்றோர்கள் மற்ற மாணவர்களுடன் இவர்களை ஒப்பிடுவதோ, இவர்களைப் புண்படுத்தும்படி பேசுவதோ கூடாது. இந்தச் சமயத்தில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்தத் துறை கிடைக்காதபோது, அதன் துணைத் துறைகளைப் பற்றி ஆராய்ந்து, தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி படிக்கவைக்க வேண்டும். அவர்களுக்குள்ள பல்வேறு வாய்ப்புகளைப் பற்றி விரிவாகக் கூற வேண்டும். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். பல சமயங்களில் ஏமாற்றங்களும் தோல்விகளும் ஏற்பட வாய்ப்புண்டு, இவற்றையெல்லாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழ வேண்டும்!’’ என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்.

``தற்கொலைக்குப் பல சமயங்களில், மதிப்பெண்களுடன் சேர்ந்து பல காரணங்கள் உள்ளன. மற்றவருடன் ஒப்பிடுதலில் தொடங்கி, ஆண் - பெண் பாகுபாடு, மன அழுத்தம், சிறுசிறு தவறுகளுக்குப் பிள்ளைகளை அவமானப்படுத்துதல்... எனப் பல காரணங்கள் உள்ளன. இது மட்டுமின்றி, மூளையிலுள்ள ப்ரீஃப்ரன்ட்டல் கார்டெக்ஸ் (Prefrontal Cortex) எனும் பகுதிதான் நாம் வாழ்க்கையின் நீண்டகாலப் பயன்களைப் பற்றிச் சிந்திக்க உதவும். இது 20 வயதுக்கு மேல்தான் வளர்ச்சி அடையும். இதனால் வாழ்க்கையை ஆராயும் திறன் குறையும். இதுவும் தற்கொலைக்கு ஒரு காரணம். பெற்றோர்கள் கவனத்துடனும் புரிதலுடனும் இருந்தால், இந்தத் தற்கொலைகளைத் தடுக்கலாம்’’ என்கிறார் கீர்த்தன்யா.

கடந்த வாரத்தில் மட்டும் `நான் விருப்பியதைப் படிக்க என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை; அவர்களின் படிப்பு ஆசைகளை என் மீது திணிக்கிறார்கள்’ என்பது போன்ற 120 புகார்கள் வந்திருப்பதாகக் கூறும் கீர்த்தன்யா, ``மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் பங்கீடு மிகக் குறைவாகவே இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கு என்ன திறமை இருக்கிறது என சைக்கோமெட்ரி டெஸ்ட்டின் (Psychometric Assessment) மூலமாகக் கண்டறிய வேண்டும். சிலருக்கு நல்ல கற்பனைத்திறன் இருக்கும்; சிலர் பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். சிலரால் சொன்ன வேலையை சிறப்பாகச் செய்ய முடியும். இவையனைத்தையும் கவனத்தில் வைத்துக்கொண்டு, நமது ப்ளஸ் மைனஸ்களைத் தெரிந்துகொண்டு ஒரு படிப்பைத் தேர்வுசெய்ய வேண்டும். இதேபோல் பெற்றோர்கள் கடந்த காலத்து நிகழ்வுகளை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, `நீ இந்த துறையைத்தான் படிக்க வேண்டும்’ எனக் குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது. ஒரு நாளும் பணத்துக்காக ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. நமக்கு விருப்பப்பட்ட துறையில் நாம் சாதித்துக் காட்ட வேண்டும். நம் படிப்பை, நம் மதிப்பெண்களைவைத்து முடிவுசெய்யக் கூடாது. அதேபோல் உறவினர்களின் அறிவுரைகளை மொத்தமாக அலட்சியப்படுத்திவிடவும் கூடாது. அதிலிருந்து நாம் நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். என்ன ஆனாலும், கடைசி முடிவு மாணவனுடையதாகதான் இருக்க வேண்டும்’’ என்கிறார்.

``பெற்றோர்களும் குழந்தைகளும் நன்றாகப் பேசி, வேண்டுமெனில் நம் நல விரும்பிகளின் அறிவுரையைக் கேட்டு என்ன படிக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இது வாழ்க்கை எனும் பயணத்தில் ஒரு நிறுத்தம்தான். நாம் இங்கேயே துவண்டு போய்விட்டால் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற முடியாது. இது பரீட்சை முடிவுகள்தான், வாழ்க்கையின் முடிவல்ல. `இதுவும் கடந்து போகும்’ என தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ரிசல்ட்டை எதிர்கொள்ளுங்கள்’’ என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக்.

``இன்றையக் காலகட்டத்தில் கடின உழைப்பு என்பது குறைந்துவிட்டது. கவனச்சிதறல் அதிகமாகிவிட்டது. மாணவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும், முழு கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தால், கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இந்த ரிசல்ட்டுக்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது. சொல்ல வேண்டுமானால், இதற்குப் பின்னர்தான் அவர்களின் வாழ்க்கையின் பெரும் பங்கே இருக்கிறது. அதனால் எதையும் கவலையின்றி ஏற்றுக்கொள்ளுங்கள். தனக்காக வாழ்ந்து மகிழ்ச்சியாக இருங்கள்’’ என்கிறார் கீர்த்தன்யா.

பரீட்சை முடிவுகள் நாம் படிக்கும் படிப்பு, கல்லூரியைத்தான் முடிவு செய்யும். ஆனால், நம் வாழ்க்கை நம் கையில்! படிக்காமலேயே சாதித்த மேதைகள் பலர் உலகில் இருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் நம் லட்சியத்தை அடையத் தடையாக இருக்கக் கூடாது. All the best!



Trending Articles

Sponsored