26 வாரங்களாக உயர்த்தப்பட்ட மகப்பேறு விடுப்பு... வேலையைப் பறிகொடுப்பார்களா பெண்கள்?



`புதிய மகப்பேறு விடுப்புக் கொள்கையால் 18 லட்சம் பெண்களுக்கு வேலை கிடைக்காது’ - எச்சரிக்கை விடுத்திருக்கிறது பிரபல வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான டீம்லீஸ் (TeamLease). `இது மிகவும் மோசமான போக்கு, பெண்களுக்கெதிரான அநீதி’ என்று எச்சரிக்கிறார்கள் சமூல நல ஆர்வலர்கள். 

Sponsored


கடந்த ஆண்டுவரை, இந்திய மகப்பேறு உதவிச் சட்டம் 1961-ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வார காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இது போதுமான அளவில் இல்லையென்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட, இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெண்கள் திருமணத்தை, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போடுவதற்குக் காரணம் இந்தக் குறைவான விடுப்பு காலம்தான் என்று முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. 

Sponsored


அடுத்ததாக, தாய்மார்கள் எவ்வளவு நாள்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறார்களோ அதற்கேற்ப, குழந்தைகளின் இறப்புவிகிதம் இருப்பதாக இரண்டாவது ஆய்வில்  கண்டறியப்பட்டது. `இந்தியாவில்  15 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போவதற்கு தாய்மார்களின் குறைவான விடுப்புக்காலம்தான் காரணம்’ என்பது மூன்றாவது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

Sponsored


இதன் காரணமாக விடுப்புக் காலத்தை அதிகரிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, `மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016’ என்ற புதிய மசோதாவைக் கொண்டுவந்தது. அதன்படி, 12 வாரங்களாக இருந்த விடுப்புக் காலம் 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது. `அதற்குப் பிறகும் உடல்நலப் பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரின் சான்றிதழோடு கூடுதலாக 12 வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டது. பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இது பொருந்தும். `இதனால் 18 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்’ என்று அப்போது அரசு அறிவித்தது. பல நிறுவனங்களில் இப்போதுதான் இது கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டீம்லீஸ் நிறுவனம். 

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு விடுமுறை ஏன் தேவை என்பது குறித்து மகளிர்நல மருத்துவர் மனுலஷ்மி விவரிக்கிறார்... 

``மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது அவர்களுக்காக அல்ல, பிறக்கும் குழந்தைகளுக்காக. பிறந்து ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள்வரை குழந்தை, தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். நம் நாட்டில், அலுவலகங்களில்வைத்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வசதிகள் இல்லை. அதேபோல, தாய்ப்பாலைச் சேகரித்து, பாதுகாத்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் வசதிகளும் இல்லை. அதனால்தான் விடுமுறை அவசியமாகிறது. குறைந்தது, ஒரு வருடமாவது குழந்தை பெற்ற பெண்களுக்கு விடுமுறை வேண்டும். குழந்தையைவிட்டு தாய் தூரத்தில் இருந்தால், தாய்ப்பால் கொடுக்காமல்விட்டால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்’’ என்கிறார் மனுலஷ்மி.

குழந்தைகளுக்குத் தாயின் அரவணைப்பு ஏன் தேவை, குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் விவரிக்கிறார்...
``குழந்தைகள் சரியாகப் படிப்பதில்லை. வகுப்புகளில் பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் குற்றம் சாட்டுவார்கள். மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஒரு குழந்தையின்  உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியவை அது தாயின் கருவில் உருவாகத் தொடங்கிய பின்னரான 1,000 நாள்களில் (270 + 730) தாய் எப்படிப் பார்த்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் அமையும். தாயின் அரவணைப்பில், தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை நன்கு ஆரோக்கியமாகவும், அறிவு வளர்ச்சியோடும் வளரும்; நன்றாகவும் படிக்கும். 

ஆரம்பத்தில் குழந்தையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டுப் பின்னாளில் புலம்பிப் பயனில்லை. அதனால், குழந்தை பிறந்து குறைந்தது ஓர் ஆண்டுக்காவது தாயின் அரவணைப்பில் குழந்தை இருக்க வேண்டும். நிலைமை இப்படியிருக்க, கர்ப்பக்காலத்தில் விடுமுறை எடுப்பதால், வேலைவாய்ப்பு குறையும் என்றால், பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவே அச்சப்படுவார்கள். வேலையை நினைத்துக்கொண்டு, குழந்தைகளைச் சரியாகக் கவனிக்கவும் முடியாது. `பெண்கள் என்பதால் வேலைக்கு எடுக்க மாட்டோம்’ என்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரான ஒரு விஷயம்.’’

தனியார் நிறுவனங்களில் தாய்மார்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வசுமதி விவரிக்கிறார்... 

``இது சகஜமாக நடக்கிற ஒரு விஷயம்தான். பெண் ஒருவர் மகப்பேறு விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தால், அவரை எப்படி வேலையை விட்டுத் அனுப்பலாம் என்றுதான் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் யோசிக்கின்றன. நேரடியாகக் காரணத்தைச் சொல்லாமல், மறைமுகமாக நெருக்கடிகள் கொடுத்து, அவர்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். அவர்களால் புதிய நிறுவனங்களிலும் வேலைக்குச்  சேர முடியாது. இதனால் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது. டீம்லீஸ் சொல்லியிருப்பதுபோல் நடப்பதற்கு கண்டிப்பாக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது, ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் படிக்கிறார்கள். படித்து முடித்த பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? அரசாங்கம் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வேலைக்கு ஆட்களைத் தேர்வுசெய்வது முறையாக நடக்கிறதா, வேண்டுமென்றே பெண்களைப் புறக்கணிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.’’

இந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் விவரிக்கிறார்...

``மகப்பேறு காலத்தில் விடுமுறையை அதிகரித்ததால், `பெண்களுக்கு வேலை கிடைக்காது, வேலைக்கு எடுக்க மாட்டோம்’ என்று அச்சுறுத்துவது பெண்களுக்கு எதிரான அநீதி. இதைச் சரிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. பெண்களின் வேலைவாய்ப்புப் பறிபோகாதபடி தனியார் நிறுவனங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். தனியார் நிறுவனங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவேண்டும்.’’ 

`பிறந்த குழந்தைக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தாலே, உலக அளவில் ஆண்டுக்கு 8.2 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுத்துவிடலாம்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்த நிலையில் வேலை குறித்து ஓர் அச்சத்தை உருவாக்கி, பெண்களைப் பதற்றத்தில் ஆழ்த்துவது நிச்சயம் கண்டிக்கவேண்டிய ஒன்று. 



Trending Articles

Sponsored