காவல்துறை... ஒரே நாள்... 20,000 யூனிட் ரத்ததானம்! - பாதுகாக்கும் வசதி இருக்கிறதா? #BloodDonation #DataStory



Sponsored



மிழகம் முழுக்க ஒரே நாளில் 20,000 பேர் இன்று ரத்ததானம் அளித்து அசரவைத்திருக்கிறார்கள்... அவர்கள் காவல்துறையினர் என்பது கூடுதல் ஆச்சர்யம். மாநிலம் முழுவதும் 89 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றிருக்கிறது. ஆளுக்கு ஒரு யூனிட் ரத்தம் வீதம் 20,000 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டிருக்கிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அங்கு மட்டும் சுமார் 2,000 போலீஸார் ரத்ததானம் செய்திருக்கிறார்கள்.

தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மருத்துவமனைகளுக்கும் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. மாதத்துக்கு சுமாராக 35,000 யூனிட் ரத்தம் தேவைப்படும். இது, அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளின் மூலமாக தானமாகப் பெறப்படுகிறது. முகாம்கள் நடத்துவதன் மூலமாகவும், சிலர் நேரடியாக ரத்த வங்கிக்கே வந்து தானம் அளிப்பதன் மூலமாகவும்கூட ரத்தம் பெறப்படுகிறது. அது முறையாகச் சேகரிக்கப்பட்டு, பின்னர் தேவைப்படும்போது பயன்படுத்தப்படுகிறது.

Sponsored


ஒருபுறம் இந்த முயற்சிகள் பாராட்டப்பட்டாலும், மறுபுறம் இதற்கு எதிர்ப்புக் குரல்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. முகாம்களில் தானமாகப் பெறப்படும் ரத்தம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், ரத்ததானம் அளிக்க விரும்பினால் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு நேரடியாகக் கொடுப்பதுதான் சரியென்றும் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொருபுறம், ஒரு நாளில் பெறப்பட்ட இத்தனை யூனிட் ரத்தத்தை முறையாகப் பராமரிக்கும் வசதி இருக்கிறதா என்றும் சிலர் கேள்வியெழுப்புகிறார்கள். ரத்தம் வீணாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

Sponsored


``இப்படி மொத்தமாகப் பெறப்படும் ரத்தத்தைப் பாதுகாக்கும் வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. அதனால், ரத்தம் வீணாக

வாய்ப்புள்ளது. ஒரே நாளில் இப்படி மாபெரும் ரத்ததான முகாம் நடத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது... அதிலும் காவல்துறையினர் முகாம் நடத்தவேண்டிய தேவை என்ன? மக்கள் மத்தியில் தொடர்ச்சியாகக் காவல்துறையினரின் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் அதிருப்தி நிலவிவருகிறது. அதை மறைப்பதற்காகத்தான் ரத்ததான முகாம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 40 வயதுக்குட்பட்ட அனைத்துக் காவலர்களும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

அதற்காக, விலை மதிப்பில்லாத ரத்தம் வீணாவதை ஏற்க முடியாது. உண்மையிலேயே காவல்துறையினருக்கு மக்கள்மீது அக்கறை இருந்தால், அவர்கள் முறையாக நன்கொடையாளர்களாகப் பதிவுசெய்துகொண்டு மக்களுக்குத் தேவைப்படும்போது ரத்தம் கொடுக்கலாம்’’ என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்.

இது குறித்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி துறைத்தலைவர் மருத்துவர் சுபாஷிடம் பேசினோம்...

``தமிழ்நாட்டின் பல இடங்களில் ரத்தத்தைப் பாதுகாக்கும் வசதிகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 12 அரசு ரத்தவங்கிகள் இருக்கின்றன. அங்கிருக்கும் வசதிகளுக்கு ஏற்றவாறுதான் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. சிவப்பு ரத்தத்தை கிட்டத்தட்ட 30 - 45 நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பிளாஸ்மாவை ஒரு வருடம் வரை பாதுகாக்க முடியும். அதனால், ரத்தம் வீணாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. மேலும், ஒவ்வொரு ரத்த மாதிரியிலும் தேதி இருக்கும். எது முன்பாகப் பெறப்பட்டதோ, அந்த ரத்தம்தான் முதலில் பயன்பாட்டுக்கு (First in first out) வழங்கப்படும்.

அரசு முகாம் நடத்தி பெறப்படும் ரத்தமாக இருக்கட்டும்... நேரடியாக இங்கே வந்து தானமாக அளிக்கப்படும் ரத்தமாக இருக்கட்டும்... ஒவ்வொரு யூனிட்டுக்கும் கணக்கிருக்கிறது. அதனால் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்று தானமாகப் பெறப்பட்ட ரத்தம் முழுவதும் அரசு ரத்த வங்கிகளுக்குத்தான் செல்கிறது. இன்று பெறப்பட்ட 20,000 யூனிட் ரத்தத்தில், குறைந்தது 15,000 யூனிட் ரத்தத்தையாவது பயன்படுத்த முடியும். இது ஒரு நல்ல முயற்சி. காவல்துறையைப்போல மற்ற துறையைச் சார்ந்தவர்களும் ரத்ததானம் செய்தால் எத்தனையோ நோயாளிகள் பயன் பெறுவார்கள்’’ என்கிறார் அவர்.



Trending Articles

Sponsored