செயலிழந்த சிறுநீரகம்... மூச்சுத்திணறல்..! வாஜ்பாயின் மெடிக்கல் ரிப்போர்ட்



Sponsored



முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். `தற்போது அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும், உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர்சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்துள்ளார்கள். 

வாஜ்பாயிக்கு  வயது 93.  இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் வென்றவர். மூன்று முறை இந்தியப் பிரதமராக இருந்தவர். பத்து முறை மக்களவைக்கும், இரண்டு முறை மாநிலங்களவைக்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். கடந்த 2014 - ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

Sponsored


2009 - ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் வாஜ்பாய். அடுத்து படிப்படியாகப் பல்வேறு பிரச்னைகள் அவரது உடல்நிலையைச் சூழ ஆரம்பித்தன. முதுமையின் காரணமாக நினைவாற்றலை இழந்தார். அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் மாதம் 11 - ம் தேதி சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடுதலாக மூச்சுத்திணறல் பாதிப்பும் இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளித்து வந்தனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில்,  அவரது உடல்நிலை தற்போது மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் நிலையைக் கடந்து, பின்னடைவைச் சந்தித்துள்ளது.  

Sponsored


சிறுநீர்ப் பாதைத் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். சிறுநீர்ப் பாதையில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமி தொற்று ஏற்பட்டால், சிறுநீர்க் கழிப்பதில் சிரமம் ஏற்படும். குறைவான அளவு சிறுநீரே வெளியேறும். சில நேரங்களில் சிறுநீரோடு ரத்தமும் வெளியேறும். நம் சிறுநீர் மண்டலத்துக்கு இயல்பாகவே இந்தக் கிருமிகளை அகற்றும் ஆற்றல் இருக்கிறது. வயதானவர்களுக்கும், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கும் சிறுநீரக மண்டலம் திறம்படச் செயல்படாது. அதனால், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். முதுமையோடு, சர்க்கரை நோயும் வாஜ்பாயைப் பாதித்திருக்கிறது. தற்போது ஒரு சிறுநீரகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறுநீரகம் மட்டுமே செயல்படுகிறது. அதனால்தான் மிகவும் இக்கட்டான சூழலுக்கு அவரின் உடல்நிலை சென்றிருக்கிறது. 

``  பொதுவாக வயதானவர்களுக்குச் சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும். அதனால் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றுவது கடினம். வாஜ்பாய்க்கு வயதாகிவிட்டதால் பாதிப்பின் வீரியம் அதிகமாக இருக்கிறது. சிலருக்குப் பிறக்கும்போதே சிறுநீரகம் சுருங்கியிருக்கும். இந்தப் பாதிப்புக்கு ஹைப்போபிளேசியா ( Hypoplasia) என்று பெயர். அதுதவிர, சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்து வெகுநாள்கள் கவனிக்காமல் இருந்தாலும் சிறுநீரகம் வீங்கி செயல்படாமல் போய்விடும். 

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இரண்டு சிறுநீரகங்களும்தாம் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். ஒரு சிறுநீரகம் மட்டும் பாதிக்கப்படாது. வாஜ்பாயிக்குப் பிறவியிலேயே ஹைப்போபிளேசியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது கல் அடைப்பின் காரணமாக ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். 

தற்போது அவருக்குச் சிறுநீரகத் தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. தொற்று உடல் முழுவதும் பரவியதால் நெஞ்சில் சளி கட்டியிருக்கிறது. அதனால், முகம், கால், கை வீங்கி, மூச்சுத் திணறல் உண்டாகியிருக்கிறது. இந்தநிலையில் இதயத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் அவருக்கு வென்டிலேட்டர் போன்ற கருவிகளின் உதவியோடு சிகிச்சையளித்து வருகிறார்கள்  `` என்கிறார் சிறுநீரக மருத்துவ நிபுணர் எம்.ஜி.சேகர். 



Trending Articles

Sponsored