குழந்தைகளுக்கு ரத்தசோகை வருவதற்கு காரணமும் தீர்வும்! #ChildCare



Sponsored



ந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ரத்தச்சோகை குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் பெரிய அளவில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். இதன் ஆபத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ரத்தச்சோகை வருவதற்கான காரணங்களையும் அதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து மருத்துவர் யசோதரை.

ரத்தச்சோகை என்பது என்ன?

ஒரு மனிதனின் உடலில் உள்ள ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, இருக்க வேண்டிய அளவைவிடக் குறைவாக இருக்கும்போது ஏற்படுவதே `ரத்தச்சோகை'. நமது உடலில் பல உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச்செல்வது இந்தச் சிவப்பணுக்கள்தாம். இதிலிருக்கும் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்துப் பொருள் இந்தப் பணியை செய்கின்றன. ஆகவே, ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறைந்து உடலில் பல உறுப்புகள் பாதிப்படையும் நிலை வரும். சராசரியாக ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு 11 முதல் 14 g/dl வரை இருக்க வேண்டும். இந்தச் சராசரி அளவை விடக் குறைவாக இருப்பதையே ரத்தச்சோகை என்கிறோம். 8 g/dl க்கும் குறைவாக இருக்கும்போது தீவிர ரத்தச்சோகை என்று குறிப்பிடப்படுகிறது.

Sponsored


Sponsored


ரத்தச்சோகை ஏற்படக் காரணங்கள் 

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி2 ஆகிய சத்துகள் அவசியம் இருக்கவேண்டும். ஏனென்றால், இந்தச் சத்துகள்தாம் ரத்த உற்பத்திக்குத் தேவைப்படுகின்றன. இவை குறையும்போதுதான் ரத்தச்சோகை ஏற்படுகிறது. இரைப்பைப் புண், மூலநோய், வலி நிவாரணிகள் போன்றவற்றால் ஏற்படும் ரத்தக் கசிவினாலும் அல்லது விபத்துகளினால் ஏற்படும் ரத்தக் கசிவினாலும் மாதவிடாய் காலங்களினால் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கினாலும் ரத்தச்சோகை வருவதற்கு வழிவகுக்கிறது. இவை தவிர வயிற்றிலிருக்கும் கொக்கிப்புழுக்கள் ரத்தத்தினை உறிஞ்சிக் கொள்வதினாலும், பரம்பரை ரீதியாக ஏற்படுகின்ற சிவப்பணுக் கோளாறு, மலேரியா காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற காரணங்களினாலும் வரக்கூடும். 

ரத்தச்சோகைக்கான அறிகுறிகள் 

பொதுவாகக் குழந்தைகள் சாக்பீஸ், மண், செங்கல்பொடி, விபூதி போன்றவற்றைச் சாப்பிடுவார்கள் அல்லது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவையும் ரத்தச்சோகை இருப்பதற்கான அறிகுறி ஆகும். இதனை மருத்துவர்கள் `பிக்கா' என்பார்கள். அதைப் போன்று உடல் குண்டாதல், முடிக்கொட்டுதல், கண், முகம், நகம் வெளிறியும் காணப்படும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டல், அஜீரணத் தொல்லை, மிகவும் அதிகமான சோர்வு, தலைவலி, உடல்வலி, கைகால் குடைச்சல், தூக்கம் வருவது போன்றே தோன்றுவதும் அறிகுறிகளே. ரத்தச் சோகை அதிகமாகும்போது தலைச்சுற்றல், படபடப்பு ஏற்படுதல், நெஞ்சுவலி, அடிக்கடி தொண்டை, வாய், நாக்கு ஆகியவற்றில் புண்களும் ஏற்படும். தோல் சிவப்பு நிறத்துக்குப் பதிலாக வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் குழந்தைகளுக்கு ரத்தச்சோகை இருப்பதாக அர்த்தம். இதை உறுதி செய்வதற்கு ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ளலாம். பிறகு மருத்துவரை அணுகி இதற்கான உரியச் சிகிச்சையினை எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

ரத்தச்சோகை இருக்கும் குழந்தைகளுக்குப் படிப்பில் ஆர்வமும் கவனமும் குறைவாக இருக்கும். ஹீமோகுளோபின் 8 g/dl க்கும் குறைவாக இருக்கும்போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல்நிலை சரியில்லாமல் போகுதல், சக்தியின்றி காணப்படுதல் ஆகியவை ஏற்படும். குழந்தைகள் நுண்ணுணர்வு குறைபாட்டினால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துவருகிறது. ஹீமோகுளோபின் குறைய குறையக் கல்லீரல் பாதிக்கப்படலாம். அதனால், குழந்தைகள் சோர்வாகக் காணப்படும்போதே மருத்துவரிடம் அழைத்துச்செல்வது நல்லது. இதை ஈடுசெய்யத் தேவையான சத்துகளை உணவிலிருந்து பெறலாம்.
 
ரத்தச்சோகையைச் சரிசெய்ய தேவையான உணவுகள்:

ரத்தச்சோகையைக் குணப்படுத்த, உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியவை கீரைகள். முக்கியமாக, அதிக இரும்புச்சத்து உள்ள கீரைகளான முருங்கைக் கீரை, வெந்தையக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, அகத்திக் கீரை. கட்டாயமாக, வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது குழந்தைகளின் உணவில் இவற்றைச் சேர்க்க வேண்டும். முளைக்கட்டின பாசிப்பயற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். இதனை ஈவ்னிங் ஸ்நாக்ஸாகக் கொடுக்கலாம். பாசிப்பயற்றினை அரைத்து வெங்காயம், கீரை சேர்த்து அடைபோல் செய்தும் கொடுக்கலாம். இரவில் தூங்கச் செல்லும் முன், பேரிச்சம் பழம் மற்றும் பால் குடிப்பதும் நல்லது. காலையில் பத்து மணிக்கு 150  ml கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து வாரத்தில் மூன்றுநாள்கள் சாப்பிடும்போது ஹீமோகுளோபின் அதிகமாகும். முருங்கைக் கீரையை சூப் செய்து சாப்பிடலாம். முளைக்கட்டிய கறுப்பு உளுந்தில் இட்லி, தோசை செய்து தரலாம். அதைப் போன்று மண்ணீரல் சூப் எடுத்துக்கொள்ளலாம். இவை தவிர, மாதுளைப்பழம், கறுப்புத் திராட்சை, தர்பூசணி, அத்திப்பழம், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது போதிய அளவு சத்துகள் உடலுக்குக் கிடைக்கும். இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது ஒருபுறம் என்றாலும், உணவின் மூலமாகச் சத்துகளைப் பெறுவது இன்னும் பலனளிக்கும். 



Trending Articles

Sponsored