ஆரோக்கியமானதா ஃபிளேவர்டு வாட்டர்? - ஒரு மருத்துவ விளக்கம் #FlavouredWater



Sponsored



ணவு இல்லாமல்கூட ஒருவரால் வாழ்ந்துவிட முடியும். தண்ணீர் இல்லாமல்..? சான்ஸே இல்லை. `ஆரோக்கியத்துடன் இருக்கவும், உடல் உறுப்புகள் சீராக இயங்கவும், உடலில் தண்ணீரின் அளவு எப்போதும் சீராக இருக்க வேண்டும். எனவே, தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடியுங்கள்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். சுவையில்லாத தண்ணீரைக் குடிப்பதைவிட குளிர்பானம், ஜூஸ், டீ, காபி என ஏதாவது சுவையூட்டும் பொருள்களை தண்ணீருடன் சேர்த்துச் சாப்பிடத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். இந்தச் சுவைப் பிரியர்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது... `ஃபிளேவர்டு வாட்டர்' (Flavoured Water). 

அதென்ன ஃபிளேவர்டு வாட்டர்? 

Sponsored


தண்ணீருக்கென்று தனியாக நிறமோ, சுவையோ கிடையாது. அது சேரும் பொருள்களுக்கேற்ப நிறத்தையும் சுவையையும் கொடுக்கும். எலுமிச்சை, புதினா, சீரகம், தோற்றான் கொட்டை, வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டுக் குடிக்கும் பழக்கத்தைப் பின்பற்றிவந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இன்றைக்கும் தமிழ்நாட்டின் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் பல இடங்களிலும் சீரகத் தண்ணீர் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி, குடிக்கும்போது தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்; நீருக்குச் சுவையும் கூடும். இதன் நவீன வடிவமாக வந்திருப்பதுதான் இந்த `ஃபிளேவர்டு வாட்டர்.’ 

Sponsored


எலுமிச்சை, ஆப்பிள், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை... என ஏதாவது ஒரு பழத்துடன் புதினா, துளசி போன்ற மூலிகைகளையும் சேர்த்து, இந்த வகைத் தண்ணீரைத் தயாரிக்கிறார்கள். தண்ணீர் சுவையாக இருக்கும்; அதோடு சில சத்துகளும் சேர்வதால், ஆரோக்கியமான பானங்கள் எனப் பலரும் வாங்கிப் பருகுகிறார்கள். 

`உண்மையில், ஃபிளேவர்டு வாட்டர் ஆரோக்கியமானதுதானா... அதைக் குடிப்பதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா, குளிர்பானங்களுக்கு இது சிறந்த மாற்றா?’ - உணவியல் நிபுணர் சங்கீதா நடராஜனிடம் கேட்டோம்... 

``போதுமான அளவுக்குத் தண்ணீர் குடித்தாலே போதும்... உடலிலுள்ள கழிவுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்; பல நோய்கள் நெருங்காது. உடலில் நீர் வறட்சியும் (Dehydration) ஏற்படாது. புதிதாக வந்திருக்கிற ஃபிளேவர்டு வாட்டரில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் சேர்க்கப்படுகின்றன. சில ஃபிளேவர்டு வாட்டர்களில் புரதம்கூட சேர்க்கப்படுகிறது. சாதாரணத் தண்ணீரில் தாதுச்சத்துகள் மட்டுமே இருக்கும். ஃபிளேவர்டு வாட்டரில் இது போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சில சத்துகள் சேர்க்கப்படுவதால், இது சாதாரண தண்ணீரைவிட சிறந்தது. மேலும், குளிர்பானங்களில் அதிகளவில் சர்க்கரை, கஃபைன் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஃபிளேவர்டு வாட்டரில் அவையெல்லாம் சேர்க்கப்படவில்லை என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

குளிர்பானங்களை குடிப்பதால் தாகம் தீராது. மாறாக, உடல் வறட்சிதான் அதிகரிக்கும். எனவே, ஃபிளேவர்டு வாட்டர், குளிர்பானங்களுக்குச் சிறந்த மாற்றுதான். ஆனால், சில நிறுவனங்களின் தயாரிப்புகளில் `நேச்சுரல் ஃபிளேவர்டு வாட்டர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சர்க்கரை, பிரிசர்வேட்டிவ் (Preservative) சேர்த்து விற்பனை செய்கிறார்கள். நீண்ட நாள்கள் தொடர்ச்சியாக அவற்றைக் குடித்தால், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. எனவே, ஃபிளேவர்டு வாட்டர் வாங்கும்போது, லேபிளைக் கவனியுங்கள். மூலப்பொருள்களில் சர்க்கரை, பிரிசர்வேட்டிவ்கள், ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தால், அதைக் குடிப்பதற்கு ஏற்றதல்ல. இது போன்ற பாதிப்புள்ள நீரை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, தண்ணீரில் பழங்கள், மூலிகைப் பொருள்கள் சேர்த்து வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம்’’ என்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா நடராஜன். 

நல்லதா, கெட்டதா என்று ஆராயாமல், `விலை கொடுத்து வாங்கும் தண்ணீர்தான் உயர்ந்தது’ என்று நினைத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் இன்றைய தலைமுறையினர். அதனால்தான் இன்றைக்கு பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்... என்று விதவிதமாகத் தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. மினரல் வாட்டர், ஆர்.ஓ வாட்டர் குடித்துப் பழகியவர்கள் மெட்ரோ வாட்டரையோ, போர் வாட்டரையோ குடிக்க விரும்புவதில்லை. நிலைமை இப்படியிருக்க, ஃபிளேவர்டு வாட்டரையும் அதிக விலை கொடுத்து வாங்கி, குடித்துப் பழகிவிட்டால் அதிலிருந்து விடுபடுவதே சிரமாமான ஒன்றாக மாறிவிடும்... கவனம்! 
.

 
 



Trending Articles

Sponsored