லன்ச் பாக்ஸில் கட்டும் தயிர் சாதம் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? #CurdRice #VarietyRice



Sponsored



டிபன் ஐயிட்டங்களில் உப்புமா போல, வெரைட்டி ரைஸ் வகைகளில் தயிர் சாதம் பலராலும் அன்லைக் செய்து ஒதுக்கப்படும் உணவு. ஆனால், குழந்தைகளின் எலும்பைப் பலப்படுத்தும் கால்சியம் நிறைந்தது; அவசரத்துக்கு மதிய உணவாக பேக் செய்ய அம்மாக்களுக்குக் கைக்கொடுப்பது, வெயில் காலத்தில் வயிற்றுக்கு இதமானது என இந்தத் தயிர் சாதத்துக்கு சில பிளஸ்கள் உள்ளன. அதனால், குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் ருசியாகத் தயிர் சாதத்தைத் தயாரித்து அளிக்கலாம். பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறது போல், வெறும் சாதத்தில் தயிரைக் கலப்பது மட்டுமல்ல தயிர் சாதம். லன்ச் பாக்ஸில் வைக்க நினைக்கும் தயிர் சாதத்துக்கு நேக்கான உழைப்பு தேவைப்படும். அதை எப்படிச் செய்யலாம் என்பதைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர், லஷ்மி சீனிவாசன். 

* பெரும் பொங்கல் அன்றைக்குப் புது அரிசியில் பொங்கல் வைப்போம் இல்லையா? தயிர் சாதத்தையும் அப்படி புது அரிசியில் செய்தால், சாதம் குழைந்து வரும். இதில், தயிர் கலந்துகொடுத்தால், குழந்தைகள் வாயில் வைத்ததும் வழுக்கிக்கொண்டு தொண்டைக்குள் அமிர்தமாக இறங்கும்.

Sponsored


* தயிர் சாதம் செய்ய, ஒரு பங்கு அரிசிக்கு 3 பங்கு தண்ணீர் விடவேண்டும். 

Sponsored


     * அரிசியைக் குக்கரில் வேகவைத்தாலும் சரி, வேகவைத்து கஞ்சியை வடித்தாலும் சரி, சாதத்தை ஆறவைத்து அன்னக்கரண்டியால் கீழ் மேலாக புரட்டிப் புரட்டி மசிக்க வேண்டும். கைகளால் பிசைந்தால் இன்னும் கூடுதல் சுவை. உடனே சாப்பிட வேண்டும் என்றால், சாதத்துடன் கடைந்த தயிர், தேவையான உப்புச் சேர்த்து சாப்பிடலாம். சின்னக் குழந்தைகளுக்குத் தருகிறீர்கள் என்றால், சுத்தம் செய்யப்பட்ட விதையில்லா பச்சை திராட்சை, மாதுளை முத்துக்கள் கலந்து தரலாம். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்குத் தருவதாக இருந்தால், புளிப்பில்லாத மாங்காயைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி தயிர் சாதத்துடன் கலந்து தரலாம்.  பெரியவர்களுக்கு பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் அல்லது மோர் மிளகாயுடன் பெருங்காயத்தூள், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். 

     * வாயுத்தொல்லை இருப்பவர்கள், உலையில் சிறு துண்டு பெருங்காயத்தைப் போட்டு, சாதத்துடன் சேர்த்து வேகவிட்டு தயிருடன் கலந்துகொள்ளலாம்.

     * வளரும் குழந்தைகளுக்கும் வயிற்றில் புண் இருப்பவர்களுக்கும், ஒரு கரண்டி தயிர் சாதத்தில் அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அளிக்கலாம்.

* குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து அனுப்புவதாக இருந்தால், குழைய வேகவைத்த சாதத்தை நன்கு ஆறவிடுங்கள். பாலைக் காய்ச்சி, அது பொங்கும்போது அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தை மெல்ல ஒரு சுழற்று சுழற்றினால் பொங்கிய பால் அப்படியே அடங்கும். இதேபோல, பாலை மூன்று முறை பொங்கப் பொங்க காய்ச்சி ஆறவிட வேண்டும். சாதம் மற்றும் பால் ஆறியதும், சாதத்தைக் கரண்டியால் மசியுங்கள். இரண்டு கரண்டி தயிர் சாதம் செய்கிறீர்கள் என்றால், மசித்த சாதத்துடன் காய்ச்சி ஆறவைத்த 150 மில்லி பால், ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிர், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், தேவையான உப்பு சேர்க்கவும். எவர்சில்வர் டப்பாவில் கட்டி அனுப்புங்கள். மதியம் சாப்பிட லன்ச் பாக்ஸைத் திறந்தால், தளதளப்பாக நல்ல வாசனையுடன் பொடிசுகளுக்கு தயிர் சாதம் தயாராக இருக்கும்.  

*  மேலே சொன்ன முறையில் தயிர் சாதம் கலந்து, டப்பர்வேரில் கட்டுகிறீர்கள் என்றால், அது பால் சாதமாகவும் இல்லாமல் தயிர் சாதமாகவும் இல்லாமல் நீங்கள் எந்த நிலையில் சாதம் வைக்கிறீர்களோ அப்படியேதான் இருக்கும். இன்றைக்கு நிறைய பள்ளிக்கூடங்கள் ஏ.சி. வசதிகொண்டது என்பதால், தயிர் சாதத்துக்கான எந்த அடையாளமும் இல்லாமல் சாதம் அப்படியே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் பாலையும் தயிரையும் சமஅளவு சேர்க்க வேண்டும். 

* சில குழந்தைகளுக்கு தயிர் சாதத்தில் இனிப்பு கலந்திருந்தால் ரொம்ப பிடிக்கும். அவர்களுக்குச் சாதத்துடன் சிறிதளவு பொடித்த பனங்கற்கண்டு சேர்க்கலாம்.

இப்படித் தயார்செய்தால், 'வி லவ் தயிர் சாதம்' என்பார்கள் குழந்தைகள்.



Trending Articles

Sponsored