நிபா... அறிகுறிகள், பாதிப்புகள், தற்காப்பு வழிமுறைகள்! #NipahVirus #VikatanInfographicsSponsored2015-ம் ஆண்டு இந்தியாவையே கதிகலங்கவைத்தது பன்றிக்காய்ச்சல்! அதைப்போல இப்போது கேரளாவில் உயிர்ப்பலி வாங்கிக்கொண்டிருக்கிறது நிபா வைரஸ் (Nipah virus). `கடந்த சில நாள்களில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் இந்த நோய்க்குப் பலியாகியிருக்கிறார்கள்’ என்கிறது கோழிக்கோடு சுகாதாரத்துறை. இப்போது கேரளாவையே பீதியில் ஆழ்த்தியிருக்கும் இந்த வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல. 

முதன்முதலில் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம், மலேஷியாவில் இருக்கும் ஈப்போவின் அருகிலிருக்கும் பன்றிப் பண்ணையில்தான் இந்த வைரஸ் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பண்ணையில் வேலைபார்த்த தொழிலாளர்கள்தான் இதனால் முதலில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், அது  நிபா வைரஸ் எனத்  தெரியாமல், இது ஜப்பானீஸ் என்செபாலிடிஸ் (Japanese encephalitis) என்று நினைத்திருந்தார்கள். பிறகு, மலேஷியா முழுக்க பல மனிதர்களும் விலங்குகளும் பாதிக்கப்பட்டு, பலியான  பின்னரே, இது  `நிபா வைரஸ்’ என 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இது, `சுங்கை நிபா’  (Sungai Nipah) என்ற இடத்திலிருந்த ஒருவரின் உடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. இது மலேஷியாவில் மட்டுமின்றி, அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்களாதேஷையும் அதனருகிலிருக்கும் சில இந்தியப் பகுதிகளையும் பாதிக்க ஆரம்பித்தது. இந்தியாவில் 2001-ம் ஆண்டு சிலிகுரியிலும், 2007-ம் ஆண்டு

நாடியாவிலும் நிபா வைரஸால் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இதைப் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதது ஏன்? - வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி,  மருத்துவமனையின் மைக்ரோபயாலஜி துறைத்தலைவர், மருத்துவர் ஜெயலட்சுமியைக் கேட்டோம்... ``நிபா வைரஸ் என்பது ஒரு வகையான சூனாட்டிக் (Zoonotic virus). அதாவது, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய வைரஸ். இது ஓர் உயிர்குடிக்கும் வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில்
50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை இறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நிபாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோவதால், இது ஒரு கொள்ளை நோயாக (Epidemic) மாறாமல் தடுக்கப்படுகிறது. அதாவது, அதிகம் பரவும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. இதுதான் விழிப்பு உணர்வு இல்லாததற்கு முக்கியக் காரணம்.  

Sponsored


பழ  வௌவால்களால் (Pteropus) பரவும் இந்த நிபா வைரஸ் `பாராமிக்ஸோவிரிடே’ (Paramyxoviridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது முதலில் பன்றியிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்றாலும், இது நாய், ஆடு, குதிரை போன்ற சில வளர்ப்புப் பிராணிகளிலும் காணப்படுகிறது. 

Sponsored


விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், மனிதர்களுக்குள்ளும் பரவும். ஆனால், நம்மைத் தாக்கும் இந்த வைரஸால், இதைப் பரப்பும் வௌவாலுக்கு எந்த ஆபத்தும் வராது. இந்த வௌவால்கள் பனம்பழத்தை உணவாகச் சாப்பிடும். இந்த வௌவால் கடித்த பனம்பழத்தையோ பனைமரக் கள்ளையோ குடித்தால் நாமும் இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் இது பரவும். எனவே, விவசாயிகளும் தோட்டப் பணியாளர்களும் மிகுந்த கவனத்துடன் வேலை பார்க்கவேண்டியது அவசியம். பொதுவாக, சாப்பிடும் அனைத்துப் பழங்களையும் நன்றாகக் கழுவிய பின்னரே சாப்பிடுவது நல்லது. இந்த வைரஸ் பாதித்த பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழம், காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது. நிபா வைரஸ், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குத் தொடுதல், தும்மல், இருமல் போன்றவற்றால் பரவும். நிபா வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து, அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் காலம் மூன்று நாள்களிருந்து, சில சமயங்களில் மூன்று வாரங்கள்வரை  இருக்கும்.   

நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்துவலி, தலைச்சுற்றல், வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்னை,  என்சிஃபாலிடிஸால்  (Enciphalitis) ஏற்படும் மனக்குழப்பம், உளறல் போன்றவை  கூறப்படுகின்றன.  இந்த நேரங்களில் பதற்றமடையாமல் நிதானம் காக்கவேண்டியது அவசியம்.  பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் அறிகுறிகள்  சுவாசம் தொடர்பானதாக இருந்தால், துரோட் ஸ்வாப் (Throat Swab) எனும் முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும். இதுவே  என்சிஃபாலிடிஸால்   போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், ரத்தத்தை எலிசா ஆர்.டி-பி.சி.ஆர் (Elisa RT-PCR) முறைப்படியும், வைரல் நியூட்ராலைசேஷன் டெஸ்டின் (Viral neutralisation test) மூலமாகவும் உறுதிசெய்துகொள்ளலாம். கோமா, மூளைக்காய்ச்சல்... எனத் தீவிரமான அறிகுறிகள் தெரிந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்தவர்களும் உடனிருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.  பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய  வேண்டும்.

இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பேரியர் நர்ஸிங் (Barrier Nursing) மற்றும் ஐசோலேஷன் (Isolation)  முறைப்படி சிகிச்சை அளிக்கப்படும். இன்றுவரை நிபா வைரஸுக்கு பிரத்யேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  பொதுவாக ரைபாவாரின் (Ribavarin) மாத்திரைகளும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுமே அளிக்கப்படுகின்றன. உணவு உண்ண முடியாதவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தும், நீர்ச்சத்தும் டிரிப்ஸ் (IV drips) மூலமாக அளிக்கப்படும். சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், முழுதாகத் தங்களை மூடியிருக்கும் சிறப்பு உடைகளையே அணிய வேண்டும். தலைக்கு தொப்பி, கண்களை முழுதாக மூடிய கண்ணாடிகளை அணியவேண்டியது அவசியம். இவர்கள் கைக்கு கையுறையும், காலில் செருப்புகளையும் சேர்த்து மூடும் வகையிலான உறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும். இவர்கள் கட்டாயமாக `n95’ முகமூடியை காற்றுப் புகாத வண்ணம் அணிந்திருக்க வேண்டும். இவர்கள், இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்தவுடன், அனைத்தையும் கழற்றி சுத்தம் செய்வததற்கு அனுப்பிவிட வேண்டும். அதே மருத்துவமனையிலிருக்கும் மற்றவர்கள் தற்காப்புக்காக மூன்று அடுக்குள்ள அறுவைசிகிச்சை முகமூடியை (Triple layered surgical mask) அணிந்துகொள்ளலாம்.

`இந்த வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’  என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேவையில்லாமல் பொது மருத்துவமனைக்கும், வேறு மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டாம். தோட்டங்களில், பழ மரங்களின் அருகில், விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். தொடர் இடைவெளிகளில் கைகளை சோப் அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவவேண்டியது அவசியம். வெளியே செல்பவர்கள்  மூன்று அடுக்குள்ள அறுவைசிகிச்சை முகமூடியை அணிந்துகொள்ளலாம். இந்த வைரஸிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள தடுப்பு மருந்து எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, முடிந்தவரை சுத்தமாக, சுகாதாரமாக இருந்துகொண்டு நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முயல்வோம்’’  என்கிறார் மருத்துவர் ஜெயலஷ்மி.  

கவனமாக இருப்போம்... நிபாவிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்!Trending Articles

Sponsored