பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் பிறவி இதயக் குறைபாடு! கண்டறிவது, காப்பாற்றுவது எப்படி?



Sponsored



ருத்துவமனை... மனிதர்களின் வேதனைகள் தீர உதவுகிறதோ இல்லையோ, அவற்றுக்குச் சாட்சியாக நின்றுகொண்டிருப்பது. எளிய காய்ச்சல் முதல் தீவிரமடைந்த புற்றுநோய்வரை என்னென்னவோ உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவமனைக்குச் செல்பவர்கள் ஏராளம். அந்த நோய்களில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது இதயநோய். உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒரு புள்ளிவிவரம் இப்படிக் குறிப்பிடுகிறது... `இதயநோய்களாலும் பக்கவாதத்தாலும் 2016-ம் ஆண்டு உலக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 52 லட்சம் பேர்.’ இதய நோய் ஏற்படுவதற்கு வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவு பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன்... என என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெரியவர்களுக்கு இது சரி... குழந்தைகளுக்கு? பல குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடு பிரச்னையோடுதான் பிறக்கிறார்கள் என்பது நம்மைக் கலங்கவைக்கும் செய்தி.  

பத்துச் சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாடால்’ (Congenital Heart Diseases) பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் `தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு மையம்’ (National Family Health Survey).

Sponsored


`இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.

Sponsored


டெல்லியில் நேற்று நடந்த குழந்தைகள் இதய நோய் விழிப்புஉணர்வுக் கூட்டத்தில் பேசிய மத்தியச் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோஜ் ஜலானி, ``உடல் பரிசோதனை , வயிற்றிலிருக்கும் குழந்தையின் கருவை ஸ்கேன் (Fetal Scan) செய்வது, இந்த இரண்டு சோதனைகள் மூலம் பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கும் 72 சதவிகிதக் குழந்தைகளை மட்டுமே அடையாளம் காண முடிகிறது. `ஆக்ஸிமெட்ரி சோதனை’ (Oximetry Screening) என்கிற குழந்தைகளின் இதயத் துடிப்பு மூலம் இதய நோயைக் கண்டறியும் சோதனையைச் செய்தால், இந்த நோயால் பாதிக்கப்படும் 92 சதவிகிதக் குழந்தைகளை அடையாளம் கண்டுகொண்டு சிகிச்சையளிக்கலாம். சுமார் 52,000 குழந்தைகளைக் காப்பாற்றிவிடலாம். இதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற `ஹார்ட் கேர் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ (Heart Care Foundation of India) அமைப்பின் தலைவர், மருத்துவர் கே.கே.அகர்வால், ``பெரும்பாலும்,  `தீவிர பிறவி இதயக் குறைபாட்டால்’ (CCHD) பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மருத்துவமனைகளில் இருக்கும்வரை கண்டறியப்படுவதில்லை. அதன் பிறகு கண்டறியப்பட்டால், மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து, சிகிச்சையளிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். ஆக்ஸிமெட்ரி சோதனை மிகவும் எளிதான, இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் செய்யப்படும், அதிகச் செலவில்லாத சோதனை. இந்தச் சோதனையை எல்லாக் குழந்தைகளுக்கும் செய்வதற்குப் போதிய மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இங்கு இல்லை. இதனாலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்’’ என்கிறார் கே.கே.அகர்வால்.

பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர பிறவி இதயக் குறைபாடு குறித்து இதய நோய் நிபுணர் ராஜேஷ் குமாரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறக்கும் குழந்தைகளுக்கு ஆக்ஸிமெட்ரி சோதனையைச் செய்யாத எந்த மருத்துவமனையும் இருக்காது. அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலேயே இந்தச் சோதனையைச் செய்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இந்தச் சோதனை எப்படி நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆக்ஸிமெட்ரி சோதனையில் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் செல்கிறது என்பதை அறிவதன் மூலம், நுரையீரல், இதயக் கோளாறுகளைக் கண்டறிந்துவிடலாம். குழந்தைகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு 90 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தால் இதயம், நுரையீரலில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் இதயத்தில்தான் குறைபாடு இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம். 

பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

* மரபணுக் குறைபாடு
* பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
* கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
* கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
* ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது. 

பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?

* சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
* ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
* கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
* பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று

குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும். 

தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம். இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் ராஜேஷ் குமார்.



Trending Articles

Sponsored