பீரியட்ஸ் நிறம் மாறி வரும் காரணங்கள் என்ன? மருத்துவ விளக்கம்!பீரியட்ஸ் என்றாலே சிவப்பு நிறத்தில்தான் வரும்; வர வேண்டும். ஆனால், ஒரு சில பெண்களுக்கு ஆரஞ்சு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் வரும். இப்படி வருவது, ஏதாவது நோயின் அறிகுறியா, நிறம் மாறி வருவதற்கு என்ன காரணம், இதற்கான தீர்வு என்ன? விளக்கமாகச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர், வாணி ஷ்யாம் சுந்தர்.

ஆரஞ்சு நிறமாக வருகிறதா பீரியட்ஸ்?

Sponsored


ஆரஞ்சு அல்லது கருஞ்சிவப்பு என நிறம் மாறி பீரியட்ஸ் வருவதை, `டிஸ்கலர்டு பிளட்' என்று மருத்துவத்தில் குறிப்பிடுவோம். ஆரஞ்சு நிறத்தில் மாதவிடாய் வந்தால், ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு காலத்தில், அனீமியா என்பது ஏழைகளுக்கு மட்டுமே வரும் ஆரோக்கியக் குறைபாடாக இருந்தது. தற்போது, சரிவிகித உணவு சாப்பிடாத காரணத்தால், ஏழை - பணக்காரர் பாகுபாடு இல்லாமல் பலருக்கும் இந்தப் பிரச்னை வருகிறது. ஆரஞ்சு நிறத்தில் மாதவிடாய் வந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்கவும். உங்கள் உடல்நிலைக்குத் தக்கபடி, ஒன்று அல்லது இரண்டு மாதம் வரை இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொள்ளவும். கூடவே இரும்புச்சத்து மிகுந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.

Sponsored


     கருஞ்சிவப்பு நிறத்தில் பீரியட்ஸ் வருகிறதா?

Sponsored


   கருஞ்சிவப்பு நிறத்தில் பீரியட்ஸ் வருவதற்கு 5 காரணங்கள் இருக்கின்றன. 

    ஒன்று: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சரியாக வெளியேறாமல், கருப்பையின் உள்வரி சவ்வில் லேயர் லேயராகப் படிந்து நிற்கும். மாதவிடாயின்போது, இந்த நாள்பட்ட    லேயர்களும் உடைந்து, ரத்தத்தில் அழுக்குக் கலந்ததுபோல வெளியேறும். பொதுவாக, இதற்குப் பயப்பட தேவையில்லை. இதனால், கருப்பையில் இன்ஃபெக்‌ஷன் வராது. ஆனால், இதெல்லாம் நார்மல் பெண்களுக்குத்தான். சிசேரியன் நடந்த புதிது என்றாலோ, துர்நாற்றத்துடன்கூடிய வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தாலோ, அல்லது அந்தரங்க உறுப்பில் தொடர்ந்து அரிப்பு இருந்தாலோ, உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். கருப்பையினுள் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால்தான், மேலே சொன்ன அறிகுறிகளுடன் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும்.

காரணம் இரண்டு: ஹீமோகுளோபின் குறைவாக இருந்தாலும், பீரியட்ஸ் கருஞ்சிவப்பு நிறத்தில் போகும். இதற்குத் தீர்வு இரும்புச்சத்து மாத்திரைகளே.

காரணம் மூன்று: ஃபாஸ்ட் ஃபுட் அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி குளிர்பானம் குடிப்பது, அதிகமான ஸ்டிரெஸ் போன்றவற்றால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இதனாலும், பீரியட்ஸ் கருஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும்.

காரணம் நான்கு: முப்பது வயதுகளின் இறுதியிலோ, நாற்பதுகளின் ஆரம்பத்திலோ இருக்கிறீர்கள் என்றால், அது ப்ரீ-மெனோபாஸ் ஸ்டேஜ். இந்த நேரத்தில், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் கருஞ்சிவப்பு பீரியட்ஸ் ஏற்படலாம்.

காரணம் ஐந்து: ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களிடம் 20 நாள்களுக்கு மாத்திரை சாப்பிடச் சொன்னால், சிலர் 10 நாள்களே சாப்பிட்டு விட்டுவிடுவார்கள். இதனால், இரண்டு பீரியட்ஸ்க்கு இடையில் ஒரு பீரியட்ஸ் வரும். இந்த ரத்தப்போக்கும் கருஞ்சிவப்பு நிறத்தில் வரலாம். 

தைராய்டு காரணமா? 

ஆரஞ்சு நிற பீரியட்ஸுக்கும் கருஞ்சிவப்பு நிற பீரியட்ஸுக்கும், நிச்சயம் தைராய்டு காரணம் கிடையாது. தைராய்டினால் ஒழுங்கற்ற பீரியட்ஸ்தான் வருமே தவிர, டிஸ்கலர்டு பீரியட்ஸ் வரவே வராது. 

இவற்றைச் சாப்பிட மறக்காதீங்க லேடீஸ்!

உங்களுக்கு பீரியட்ஸ் பிரச்னை இருந்தாலும் இல்லையென்றாலும் இவற்றைச் சாப்பிட மறக்காதீங்க. பேரீச்சை, கீரை வகைகள், பீட்ரூட், மாதுளம்பழம், பாதாம், பிஸ்தா. நிலக்கடலை ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கடைப்பிடியுங்கள்; பீரியட்ஸ் பிரச்னையின்றி சந்தோஷமாக இருக்கலாம்.Trending Articles

Sponsored