புகைப்பழக்கத்தை விட்டால் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் கிடைக்கும்! #WorldNoTobaccoDay #DataStory



`புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார்' என்கிறது உலக சுகாதார அமைப்பு.  

Sponsored


‘உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் அறிக்கை.  புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1987-ம் ஆண்டு மே 31-ம் தேதி ‘உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்’ ஆக அறிவிக்கப்பட்டது. அந்த நாளில், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

Sponsored


உலகம் முழுவதும் 110 கோடி பேர்  புகைப்பிடிக்கின்றனர். இதில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும்,  உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ  9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள். சாதாரணமாக 51 லட்சம் ஆண்களும், 20 லட்சம் பெண்களும் புகைக்கு அடிமையாகி, உயிரிழக்கிறார்கள். 

Sponsored


இந்திய மக்கள் தொகையில் 17.8 சதவிகிதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இதில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 6 லட்சத்து 25 ஆயிரம் பேரும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரம் பேரும் புகையிலையைத் தினமும் பயன்படுத்துகின்றனர். 

தமிழகத்தில், 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில்,  5.2 சதவிகிதம் பேர் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இதில், ஆண்கள் 4.3 சதவிகிதம். பெண்கள் 0.9 சதவிகிதம்.  அதிகபட்சமாக,  புதுக்கோட்டையில் 19.9 சதவிகிதம் பேரும், கடலூரில் 12.1 சதவிகிதம் பேரும் புகையிலை பயன்படுத்துகிறார்கள். குறைந்தபட்சமாக தஞ்சாவூரில் 1.2  சதவிகிதம் பேர்  புகைப்பிடிக்கின்றனர். சென்னையில்,  புகைப்பழக்கத்துக்கு ஆளானோர் 6.6 சதவிகிதம் பேர். பீடி, சிகரெட், சுருட்டு தவிர்த்து, இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2.1 சதவிகிதமாக உள்ளது. இதில், பெண்கள் 0.8 சதவிகிதம் பேர். 

புகையிலையில் கலந்துள்ள நிகோடின் பற்றி பலரும் அறிவோம். ஆனால், கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக் , ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 4,000-க்கும் அதிகமான ரசாயனங்கள் அதில் கலந்துள்ளன. அதில், 69 வகை ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. 

ஒருவர் புகைப்பிடிக்கும்போது, உள்ளே இழுக்கும் புகையைவிட வெளியே விடும் புகையே அதிகம். இரண்டிலுமே நிகோடின் (nicotine), காட்டினின் (Cotinine), தியோசயனேட் (Thiocyanate), பென்சீன்(benzine) போன்ற நச்சுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. இவையும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். உங்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். 

‘புகைப்பிடிப்பதால்,  கண், மூளை, முடி, மூக்கு, பல், வாய், தொண்டை, காது, நுரையீரல், இதயம், மார்பு, வயிறு, கல்லீரல், சிறுநீர்ப்பை, கைகள், தோல், எலும்புகள், முழங்கால், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரே நேரத்தில் 30 மி.கி. முதல் 60 மி.கி. அளவிலான நிகோடின் ஒருவருடைய உடலுக்குள் சென்றால், அவருக்கு மரணம் கூட நேரலாம். ஒரு சிகரெட்டில் 12 மி.கி.நிகோடின் உள்ளது.  

தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஐந்து ஆண்களில், ஒருவர் மனதளவில் பாதிக்கப்படுகிறார். சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 பெண்களில் ஏழு பேர் பல்வேறு விதமான நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஹெச்.ஐ.வி, காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிடப் புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். 

``புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, 1950-ம் ஆண்டிலிருந்தே மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மக்களுக்கு விளக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதனுடைய விளைவுகள் பற்றி தெரிந்தாலும், புகைப்பதை பெரும்பாலானோர் கைவிடுவதில்லை. அதனால்தான்,  பெரும்பாலான உயிர்கள் பறிபோகின்றன,  புற்றுநோய்க்கு முதல் காரணமாக இருப்பது  புகையிலைதான். மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் இரண்டாம் இடம் வகிக்கிறது புகையிலைப் பயன்பாடு.  

புகைக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, அதிலுள்ள நிகோடின் உள்ளிட்ட ரசாயனங்கள் மூளைக்குச் செல்லும். அதனால், சாந்தமாகவும் புத்திக் கூர்மையுடனும் இருப்பதுபோல, நமக்குத் தோன்றும். நாளாக, நாளாக இயல்பாக இருப்பதற்கே புகைக்க வேண்டிய அபாயம் உருவாகும். 

