இந்தியாவில் இதயநோய் அதிகரிக்க உப்பே காரணம்! உலக சுகாதார மையம் எச்சரிக்கை



Sponsored



`நாளொன்றுக்கு ஒரு மனிதனுக்குச் சராசரியாக 5 கிராம் உப்பு போதுமானது’ என்று வரையறுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. ஆனால், இந்தியர்கள் அதைவிட இரண்டு மடங்கு உப்பு பயன்படுத்துவதாக, `இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளை'யால் (Public Health Foundation of India) நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் டெல்லியிலும் 1,395 பேரிடம்  இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், டெல்லி மற்றும் ஹரியானாவில் ஒரு நாளைக்கு ஒருவர் 9.5 கிராம் உப்பும், ஆந்திர பிரதேசத்தில் 10.4 கிராம் உப்பும் உட்கொள்வது தெரியவந்துள்ளது. 

உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான தாது, சோடியம். பெரும்பாலும் உப்பு மூலமாகவே நமக்கு சோடியம் கிடைக்கிறது. ஆனால், இன்று இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் தொடங்கி, இதயநோய்கள் வரையிலான தொற்றாநோய்களால் நிகழும் மரணங்களுக்கு முக்கியக் காரணம், அளவுக்கு அதிகமான உப்பைப் பயன்படுத்துவதுதான்' என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  உப்பு சேர்ப்பதால் ஏற்படும் ரத்த அழுத்தத்தால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உப்பு, இந்தியர்களின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனமும் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறது.

Sponsored


Sponsored


அதிக உப்பால் எந்த  மாதிரியான பிரச்னைகள் வரும், ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புஉணர்வு இந்தியர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதாகச் சொல்கிறது மேற்கண்ட ஆய்வு. உப்பு என்றால், நாம் சமையலுக்குப்

பயன்படுத்தும் உப்பை மட்டுமே கணக்கில் கொள்கிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் வெவ்வேறு வழிகளில் உப்பை உள்ளே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறோம். 

``உப்பு அதிகரிக்க முக்கியக் காரணம் மாறிவிட்ட நம் உணவுப்பழக்கமே. கடந்த 20 ஆண்டுகளில் நாம் பயன்படுத்தும் உப்பின் அளவு அபாயகரமாக அதிகரித்திருக்கிறது. ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், பிஸ்கட், சமோசா, நூடுல்ஸ், துரித உணவுகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாம் உப்பைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். உப்புச் சேர்த்த பாக்கெட் உணவுகளையே நாம் அதிகம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்கிறார் பொதுநல மருத்துவர் அருணாசலம். 

``உப்பு வெறும் சுவை மட்டுமே கொடுப்பதில்லை. அதற்கு கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. அதனால், இதை, `நுண்ணுயிர் கொல்லி' என்றும் சொல்லலாம். பழங்காலம் தொட்டே கருவாடு, இறைச்சி உள்ளிட்ட உணவுகளைப் பதப்படுத்தவும், உணவுப்பொருள்களைச் சுத்தம் செய்வதற்கும் உப்பைப் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. இன்று சிறு ரெஸ்டாரன்ட் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை எல்லா உணவுகளிலும் உப்பு அதிகம் இருப்பதை உணரலாம்.  பெரும்பாலான உணவகங்களில் முந்தைய நாள் உணவை மறுநாள் பயன்படுத்துவற்காக, உப்பை அதிகம் பயன்படுத்துவதும் நடக்கிறது. பாக்கெட் உணவுகளிலும் நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நிறைய உப்பு சேர்க்கிறார்கள்..." என்கிறார் அருணாசலம். 

``சோடியம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, அயோடின், ப்ளோரைடு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுச்சத்துகள்

உப்பில் இருக்கின்றன. ஆனால், `இந்த தாதுச்சத்துகள் எல்லாம் உப்பு மூலம் மட்டுமே கிடைக்கும்' என்பதில்லை. பழங்கள், காய்கறிகள் மூலமும் கிடைக்கும். எனவே, உப்பைக் குறைத்துக்கொண்டாலும் போதியச் சத்துகளைப் பெறமுடியும். அதேநேரத்தில், மற்ற தாதுச்சத்துகளை விடவும் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது.  நாளொன்றுக்கு ஒருவருக்கு 1,500 மில்லி கிராமுக்கு மிகாமல் சோடியம் போதுமானது" என்கிறது `அமெரிக்கா ஹார்ட் அசோஷியன்'. அதாவது, ஒரு டீஸ்பூனில் பாதிக்கும் குறைவான உப்பே ஒரு நாளைக்குப் போதுமானது. ஆனால், பல்வேறு வழிகளில், நம்மையறியாமல் ஒரு நாளில் சராசரியாக மூன்று டீஸ்பூன்கள் வரை உப்பைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுதான் பல உடல்நலக் குறைபாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, உப்பை அளவோடு உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். உப்பைக் குறைத்துச் சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும். முக்கியமாக, ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம்." என்கிறார் உணவியல் நிபுணர் மேனகா.



Trending Articles

Sponsored