ரத்தச்சோகையைப் போக்க, அதிக ரத்தம் சுரக்க அவசியம் சாப்பிடவேண்டிய உணவுகள்! #DataStory



Sponsored



`உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே...’ என்பது திருமூலர் வாக்கு. நம் உடல் உயிர்ப்போடு இருக்க ரத்தம் அவசியம். ரத்தம்தான், நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை உடல் உறுப்புகளுக்குக் கொண்டு சேர்க்கிறது. அதைச் செய்வது சிவப்பு ரத்த அணுக்கள். அதேபோல, நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காப்பது வெள்ளை ரத்த அணுக்கள். இவை இரண்டும் மிக முக்கியமானவை. தேவையைவிடக் குறைவாக சிவப்பு ரத்த அணுக்கள் இருந்தால், நமக்கு ‘ரத்தச்சோகை’ பாதிப்பு ஏற்படும். அதனால் உடல் பலவீனம், தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், தலைவலி ஆகியவை ஏற்படும். எனவே, ரத்தச்சோகையைப் போக்க, நம் அன்றாட உணவு சரிவிகிதமாக இருக்கவேண்டியது அவசியம்.

ரத்தச்சோகையைப் போக்கவும் உடலில் ரத்தத்தை அதிகம் சுரக்கவும் எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்... அப்படிச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி...  

Sponsored


``நம் உடம்பில் 70 சதவிகித இரும்புச்சத்து 'ஹீமோகுளோபினில்'தான் (haemoglobin ) இருக்கிறது. இதன் அளவை அதிகரிக்க உடலுக்கு இரும்புச்சத்து அவசியம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தச்சோகையைத் தவிர்க்கலாம். வயதுக்கேற்ப ஆணுக்கும் பெண்ணுக்கும் இரும்புச்சத்தின் அளவு மாறுபடும். எனவே, அவரவருக்கு ஏற்றபடி உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Sponsored


உடலுக்குக் காய்கறிகள் மூலமாகச் சேரும் இரும்புச்சத்தைவிட, இறைச்சியால் கிடைக்கும் அளவு அதிகம். எனவே, உணவில் சிக்கன், மட்டன், மீன், மட்டி (Shell fish)யைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அசைவம் சாப்பிடாதவர்கள் பீன்ஸ், சோயா, ப்ரூன்ஸ் (Prunes), கருணைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளலாம். காப்பரும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவும். காப்பர், நம் உடல் இரும்புச்சத்தை உணவிலிருந்து எடுத்துக்கொள்ளவும் உதவும். நம் உடலில் ஒரு நாளைக்கு 900 மைக்ரோகிராம் காப்பர் இருந்தால், ரத்தக் குறைபாடு தொடர்பான அபாயங்களைக் குறைக்கலாம். முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கல்லீரல் இறைச்சி, நத்தை, சிப்பி மீன் ஆகியவற்றில் காப்பர் நிறைந்திருக்கிறது.  

உணவகங்களில் மீன் வறுவல் அல்லது சிக்கனுடன் ஒரு சிலைஸ் எலுமிச்சைப் பழத்தை வைப்பார்கள். இது சுவைக்காக வைக்கப்படுவது என்றாலும், இதன் பின்னே மருத்துவக் காரணமும் இருக்கிறது. உடலில் இரும்புச்சத்து சேர்வதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். எலுமிச்சையில் இது நிறைவாக இருக்கிறது. ‘வைட்டமின் சி’ குறைந்தால் நமக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 90 மில்லிகிராமும் பெண்களுக்கு 75 மில்லிகிராமும் வைட்டமின் சி தேவைப்படுகிறது. இதன் அளவை அதிகரிக்க உணவில் திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, பசலைக்கீரை ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஃபோலேட் ( Folate)  என்பது ஒரு வகையான ‘வைட்டமின் பி’. இதை `வைட்டமின் பி 9’ என்றும் குறிப்பிடுவார்கள். இது வெள்ளை, சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுவது. பொதுவாக, ஒரு நாளைக்கு நடுத்தர வயதினருக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலேட் தேவைப்படும். ஆனால், கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டும் 600 மைக்ரோகிராம் தேவைப்படும். எனவே, அவர்கள் சில உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரைகள், உலர்ந்த பீன்ஸ், கல்லீரல் இறைச்சி, முட்டை, ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதால் ஃபோலிக் ஆசிட் குறைபாட்டைத் தவிர்க்கலாம். பிரெட், அரிசி ஆகியவற்றிலும் ஃபோலேட் இருக்கிறது.

நமக்கு ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது. உடலில் தேவையான அளவுக்கு இது இல்லையென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி தடைப்படும். உணவிலிருந்து வைட்டமின் பி12-ஐ உடலால் எடுத்துக்கொள்ள முடியாதபோது 'பெரினிஷியஸ் அனீமியா' (Perinicious Anemia) எனும் ரத்தச்சோகைக் குறைபாடு ஏற்படும். இதற்கு வயிற்றில் போதுமான அளவு ஆசிட் இல்லாததும், 'இன்டரின்சிக் ஃபேக்டர்' (Intrinsic Factor) என்ற புரதச்சத்து குறைபாடுமே காரணம். வைட்டமின் பி 12 குறைவாக இருந்தால் மீன், சிக்கன், பால் பொருள்கள், முட்டை ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தோட்டங்களிலும், தெருவோரங்களிலும் காணப்படும் குப்பைமேனி உடலில் ரத்த அளவை அதிகரிக்க உதவும். ஓர் ஆய்வில் ‘குப்பைமேனிச் சாறு ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, தசைகளுக்கும் உடல் உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் சென்று சேர்வதை மேம்படுத்துகிறது’ எனத் தெரியவந்திருக்கிறது. அதற்கு இரும்புச்சத்தும் வைட்டமின் சியும்தான் காரணம். குப்பைமேனி இலையைக் உலரவைத்து தேநீர் வைத்துக் குடிக்கலாம். குப்பைமேனி, கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.  கர்ப்பிணிகள் இந்த மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும்.

நம் உடலில் இரும்புச்சத்தைச் சேரவிடாமல் தடுக்கும் சில வேதிப்பொருள்கள் இருக்கின்றன. காபியில் இருக்கும் `கஃபைன்' (Caffeine) 39 சதவிகித இரும்புச்சத்து சேர்வதைத் தடுக்கும். அதேபோல் தேநீரில் இருக்கும் 'டான்னின்' (Tannin) 64 சதவிகித இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும். நம்மில் பலர் காலை உணவுடன் காபி, பால் ஆகியவற்றை குடிப்பதைப் பழக்கமாகவே வைத்திருக்கிறோம். இவற்றுக்குப் பதிலாக, ஆரஞ்சு சாறு குடிக்கலாம்; இது, உடலில் இரும்புச்சத்து சேர்வதை அதிகரிக்கும். இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்... உடலில் ஏற்பட்டிருக்கும் ரத்தக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம்" என்கிறார் ஷைனி.

‘உணவே மருந்து’ என்றார்கள் முன்னோர்கள். அது நூறு சதவிகிதம் சரிதானே!



Trending Articles

Sponsored