தொடக்கத்தில், நாளொன்றுக்கு ஒரு சிகரெட் பயன்படுத்தும் ஒருவர்  நாளடைவில் பத்து சிகரெட் புகைக்கத் தொடங்கிவிடுவார்.  சிகரெட், புகையிலை, பான், குட்கா உள்ளிட்ட அனைத்துப் போதைப்பழக்கங்களுக்கும் வாய்தான் பிரதானம். இதனால்தான் புகையிலைப் பயன்படுத்துவோரில் 90 சதவிகிதம் பேருக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுகிறது. 

புகையிலை மெல்லும்போது, சிகரெட் புகைப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக நிகோடின் நம் உடலில் கலக்கிறது. இதனால், கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் உள்ளிட்ட இடங்களில் வெள்ளைத்திட்டுக்கள் உருவாகி, நாளடைவில் புற்றுநோயாக உருவெடுக்கும். அதுமட்டுமின்றி, சொரியாஸிஸ், கண்புரை நோய், தோல் சுருக்கம், காது கேளாமை, பற்சிதைவு, சுவாசக்குழாய் அடைப்பு, எலும்புப்புரை நோய், இதயநோய், வயிற்றுப்புண்கள், விரல்கள் நிறமாற்றம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு, பியூஜெர்ஸின் நோய் உள்ளிட்டவை ஏற்படும். புகைப்பவருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துபோய், விரைவாக அவர் மரணத்தைக் கூட தழுவலாம். 

புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, ‘கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்’ என்பதுதான். ஒரு நிமிடத்துக்குள் ஆரம்பித்த புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட வைராக்கியம் தேவை. அதுதான் சிகரெட்டிலிருந்து விடுபட முதல்படி. சிகரெட்டினால் சீரழிந்திருக்கும் நம்முடைய உடலை யோகா, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் மீட்டு எடுக்கலாம். பொருளாதாரரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்கப் புகைப்பதை கைவிடுவதே சிறந்த வழி. 

புகைக்கும் பழக்கத்தை நிறுத்திய இருபதாவது நிமிடத்திலிருந்து நம் உடல் சுத்தமாக ஆரம்பிக்கும். ரத்த ஓட்டமும் இதயமும் சீராக இயங்கத் தொடங்கும். ஒன்பது மாதங்களில் இருமல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் குணமாகும். ஐந்து வருடத்தில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் நீங்கும். 15 வருடங்களில் பழைய ஆரோக்கியம் மீண்டுவிடும்.  

30 வயதில் புகைப்பழக்கத்தை கைவிடும் ஒருவருக்கு 10 ஆண்டுகளும்  50 வயதில் புகைப்பழக்கத்தைக் கைவிடும் ஒருவருக்கு  6 ஆண்டுகளும் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

புகையிலையை நிறுத்த ஆரம்பித்த சில நாள்களில் கோபம், எரிச்சல் போன்றவை அதிகமாக ஏற்படும். இதைத் தவிர்க்க, தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது போன்றவை உதவும். ஏலக்காய், கிராம்புக்கு சிகரெட் குடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்பதால், அதை மெல்லலாம். கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. சிகரெட்டிலிருந்து விடுபட பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளது. அதற்குரிய மருத்துவர்களை கலந்தாலோசித்து, தேவைக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் சிகரெட் எனும் அரக்கனிடமிருந்து எளிதாக விடுபடலாம்” என்கிறார், பல் மற்றும் முகச்சீரமைப்பு   மருத்துவர் ஜெ. கண்ணபெருமான். 

‘தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில்,  'பெரியவர்களுக்கு மட்டுமே பீடி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும்’ என்ற சட்டம் இருக்கிறது. வெறும் சட்டமாக மட்டுமில்லாமல் தீவிரமாக கடைபிடிக்கவும் செய்கிறார்கள்.  இந்தியாவில் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், சட்டத்தை யாரும் பின்பற்றுவதில்லை. ஆண்-பெண் வேறுபாடின்றி சிறு வயதினர் கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். 

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும், பொதுநலத்தொண்டு நிறுவனங்களும் பல வடிவங்களில் விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டாலும், விதவிதமான போதைப்பொருள்கள் சந்தையில் அறிமுகமாகி, இளையோரின் வாழ்வைச் சீரழிக்கவே செய்கின்றன. சிகரெட் மட்டுமல்ல; எல்லாப் போதைப்பொருள்களுக்குமே மனிதகுலத்துக்கு எதிரானவையே. அதை உணர்ந்து,  பாதிக்கப்பட்டவர்களை மீட்க எல்லோரும் கரம் கோக்க வேண்டும். அப்போது சாத்தியம், புகையிலை இல்லாத, போதைப்பழக்கமில்லாத பெருவாழ்வு!



Trending Articles

Sponsored