அரிசி, பருப்பு, 9 வகை காய்கறிகள்... வளரும் குழந்தைகளுக்கான பர்ஃபெக்ட் வெரைட்டி ரைஸ்! #BisiBeleBath



வெரைட்டி ரைஸ் என்றாலே, கடையில் விற்கும் மசாலாப் பொடிகள் சேர்க்காமல் செய்யமுடிவதில்லை. ஆனால், `பிஸிபேளாபாத்' இதற்கு விதிவிலக்கு. வீட்டு மசாலா மற்றும் பருப்பு சேர்ப்பதால், நிறைய புரதம் கிடைக்கிறது. 9 வகை காய்கறிகள் சேர்ப்பதால், நிறைய வைட்டமின், தாது உப்புகள் என வளரும் பிள்ளைகளுக்குப் பொருத்தமான வெரைட்டி ரைஸாக இருக்கிறது, பிஸிபேளாபாத். இந்த ரெசிப்பியை செய்வதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், காலை நேரப் பரபரப்பில் பலரும் தவிர்த்துவிடுகிறார்கள். எனில், இதை சிம்பிளாகச் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப்பாகச் சொல்லித்தருகிறார், சமையல்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார். 

Sponsored


* பிஸிபேளா பாத் செய்வதற்குத் தேவையான பொருள்களை இரவே எடுத்து வைத்துவிட்டால், இதைவிடச் சுலபமான ரெசிப்பி கிடையாது. தேவையான அரிசி மற்றும் பருப்பை அளந்து தனியே வைத்துக்கொள்ளவும். பீட்ரூட் மற்றும் கோவைக்காயைத் தவிர்த்து (பீட்ரூட் பிஸிபேளா பாத்தின் கலரை மாற்றி அழகைக் கெடுத்துவிடும். கோவைக்காயைச் சேர்த்தால், பிஸிபேளாபாத் ருசியே இல்லாமல் `சப்'பென்று ஆகிவிடும்), ஒரு கப் அளவுக்கு 9 வகை காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். அவற்றைத் தோல் சீவி, நறுக்கி, சில்வர் கிண்ணத்தில் போட்டு வைத்துவிடலாம். அல்லது ஒரு கப் அளவுக்குத்தான் காய்கறிகளை ரெடி செய்ய வேண்டும் என்பதால் காலையிலேயே கூட காய்கறிகளை நறுக்கலாம். இதுதான் சத்தும்கூட. சிறு துண்டு இஞ்சி, 4 பூண்டுப்பல் இரண்டையும் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும். 

Sponsored


* காலையில் எழுந்ததும் ஓர் ஆழாக்குப் பச்சரிசி மற்றும் அரை ஆழாக்குத் துவரம் பருப்பு இரண்டையும் தண்ணீர்விட்டு ஒரு தடவை கழுவிக்கொள்ளவும். பிறகு, மறுபடியும் தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். உங்களுக்குப் புழுங்கல் அரிசிதான் பழக்கம் என்றால், புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரமும், பருப்பை அரை மணி நேரமும் ஊறவைக்கவும். 

Sponsored


* குக்கரில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், நாலரை கப் தண்ணீர், ஊறவைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பு, தேவையான உப்பு சேர்த்து, மூன்று விசில் வரை வேகவிடவும். வெந்ததும், மத்தால் லேசாக மசித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சாதம் மெத்தென்று இருக்கும்.

* நறுக்கி ரெடியாக வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், அவரைக்காய், செள செள, சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், பட்டாணி, (உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை மட்டும் காலையில் நறுக்கிக்கொள்ளவும்) ஆகியவற்றை ஒரு சிட்டிகை மஞ்சள், தேவையான உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேகவைத்து, வடித்துக்கொள்ளவும்.  

* அரை மூடி தேங்காய், ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் தனியா ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துத் தனியாக வைக்கவும். 

* ஓர் எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து வைக்கவும்.

* ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, மிகப்பொடியாக நறுக்கிய இஞ்சிப்பூண்டு (தேவைப்பட்டால்) சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளிக்கரைசல் விட்டு, புளி வாடை போகும் வரைக்கும் நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த அரிசி மற்றும் பருப்பைக் கலந்து சுடச்சுடப் பரிமாறவும். குழந்தைகளுக்கு என்றால், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை தூவிக் கொடுக்கலாம். 



Trending Articles

Sponsored