போதையில் விழுந்த பிள்ளைகளை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்? #DrugAddiction



Sponsored



போதைப் பழக்கம்... இதற்கு சிறியவர், பெரியவர் பாகுபாடில்லை. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வசியப்படுத்திவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. இதன்பால் ஈர்க்கப்படுபவர்களின் உடல்நலனையும், வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் தொலைத்துக் கட்டிவிடும். அதோடு பலரை கடனாளியாக மாற்றி தெருவிலும், நோயாளியாக மாற்றி மருத்துவமனையிலும் அலையவைத்துவிடும். இந்தப் பழக்கம் அதிகமானால் உயிருக்குக்கூட உத்தரவாதமில்லை. போதைப் பழக்கம் இன்றைக்குப் பெருகிவிட்டதற்கு மதுக்கடைகளுக்கு முன்னே நிற்கும் நீண்ட வரிசையும், தெருமுனைக் கடைகளில் சிகரெட்டும் கையுமாக நிற்கும் மனிதர்களுமே சாட்சி.

``இன்றைக்கு சிகரெட், மது, புகையிலை எல்லாமே எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. சில கட்டுப்பாடுகளிருந்தாலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. `பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்பது விதிமுறை. ஆனால், தமிழகத்தில் தெருவுக்குத் தெரு பெட்டிக்கடைகளும், சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுபவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். `18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்கக் கூடாது!’ இது ஒரு விதிமுறை. ஆனால், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறுவன் புகைப்பிடிப்பதைக்கூட நாம் பார்க்கிறோம். நாகரிகம், விழா, விசேஷங்களின்போதான கொண்டாட்டம்... எனக் கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றிவிட்டது போதைப் பழக்கம். திருமணத்தின்போது மாப்பிள்ளையிடமே, `மச்சி... எப்போ, எங்கே பார்ட்டி?’ என்பது சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்வியாகிவிட்டது. இதுபோன்ற காரணங்கள்தாம் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகமாகவும் பரவலாகவும் காரணம்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

Sponsored


பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிடும் இது போன்ற போதைப் பழக்கம், அவர்களுடைய எதிர்காலத்தோடு, சமூகத்தையும் பாழாக்கிவிடும் என்பதே சமூக ஆர்வலர்கள்வைக்கும் குற்றச்சாட்டு. ஏதோ ஓர் ஆர்வக் கோளாறாலும், நண்பர்களின் சேர்க்கையாலும், ஏதோ ஓர் இச்சையாலும் ஆரம்பிக்கும் இந்தக் கொடூரப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் திணறுகிறார்கள் எத்தனையோ பதின் பருவத்தினர். அவர்களை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் பெற்றோர்களும் தவிக்கிறார்கள். 

Sponsored


``சிறார்கள், பதின் பருவத்தினர் போதைக்கு அடிமையாக என்ன காரணம், அதைத் தவிர்க்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?’’ -

போதை மறுவாழ்வு மைய ஆலோசகர் நிமா மேத்யூவிடம் கேட்டோம். 

``மனிதர்கள் எல்லோருமே தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யத்தான் ஆசைப்படுவார்கள். அந்த ஆசை நல்லதா, கெட்டதா என்று பார்க்கவேண்டியது முக்கியம். போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தெரியாததால், இன்றைக்கு அது பலருக்கு விரும்பமான ஒன்றாகிவிட்டது. ஊட்டச்சத்துகள் எதுவுமற்ற போதைப் பொருளை உற்சாகம் தருவதாக, களைப்பையும் உடல்வலியையும் தீர்க்கும் நிவாரணியாக நினைத்து அதனிடம் கட்டுண்டுகிடக்கிறார்கள் இன்றைய தலைமுறையினர். 
பெற்றோர்கள்தாம் குழந்தைகளுக்கு அந்தக் கொடிய பழக்கத்தின் பாதிப்புகளை உணர்த்த வேண்டும். இல்லையென்றால், பல சிறார்கள், பதின் பருவத்தினர் இந்தப் பழக்கத்துக்குப் பலியாவதைத் தடுக்க முடியாது. ஆக, பெற்றோர்கள் போதைப் பழக்கத்தின் ஆபத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது ஒரு வகை நோய் என்பதை எல்லோரும் உணர வேண்டும். 
 
