நம் உடலில் நமக்குத் தெரியாமல் இருந்த `சி6’ மரபணு... கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்! #C6GenSponsoredஇத்தனை ஆண்டுகளாக மனித உடலில் நிலைபெற்றிருந்து, இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த மரபணு, இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மரபணுவைக் கண்டறிந்தவர்கள் ஆஸ்திரேலியாவின், காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தைச் (CSIRO) சேர்ந்த விஞ்ஞானிகள். அந்த மரபணுவுக்கு `C6’ அல்லது `f106’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த மரபணுவின் மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதன் மூலம், புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கலாம் எனவும், மனித உடலில் வைரஸ் கிருமிகள் பரவ காரணமாக இருக்கும் புரதங்களை கட்டுப்படுத்தலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மரபணுக்கள்தாம், நம் உடலிலுள்ள புரதத்துக்கான குறியீட்டைக் (Code) கொண்டிருக்கின்றன. புரதங்களின் மூலமாகத்தான் உடலின் பல்வேறு செயல்பாடுகள், அமைப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(PC : CSIRO)

Sponsored


இந்தப் புதிய மரபணு கண்டுபிடிப்பு பற்றி சென்னையில் செயல்பட்டுவரும் சென்டர் ஃபார் மெடிக்கல் ஜெனட்டிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் உத்ரா சடகோபன் விவரிக்கிறார்...

Sponsored


``மனித உடலில் மொத்தம் 30,000 மரபணுக்கள் இருப்பதாக 2003-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தினர். `மரபணு நோய்களை உருவாக்கும் மரபணுக்கள் அனைத்தையும் பெரும்பாலும் கண்டடைந்துவிட்டோம்’ என அப்போது தெரிவித்தார்கள். ஆனால், அதில் விடுபட்டுப்போன ஒரு ஜீனைத்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு `சி 6’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நம் உடலில் மரபணுக்கள் அனைத்தும் குரோமோசோமில்தான் இருக்கும். அப்படி இந்த ஜீன் இருக்கும் இடத்தைவைத்து இப்படிப் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஜீனுக்குப் பெயர்வைக்க விரும்புபவர்களும் தங்களுக்கு விருப்பமான பெயர்களை அவர்களின் இணையதள முகவரிக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த மரபணுவின் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். சில நேரங்களில், நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நம் உடலில் உள்ள அணுக்களையே வேற்று அணுக்களாகக் கருதி, அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்கும். அதனால் சில நோய்கள் உருவாகும். இதற்கு `தன்னுணர்வு நோய்கள்’ (Autoimmune Diseases) என்று பெயர். முடக்குவாதம் அப்படிப்பட்ட ஒரு நோய். இந்த மாதிரியான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்த `சி 6' மிகவும் உதவிபுரியும் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.

நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில், `சைட்டோகீன்' (Cytokine) என்கிற புரதம் உற்பத்தியாகும். நோய்களை உண்டாக்கக்கூடிய

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் உற்பத்தியைப் பெருக்கவிடாமல் இது தடுக்கும். அதே நேரத்தில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் வெளியேறிவிட்டால் இதன் உற்பத்தி நின்றுவிட வேண்டும். அப்படி நிற்காவிட்டால், அதனாலும் சில உடல்நலப் பிரச்னைகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. இந்த `சி 6' மரபணு சைட்டோகீன் புரத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக்கொண்டது.

புற்றுநோய், சர்க்கரைநோய், மூட்டு தொடர்பான பாதிப்புகள் என்னென்ன காரணங்களால் உண்டாகின்றன என்பதைக் கண்டறிய இந்த ஜீன் உதவிபுரியும். அனைவருக்கும் ஒரே காரணத்துக்காக நோய்கள் ஏற்படுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்துக்காக ஏற்படும். எதனால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்துவிட்டால், அதற்கான பிரத்யேகமான மருந்துகளை உட்கொண்டு எளிதாக நோயிலிருந்து விடுபட முடியும். இந்தப் புதிய மரபணுவின் முக்கியமான அம்சமாக இது கருதப்படுகிறது’’ என்கிறார் உத்ரா சடகோபன்.

``புற்றுநோய் பாதிப்பைத் தடுக்க, இந்த `சி6' மரபணு எந்த வகையில் உதவிபுரியும்?’’ - புற்றுநோய் சிறப்பு மருத்துவர் லதாவிடம் கேட்டோம்...

``இது புற்றுநோயைத் தடுப்பதற்கு எந்தளவுக்கு உதவிபுரியும் என்பது தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகள் இந்த மரபணுவில் இருப்பதாக நேரடியாக எந்தத் தகவலும் இல்லை. ஆய்வுகள் முடிந்த பின்னர்தான் முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்கிறார் லதா.


 Trending Articles

Sponsored