கேரளாவில் மேலும் 12 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு! தமிழகத்தில் முன்னேற்பாடுகள் தயார்



கேரளாவை உச்சபட்ச பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது நிபா. தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் 11 பேர் இந்த வைரஸுக்கு பலியாகியிருக்கிறார்கள். நாளுக்குநாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எல்லாப் பகுதிகளிலும் அச்சம் சூழ்ந்திருக்கிறது.  

Sponsored


``நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் குழு, கேரளா சென்று ஆய்வு செய்து வருகிறது. நிபா வைரஸ் பாதித்த கோழிக்கோடு, பெரும்புரா பகுதிகளில் இறந்தவர்களின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்ததோடு, அருகில் கிணறுகளில் இருந்த சில வௌவால்களைப் பிடித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சுகாதாரத்துறையின் உயர்மட்டக் குழுவும் முகாமிட்டு, நிபா வைரஸ் பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் கேரளாவில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது. 

Sponsored


Sponsored


கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிபா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் வகையில், அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 18 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பியதில், அதில் 12 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதிசெய்துள்ளார். 

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ், வௌவால்களின் மூலமாகப் பன்றி, ஆடு, கோழிகளுக்குப் பரவும் என்பதால் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடைகளை நிபா வைரஸ் தாக்கியிருக்கிறதா என்பதை அறிய கால்நடை மருத்துவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனைகளுக்குப் பிறகே, வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. 

``வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவும் என்று செய்தி பரவியதால் மக்கள் வௌவால்களைக் கண்டாலே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. வௌவால்களில் இரண்டாயிரம் வகைகள் உண்டு. வீடுகள், கோயில்களில் இருக்கும் வௌவால்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வனங்களில் வசிக்கும் பழந்தின்னி வௌவால்களால் மட்டுமே நிபா வைரஸ் பரவும். அதனால், சாதாரண வௌவால்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால், பழங்கள் வாங்கும்போது, அதில் பறவைகள், விலங்குகள் கடித்திருந்தால் கண்டிப்பாகத் தவிர்த்துவிட வேண்டும்.” என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 



Trending Articles

Sponsored