போதைப் பழக்கத்தைத் தூண்டும் காரணிகள்... 

* ஆர்வம் (Curiosity) 

சிகரெட், மது, கஞ்சாவைப் பற்றிப் பல பேர் சொல்லி, பல வகைகளில் கேள்விப்படும் தகவல்கள், பார்க்கும் நிகழ்வுகளால் ஈர்க்கப்படுகிறார்கள் இளைஞர்கள். `அதில் என்னதான் இருக்கிறது, பார்த்துவிட வேண்டும்’ என்ற ஆர்வ மிகுதியால், போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். 

* பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது (Learned Behavioural) 

குடும்ப உறுப்பினர்கள், திரைப்பட ஹீரோக்கள், நண்பர்கள்... என மற்றவர்களைப் பார்த்து அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 

* சுய விருப்பம் 

போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் விளைவுகள் தெரியாமல், நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவும், கொண்டாட்ட நிகழ்வுகளின் போதும் விரும்பி, போதையின்பால் ஈர்க்கப்படுகிறார்கள். 

* புறக்கணிப்பு 

குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக மகிழ்ச்சிக்காகப் போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் (Best Companion) கொள்கிறார்கள். தங்களுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். 

இது போன்ற உட்புற, வெளிப்புறத் தூண்டல்களால் போதைப் பழக்கம் சிறார்களையும் பதின் பருவத்தினரையும் பற்றிக்கொள்கிறது.  

பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் எது? 

* போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் சிறார்கள் அதற்குத் தேவைப்படும் பணத்துக்காக, பொய்க் காரணங்களைச் சொல்லி, பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது, தேவைக்கு அதிகமாகக் குழந்தைகள் பணம் கேட்பது போன்ற சமயங்களில் உஷாராக இருக்க வேண்டும். 

* போதைப் பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகளின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள்... இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால், அவர்களைக் கண்காணிக்க வேண்டும். 

* பெற்றோர்களுடன் ஏற்கெனவே நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரெனச் சரியாகப் பேசாமல் இருந்தால், அவர்களின் பிரச்னைகளை அறிய முயல வேண்டும். 

* பிள்ளைகளிடம் போதைப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் அவர்களைத் திட்டுவது, அடிப்பது, குற்றம் சாட்டுவது போன்ற அவர்களுக்கு வெறுப்பு உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகள் பலன் தராது. அவை அந்தப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மாறாக, அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற உதவ வேண்டும். உதாரணமாக, அக்கறையுடன் அறிவுரை சொல்ல வேண்டும். அதனால் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். அதை அவர்களே உணரும் வகையில் புரியவைக்க வேண்டும். 

* பள்ளிகளில் தேவையற்ற விடுமுறை எடுப்பது, சக மாணவர்களுடன் சண்டையிட்டுக்கொள்வது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்களுக்கே சென்று தெரிந்துகொள்ள வேண்டும். போதைப்பழக்கம்கூட இவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.

பெற்றோர்கள் செய்யவேண்டியவை...

* பெற்றோர்கள்தாம் பிள்ளைகளுக்கு முதல் ரோல் மாடல். எனவே, அவர்களுக்கு முன்பாக சிகரெட் பிடிப்பது, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

* பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். 

* பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது, அவர்களுக்கு முன்பாகப் பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வது போன்றவையும் அவர்களின் மனதைப் பாதிக்கும். இதனால்கூட அவர்கள் தவறான நண்பர்களின் சேர்க்கையால் போதைப் பழக்கத்துக்கு ஆளாகலாம். 

* சிறார்களும் இளைஞர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவும், அவர்களின் ஆர்வம் வேறு எந்தச் செயல்பாட்டில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டும் அதில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்’’ என்கிறார் நிமா மேத்யூ. 

 
 



Trending Articles

Sponsored