உடலை வருத்தும் கீமோதெரபி, ரேடியேஷன் தேவையில்லை... புற்றுநோய்க்குப் புதிய சிகிச்சை.. இம்யூனோ தெரபி! #Immunotherapy



மெரிக்காவின் ஃப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த ஜூடி பெர்கின்ஸை (Judy Perkins) மருத்துவ உலகே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. `இனி குணப்படுத்த முடியாது' என்று மரணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். ஆனால், அந்த மரணத்தை வென்று உலகின் முன் நம்பிக்கை நட்சத்திரமாக நிற்கிறார் ஜூடி. 

Sponsored


ஜூடிக்கு வயது 52. 2003-ல்  ஜூடியின் நுரையீரலில் சிறிய கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். ஆய்வில், அவை புற்றுநோய்க் கட்டிகள் என்று தெரியவந்தது. படிப்படியாக அந்தப் புற்றுக்நோய்க் கட்டிகள் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவியது. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நோயின் தன்மை சற்று தணிந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் புற்றுநோய் வேலையைக் காட்டியது. உடனடியாக,  மேரிலாண்டில் உள்ள தேசியச் சுகாதார நிறுவனத்தில் (National Institutes of Health, Maryland) அனுமதிக்கப்பட்டார். உடல் முழுக்கப் புற்றுநோய் பரவியிருந்த நிலையில், `ஜூடி மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்' என்று அங்கிருந்த மருத்துவர்கள் நாள் குறித்தனர். 

Sponsored


ஆனால், ரோசன்பெர்க் என்ற மருத்துவர் நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியும் ஜூடியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று போராடினார். இதுவரை செய்திராத ஒரு புதிய முயற்சியைச் செய்தார். நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் வெள்ளை அணுக்களை ஆய்வகத்தில் வைத்து பல்லாயிரம் கோடியாக அதிகரிக்கச் செய்தார். அதை ஊசியின் மூலம் ஜூடியின் உடலுக்குள் செலுத்தினார். அடுத்த சில மாதங்களில், ஜூடியின் உடலில் புற்றுநோயின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு வருடத்தில், ஜூடி புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார். 

Sponsored


மருத்துவ உலகின் மிகப்பெரும் மறுமலர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சிகிச்சைக்குப் பெயர் இம்யூனோ தெரபி (Immunotherapy). நோயாளியின் உடலிலிருந்து, எதிர்ப்புச் சக்தியை வெளிப்படுத்தும் திசுக்களை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து அவற்றைப் பன்மடங்காகப் பெருக்கி மீண்டும் அவர்களது உடலுக்குள் செலுத்தி, புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவார்கள். இந்தச் சிகிச்சை, அமெரிக்காவில் மட்டும்தான் இப்போதைக்கு இருக்கிறது. இந்தியாவுக்கெல்லாம் இன்னமும் சாத்தியமாகவில்லை. 

`இம்யூனோ தெரபி' சிகிச்சை பற்றி விரிவாக விளக்குகிறார் புற்றுநோயியல் மருத்துவர் சரவணன் பெரியசாமி.

``மருத்துவ உலகத்துக்கு `இம்யூனோ தெரபி' புதிதில்லை. பல வருடங்களாகவே ஆய்வு நிலையில் இருக்கிறது. இதன் அடிப்படை, நம் உடலிலுள்ள ஆன்டிஜென் (Antigen) செயல்பாடுகள்தாம். உடலுக்கு தொற்றுப்பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா நுண்ணுயிர்களை அதுதான் தனியே அடையாளப்படுத்திக்காட்டுகிறது. இதைத்தொடர்ந்து, உடலில் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி, இந்த வைரஸ்களை அழித்துவிடும். 

புற்றுநோயைப் பொறுத்தவரையில், ஆன்டிஜென்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யும். ஆனால், அந்த செல்களை அழிக்கும் அளவுக்கு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது. இப்படியான சூழலில், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.   

வெளிநாடுகளிலும் கூட இவை ஆராய்ச்சி அளவில்தான் இருக்கின்றன. எந்தவகை புற்றுநோய், என்ன மாதிரியான திசுக்களை உற்பத்தி செய்யும் என்பது மட்டும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் திசுக்களை அழிக்க, எவ்வளவு வெள்ளை அணுக்கள்

தேவைப்படும் என்பதை மிகச்சரியாக இன்னும் கணக்கிட முடியவில்லை. அப்படியே கணக்கிட்டாலும், அவற்றை உற்பத்தி செய்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே, இம்யூனோ தெரபி எல்லோருக்கும் பயனளிக்கும் என்று சொல்ல முடியாது. 

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்கன் சொஸைட்டி ஆப் கேன்சர்  (American Society of Cancer) சார்பில், அஸ்கோ (ASCO) என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொருவரும், புற்றுநோய் தொடர்பாகக் கண்டறியப்படும் தங்களின் புதுப்புது முயற்சிகளை அதில் பதிவுசெய்வார்கள். அப்படித்தான் ஜூடியின் சிகிச்சையும் பதிவுசெய்யப்பட்டது. இம்யூனோ தெரபியிலுள்ள மிகப்பெரிய குறை, உற்பத்திசெய்யப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்திக்கான திசுக்களை, சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும், சரியாகச் செயல்படாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஜூடிக்கு, மேல் சொன்ன இரண்டு பிரச்னைகளும் ஏற்படவில்லை. இவரை அடிப்படையாக வைத்து, மற்றவர்களுக்கும் இந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாமா? என்றால், இல்லை என்பதே பதில். வரும் ஆண்டுகளில் ஆராய்ச்சிகள் முழுமையடைந்த பின்னர், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வரலாம். அப்படி நடந்தால், அது மருத்துவ உலகில் ஏற்படும் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும். 

தற்போது, புற்றுநோய்க்கு கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தும் மிகவும் கடுமையானவை. ஆனால், இம்யூனோ தெரபி மிகவும் எளிமையானது. எனவே, இந்த தெரபிதான் வருங்காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையாக இருக்கும். அதற்கு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம் என்பதால், நம்பிக்கையோடு காத்திருப்பதுதான் ஒரே வழி" என்கிறார் சரவணன் பெரியசாமி



Trending Articles

Sponsored