குழந்தைகளின் காதுகளைப் பராமரிக்க இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! #ChildCare



தாய்மொழி என்பதே ஒரு குழந்தையின் அம்மா பேசுவதைக் கேட்டு, அதைப் பேசிப் பழகும்போதுதான் உருவாகுகிறது. உலகோடு அந்தக் குழந்தைத் தொடர்புகொள்வதற்கு பெரும் உதவியாக இருப்பது காதுகளே. மேலும், குளிரோ, வெப்பமோ அதை உடலுக்குள் கடத்துவதில் காதுகளின் பங்கு பிரதானமானது. எனவே, குழந்தைகளின் காதுகளைப் பராமரிப்பதில் தனி அக்கறை செலுத்த வேண்டியது பெற்றோரின் முதன்மையான கடமை.

Sponsored


 குழந்தைகளின் காதுகள், பெரியவர்களின் காதுகளைவிட, மிகவும் மென்மையாகவும் குறுகலாகவும் இருக்கும். குழந்தைளின் காதுகளைச் சுத்தம் செய்யும்போது மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவும் பெரிய ஆபத்துகளில் முடியும். குழந்தைகளின் காதுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதையும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் முத்துக்குமார்.

Sponsored


 1. காதுகளைச் சுத்தம் செய்ய பட்ஸ் உபயோகிக்கக் கூடாது என மருத்துவர்களே சொன்னாலும் நிறைய பேர் கேட்பதில்லை. குழந்தையின் காதுமடல் குறுகலாக இருக்கும். பட்ஸ் முனை மொக்கையாக இருப்பதால், அது, அழுக்கை எடுப்பதற்குப் பதிலாக உள்ளே தள்ளுகிறது. பட்ஸை கொஞ்சம் ஆழமாக விட்டால்கூட செவிப்பறையைக் கிழித்துவிடும். இதனால், உள்ளே காயம் ஏற்பட்டுக் கட்டி உண்டாகலாம்.

Sponsored


2. குழந்தையைக் குளிப்பாட்டியதும், காதுகளை ஊதவேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, மென்மையான துணியின் முனையைத் திரித்து, காதில் விடலாம். இது, ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். உள்ளே செல்லும் துணியின் முனை மடங்கி, செவிப்பறையைக் குத்தாமல் பாதுகாக்கும்.

3. குழந்தைகள் தொடர்ந்து காதுகளைத் தொட்டு அழுதுகொண்டே இருந்தாலோ, நாம் காதுகளை தொடும்போது அழுதாலோ, காதடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இதற்குக் காதுகளில் ஏற்படும் அழுக்கு மற்றும் சளி காரணமாக இருக்கும். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை ( ENT) அணுக வேண்டும்.

4. எறும்போ, பூச்சியோ காதுகளில் சென்றுவிட்டால் பதற்றமடையாதீர்கள். முதலுதவியாக, அரை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை காதில் ஊற்றுங்கள். இதில் எறும்பு இறந்துவிடும். உடனே மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஓட்டோஸ்கோபி பரிசோதனை செய்து சரிசெய்யலாம்.

5. பெரும்பாலானோர் இரவு நேரங்களில் குழந்தைக்குப் பால் கொடுத்ததும், தூங்கவைத்து விடுகின்றனர். இந்தப் பால் எதுக்களித்து தொண்டைக்கு வரும். தொண்டைக்கும் காதுக்கும் சம்பந்தம் இருப்பதால், அவை காதுக்குள் சென்று இன்ஃபெக்ஷன் ஏற்படுத்தும். இதனால், காதுகளில் சீழ் உருவாகும். ஆகையால், அவர்களுக்குப் பால் கொடுத்த பிறகு முதுகில் தட்டிக்கொடுத்து, ஏப்பம் வந்தவுடன் தூங்கவைப்பதுதான் நல்லது. இதே போன்று ஐஸ்கிரீம் மற்றும் குளிர்ச்சியான பொருள்களால் சளி மற்றும் ஜலதோஷம் ஏற்பட்டு சீழ் வடியும்.

6. குழந்தைகள் ஹெட்ஃபோன் மற்றும் மொபைல்போன் அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி அதிகம் சத்தத்தில் கேட்பதால், இளம் வயதிலேயே காது கேளாமை குறைபாடு ஏற்படும். பெற்றோர்களும் குழந்தைகள் அழாமல், நமக்குத் தொல்லைத் தராமல் இருப்பார்கள் என ஹெட்செட்டைக் கொடுத்துவிடுகிறார்கள். இது, அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

7. குழந்தைகளுக்குக் காது குத்தும்போது, கவனம் தேவை. குருத்தெலும்பு இல்லாத இடமாகப் பார்த்து குத்த வேண்டும்.
 
மேற்கண்ட விஷயங்களை கவனமாகப் பின்பற்றுங்கள். உங்கள் செவிமீது அக்கறை செலுத்தி, மகிழ்வோடு இருங்கள்!  



Trending Articles

Sponsored