மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தம்... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்? #NEET



Sponsored



நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் வழியில் தேர்வெழுதிய 24,720 பேரில் 460 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். அதில்,  சிலருக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்ததற்கு காரணம், கேள்வித்தாளில் இடம்பெற்ற பிழைகளே என்று மாணவர்களும் கல்வியாளர்களும் குற்றம் சாட்டினார்கள்.  

தமிழ் வழி வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் பிழையாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 'கூட்டுறவு' என்ற வார்த்தையை 'பகிர்ந்துறவு' என்றும் 'ஆக்டோபஸ்'என்ற வார்த்தையை 'ஆதடபஸ்' என்றும் மொழி பெயர்த்திருந்தார்கள்.  

Sponsored


இதுகுறித்து கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியதை சி.பி.எஸ்.இ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 எம்.பி டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  ' நீட் வினாத்தாளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும், அல்லது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டும்...' என்று அந்த மனுவில்  கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்'  ``நீட் தமிழ்வழி வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும்..." என்று உத்தரவிட்டுள்ளது.  மேலும், 'கருணை மதிப்பெண்களையும் உள்ளடக்கி,  மருத்துவ சேர்க்கைக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்' என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. 

Sponsored


இந்தாண்டு தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 10 பேர் 300-க்கு மேல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். 42 பேர் 200-க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தார்கள். தற்போதைய தீர்ப்பு காரணமாக, தமிழ்வழியில் படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். 

இந்தத் தீர்ப்பு தொடர்பாக வழக்குத் தொடர்ந்த டி.கே.ரங்கராஜனிடம் பேசினோம். 

`` நீட் தேர்வு பெரும்பாலான மாணவர்களின் மருத்துவக் கனவை குலைத்துவிட்டது என்ற ஆதங்கத்திலும், மாணவர்களின் உரிமை பறிபோய்விடக்கூடாது என்ற பதைபதைப்பிலும்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தேன்.  ஆனால், சி.பி.எஸ்.இ நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாக இருந்தது. 'யார் இந்த ரங்கராஜன் அவருக்கு ஏன் இந்த வேலை' என்ற ரீதியிலேயே வழக்கை எதிர்கொண்டார்கள். இப்போது தீர்ப்பு நியாயமாக வந்துவிட்டது.  சி.பி.எஸ்.இ உடனடியாக மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை அளித்து, புதிய தரவரிசைப்பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லக்கூடாது. அப்படிச் செய்வது மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை மறுப்பது போன்றது`` என்றார் அவர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத், `` ஒட்டுமொத்தமாக மீண்டும்

கவுன்சலிங், அட்மிஷன் என்றால் ஏற்கெனவே சேர்ந்த மாணவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். நாடு முழுவதும் மருத்துவச் சேர்க்கையில் குளறுபடி உண்டாகும். அதனால், தமிழ்வழி மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளித்து புதிதாக ஒரு மெரிட் லிஸ்ட் போடவேண்டும். அவர்களில் எத்தனை பேர் தகுதியானவர்களோ அவர்களுக்கு மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் கூடுதலாக தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அந்த இடங்களை இந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும் `` என்கிறார் அவர். 

இந்தாண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவின் தந்தையும், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளருமான டாக்டர் காசியிடம் பேசினோம்.

`` மிகவும் வரவேற்கக்கூடிய தீர்ப்பு இது. கேள்வியே தவறாக இருக்கும்போது மாணவர்களால் எப்படி சரியாகப் பதிலளிக்க முடியும்..? அந்த 49 கேள்விகளுக்கும் தவறாக விடையளித்திருந்தால் 49 மார்க் நெகட்டிவாகியிருக்கும். அவர்கள் எடுத்த மதிப்பெண்களில் இந்த 49 மதிப்பெண்கள் போயிருக்கும். அதனால், தமிழ்வழியில் தேர்வெழுதிய மாணவர்களின் வினாத்தாள்களை மட்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.  

ரேங்க் லிஸ்ட் போடுவதற்கு  முன்பாகவே இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்கள். ஆனால், வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பதற்காகவே தேர்வு முடிவுகளை ஒருநாள் முன்னதாகவே  வெளியிட்டார்கள்; மருத்துவச் சேர்க்கையையும் ஆரம்பித்துவிட்டார்கள். இது மிகவும் தவறான  போக்கு. 196 மதிப்பெண்கள் கூடுதலாகப் பெறும்போது அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே பல மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கவுன்சலிங் தற்போது முதல்சுற்று தான் முடிவடைந்துள்ளது. முதல்சுற்றில் மத்திய தொகுப்பில் நிரம்பாத இடங்கள் மாநிலத் தொகுப்புக்கு வரும். அதில் இந்த மாணவர்களை நிரப்பலாம். மேலும், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, சி.பி.எஸ்.இ கலந்து பேசி எவ்வளவு இடங்கள் தேவைப்படுகிறதோ அதை உருவாக்க வேண்டும். அந்த இடங்களை தற்போது தகுதி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு இடம் வழங்க வேண்டும்.`` என்கிறார் மருத்துவர் காசி.

`` கேள்விகள் தவறு என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவேண்டியது தான் நியாயம். அதனடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பும் வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கேள்விகள் தவறாகக் கேட்டு முதலில் தவறு செய்தது சி.பி.எஸ்.இ. இது குறித்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதன் தீர்ப்புக்குக் காத்திருக்காமல் தமிழ்நாடு  அரசு கவுன்சலிங் நடத்தியது இரண்டாவது தவறு. இவர்கள் தவறு செய்துவிட்டு கவுன்சலிங் முதல்சுற்றில் சேர்ந்த மாணவர்களையோ, இனிமேல் சேரக் காத்திருக்கும் மாணவர்களின் இடங்களையோ பறிக்கக்கூடாது. புதிதாக இடங்களை உருவாக்கியே மாணவர்களை நிரப்பவேண்டும்.`` என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு குறித்து  கூடுதல் மருத்துவக் கல்வி  இயக்குநரும், தேர்வுக்குழுச் செயலாளருமான மருத்துவர் செல்வராஜிடம் பேசினோம். 

``தீர்ப்பு குறித்து விரிவாகப் பேசமறுத்த செல்வராஜ், ``நிர்வாக இடங்களுக்கான கவுன்சலிங் ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, அதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறோம். சி.பி.எஸ்.இ நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அவர்களின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்படுவோம் `` என்று முடித்துக்கொண்டார் அவர்.

முதல்சுற்றில் இடம் பெற்ற மாணவர்களின் கட்-ஆப் அரசு மருத்துவக் கல்லூரிகள்: OC : 429 BC- 375 BC(M) :348 MBC: 327 SC:267 SC(A): 221       ST :200
தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு: OC: 361 BC: 344 BC(M) :320 MBC : 300 SC: 235 SCA : 188 ST: 162



Trending Articles

Sponsored