கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் ஒதுக்குபவர்கள், அதைச் சாப்பிட வைக்க ட்ரிக்ஸ்!



சம்பவம் 1: டே- கேரிலிருந்து மகனை அழைத்துவரச் சென்ற அம்மா காவ்யாவிடம், ''நீங்க இன்னிக்கு ஏன்மா சாப்பாட்டுல கறிவேப்பிலையைப் போட்டீங்க? நான் லெமன் பூவா சாப்பிடவே இல்லை தெரியுமா?'' என மழலை மொழியில் சண்டைப் போட்டான் மகன்.

சம்பவம் 2: வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும் பானுவிடம், ``உன் பிள்ளைக்குத்தான் வெங்காயம், தக்காளின்னாலே பிடிக்காதே... அப்புறம் எதுக்கு தக்காளி சாதம் கட்டி அனுப்பினே? பாரு, டிபன்பாக்ஸ்ல கட்டி அனுப்பின சாதம் அப்படியே திரும்பியிருக்கு...'' என்கிறார் மாமியார். 

Sponsored


அதென்னவோ, சொல்லிவைத்ததுபோல சிறு பிள்ளைகள் எல்லோருக்குமே கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, புதினா போன்றவை பிடிப்பதே இல்லை. ஆனால், இவையெல்லாம் சேராத உணவில் ருசியும் இருக்காது; ஆரோக்கியமும் கிடைக்காதே. இந்த மசாலாப் பொருள்களைப் பிள்ளைகளுக்குச் சேர்க்கத்தான் வேண்டும். ஆனால், பிள்ளைகளுக்குத் தெரியாமல் கொடுக்க வேண்டும். எப்படி? இதோ அதற்கான சீக்ரெட் சொல்கிறார் சமையல் கலை நிபுணர், தீபா பாலச்சந்தர். பெரியவர்களுக்கும் இதே முறையை ஃபாலோ செய்யலாம்!

Sponsored



 

Sponsored


*. புதினாவை அரைத்து, அதன் சாற்றை லெமன் ஜூஸில் கலந்துகொடுக்கலாம். மோரில் கலந்து, க்ரீன் மோர் என்றும் கொடுக்கலாம். 

*  சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் சுத்தப்படுத்தி அரைத்து, எண்ணெய்யில் வதக்கி, புளிக்குழம்பு வைக்கலாம்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு கிரேவி செய்யாமல், இந்த நான்கையும் எண்ணெய்யில் வதக்கி, அரைத்து கிரேவியில் சேர்த்துவிடலாம். 

* காலை டிபனுக்கும் இரவு டிபனுக்கும் தினமும் இரண்டு வேளை சட்னி அரைப்பீர்கள் இல்லையா? பொரிகடலை, வேர்க்கடலை, தக்காளி என்று எந்த வகை சட்னி அரைத்தாலும், அதில் 10 கறிவேப்பிலைகளைப் போட்டு அரைத்துவிடுங்கள். சட்னியின் ருசியும் சற்று தூக்கலாக இருக்கும்.

* துவையல் செய்யும்போது, எண்ணெய்யில் வதக்கிய இஞ்சி, பூண்டை அதனுடன் சேர்த்து அரைத்துவிடுங்கள்.

* சில பிள்ளைகள் பிரியாணியில் இருக்கும் புதினாவையும் தேடியெடுத்து ஒதுக்கிவிடுவார்கள். இவர்களையும் புதினா சாப்பிடவைக்க முடியும். பிரியாணியில் ஊற்றுவதற்குத் தேங்காய்ப்பால் எடுப்போம் இல்லையா? அந்தத் தேங்காயுடன் ஒரு கைப்பிடி புதினாவையும் சேர்த்து அரைத்து பிரியாணியில் சேர்த்துவிடுங்கள்.
 

* பிள்ளைகளுக்குப் பிடித்த ஐயிட்டங்களில் கட்லெட் முக்கியமானது. இதற்கு இஞ்சி பூண்டு அரைக்கும்போது, கூடவே கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்துவிடுங்கள். பிள்ளைகளால் இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. 

* கறிவேப்பிலையைச் சுத்தமாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்து, நிழலில் காயவையுங்கள். இதனுடன் மிளகு, உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளுங்கள். சாம்பார், ரசம் உள்ளிட்ட எந்தக் குழம்பாக இருந்தாலும், பொரியலாக இருந்தாலும், அதில் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துவிடலாம். சமையலும் ருசிக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும். இதேமுறையில் புதினாப் பொடியும் தயார்செய்து பயன்படுத்தலாம்.

* மோரில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை இரவே ஊறவைத்துவிட்டால். அவற்றின் மொத்த எசன்ஸும் மோரில் இறங்கிவிடும். மறுநாள் மோரை வடிகட்டி பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

* இட்லிப் பொடி, பருப்புப் பொடி, தேங்காய்ப் பொடி, வெந்தயப் பொடி, சாம்பார் பொடி, ரசப் பொடி ஆகியவற்றைத் தயாரிக்கும்போது, மறக்காமல் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

* சமையலில் தக்காளியைச் சேர்த்தால் தகராறு செய்யும் பொடிசுகளும் அதை ஜூஸாக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக்கொடுத்தால் ருசித்துக் குடிப்பார்கள்.

மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கே தெரியாமல் ஹெல்தி உணவுகளைச் சாப்பிடவையுங்கள்!



Trending Articles

Sponsored