உணவுக்குச் சுவைகூட்டும் சீஸ்... யாரெல்லாம் சாப்பிடலாம், தவிர்க்கலாம்? #CheeseSponsoredகாலை உணவான டோஸ்ட்டில் ஆரம்பித்து, இரவு சாலட்டில் துருவிப் போடுவதுவரை சீஸ் மயமாகிவிட்டது, இன்றைய வாழ்க்கை. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்கு நாம் பழகிவிட்ட காரணத்தாலேயே பர்கர், பீட்சா, பானிபூரி... அனைத்தும் சீஸால் நிறைந்திருக்கிறது. நாக்கைச் சப்புக்கொட்டவைக்கும் சீஸின் சுவைக்கு இன்று பலரும் அடிமை. அது ஒருபுறமிருக்கட்டும். சீஸில் என்னவெல்லாம் இருக்கின்றன... இது ஆரோக்கியமானதுதானா... யாரெல்லாம் சாப்பிடலாம்... யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? - விவரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம். 

``சீஸ் உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு உற்ற தோழன். இதன் அதிகக் கலோரியும் கொழுப்புச்சத்தும் உடல் எடை கூடுவதற்கு உதவி புரியும். சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் (French Fries) போன்ற வறுத்த உணவுகளைவிட சீஸ் மிகவும் ஆரோக்கியமானது. இதை வளரும் பருவத்தினரும் பெரியவர்களும் அளவாகச் சாப்பிடுவதில் தவறில்லை. பொதுவாகவே, குழந்தைகளுக்குப் பால் சார்ந்த பொருள்களை அளவுடன் கொடுப்பது வழக்கம். அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சீஸையும் அளவாகத்தான் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு ஸ்லைஸ் (Slice) சீஸ் குடுக்கலாம். 

Sponsored


Sponsored


சீஸை, பால் தொடர்பான ஒவ்வாமை (லாக்டோஸ் இன்டாலரன்ஸ் - Lactose Intolerance) உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தவிர்ப்பது நல்லது. இதிலிருக்கும் அதிகப் புரதச்சத்து, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நல்லதல்ல. இதை விடுவதற்கு மனமில்லாத உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் அளவோடு பயன்படுத்தலாம்; புரதச்சத்து குறைந்த சாஃப்ட் சீஸைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் புரதச்சத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  சீஸில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12, ஜிங்க், பாஸ்பரஸ் (Phosphorus), வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தாலும், கவனமாக இல்லாவிட்டால் கலோரி மளமளவென ஏறிவிடும். 

இதிலிருக்கும் ஈரப்பதத்தை அடிப்படையாகக் கொண்டு ஹார்டு சீஸ், சாஃப்ட் சீஸ் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஹார்டு

சீஸைவிட சாஃப்ட் சீஸில் கலோரிகள் குறைவு. உதாரணமாக, ஹார்டு சீஸான செடாரில் (Cheddar), 100 கிராமில் 400 கிலோ கலோரிகள் இருக்கின்றன. ஆனால் சாஃப்ட் சீஸான மோசரேல்லாவில் (Mozzarella), 100 கிராமில் 300 கிலோ கலோரிகளே இருக்கின்றன. இதேபோல் ஹார்டு சீஸைவிட சாஃப்ட் சீஸில் கொழுப்புச்சத்தும் குறைவு. 100 கிராம் செடார் சீஸில் 33 கிராம் கொழுப்புச்சத்து இருக்கிறது. 100 கிராம் மோசரெல்லாவில் 23 கிராம் கொழுப்புச்சத்தே இருக்கிறது. ஆனால், ஹார்டு சீஸை நிறைய நேரம் மென்று தின்னவேண்டியிருப்பதால் நம் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்; வாயிலிருக்கும் ஆசிட் அளவுகளையும் குறைக்கும். இது பல் சொத்தையைத் தடுக்க உதவும். பொதுவாக சாலட் போன்றவற்றில் சாஃப்ட் சீஸையும், பீட்சா போன்றவற்றில் ஹார்டு சீஸையும் பயன்படுத்துகிறோம். ஏனென்றால், பீட்சாவைச் சுடும்போது அதிலிருக்கும் கடினத்தன்மை குறைந்துவிடும். சாப்பிட வசதியாக இருக்கும். சீஸை விட்டுக்கொடுக்காமல் கலோரியையும் கொழுப்பையும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறவர்கள் சாஃப்ட் சீஸைப் பயன்படுத்தலாம்’’ என்றார் கற்பகம். 

சீஸ் நம் மண்ணுக்கும் உடலுக்கும் அந்நிய உணவு. நம் பாரம்பர்ய உணவுடன் சுவைக்காக இவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறில்லை, இருந்தாலும் இதுவே முக்கியமான உணவு என அதற்குப் பழகிவிடக் கூடாது. நம் நாட்டின் தட்பவெப்பநிலையையும், நம் வாழ்க்கை முறையையும் மனதில் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ்வதுதான் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும். Trending Articles

Sponsored