மருத்துவக் காப்பீட்டில் மன நோய்களுக்குச் சிகிச்சை - மறுவாழ்வுக்கு வழிவகுக்குமா?



நாம் உடல்நலத்தில் காட்டும் அக்கறையை மனநலத்துக்குக் காட்டுவதில்லை. மனநலம் சார்ந்த பிரச்னைகளை அடையாளம் கண்டு சிகிச்சை பெறும் அளவுக்கு நம்மிடையே விழிப்புஉணர்வும் இல்லை. தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் காப்பீட்டுத் திட்டங்களிலும் மனநலம் முக்கியத்துவம் பெறவில்லை. இந்த நிலையில், மன நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐஆர்டிஏஐ) அறிவுறுத்தியுள்ளது. 

மன நல மருத்துவச் சட்டம், 2017 மே,  29-ம் தேதி அமலுக்கு வந்தது. அதில் மன நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களாகியும், அதில் குறிப்பிட்டுள்ள விதிகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. `மனநல மருத்துவச் சட்டத்தில் வரையறுத்த விதிகளின்படி மனநோயாளிகளின் சிகிச்சைக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்' என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பிற நோய்களுக்கு எவ்வாறு காப்பீடு அளிக்கப்படுகிறதோ, அதே முறையை இதற்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ, கேட்டுக் கொண்டுள்ளது. 

Sponsored


Sponsored


``காப்பீட்டுத் திட்டத்தில் மன நோய்களைக் கொண்டுவந்தது எந்த வகையில் பலன் தரும்?" மனநல ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் கேட்டோம்.

Sponsored


``பொதுவாக, உடலில் ஏதாவது பிரச்னை என்றால் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதுவே மன நலப்பிரச்னை என்றால் தயக்கம்

 காட்டுகிறார்கள். முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். பணிச் சூழலால் ஏற்படும் மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், `அது தானாக சரியாகிவிடும்' என்று நினைப்பவர்கள்தான் இங்கு அதிகம். விழிப்புஉணர்வு இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும், மனநலப் பிரச்னைக்கான சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்று நினைப்பதும் இன்னொரு காரணமாகும். காப்பீட்டுத் திட்டத்தில் மனநலச் சிகிச்சைகளும் வந்தால், கண்டிப்பாகச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், மனநலப் பிரச்னைகளுக்கும் காப்பீடு இருப்பதால், பொதுவான உடல்நலப் பரிசோதனையின்போது மனநலனுக்கும் சேர்த்துப் பரிசோதிக்க வழி ஏற்படும். இதன்மூலம் மனநலப் பிரச்னை இருப்பது தெரியாதவர்களும் அதைத் தெரிந்துகொண்டு சிகிச்சைக்காக வருவார்கள். எனவே, இது ஒருவகையில் மனநலம் தொடர்பான விழிப்புஉணர்வாக அமையும். 

மன அழுத்தம், மனச் சோர்வு, மனப் பதற்றம் (anxiety), அச்சக்கோளாறு, மனச் சிதைவு (Schizophrenia), இருமனக் குழப்பம் (Bipolar), பி.டி.எஸ்.டி (post-traumatic stress disorder), தீவிர மனநிலை என மனநலப் பிரச்னைகளில் பலவகை உள்ளன. இதில், எந்தெந்தப் பிரச்னைகளை இந்தக் காப்பீட்டில் கொண்டுவருகிறார்கள் என்ற முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை. சில சிகிச்சைக்கு நீண்டநாள் அல்லது ஆயுள் முழுவதும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இதுபோன்ற நோய்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கொடுக்கப்போகிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். குறிப்பாக, காப்பீடு எடுப்பதற்கு முன் ஏதேனும் பிரச்னை இருந்தால், அது காப்பீட்டில் சேர்க்கப்படாது. எனவே, பிறவியிலேயே ஆட்டிசம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தத் திட்டத்தில் பயனிருக்காது. எனவே, அவர்கள் பயன் பெறவும் ஏதாவது வழிவகை செய்தால் நல்லது. அத்துடன் மற்ற பிரச்னைகளுக்கு உள்ளதுபோல, மனநலப்  பரிசோதனைகளையும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தால் இது முழுமையான பயனளிக்கும்" என்கிறார் சித்ரா அரவிந்த்.

``நம் நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் நலன்களைப் பேணும் வகையில் ‘மனநலச் சட்டம் 1987’ செயல்பட்டு வந்தது. 29 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்துவந்த இந்தச் சட்டத்தை நீக்கி விட்டு, கடந்த ஆண்டு மத்திய அரசு `மனநலச் சட்டம்-2017’  என்ற புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு, மனநல ஆரோக்கியம் அளிப்பதும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களுக்குச் சேவை செய்வதுமே.

அந்தப் புதிய சட்டம் மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்துக் கட்டிப்போடுவதற்கு தடை விதித்தது. மனநலம் பாதித்த ஒருவர் தற்கொலை செய்ய முயன்றால் அதற்காக ஓராண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கும் தண்டனைச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது. `ஷாக் தெரபி’ எனப்படும் மின்அதிர்ச்சி சிகிச்சை அளிப்பதை புதிய சட்டம் தடை செய்தது. புதிய சட்டத்தில் பல புதிய சலுகைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, மனநலம் பாதித்தோருக்கு மருத்துவக் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இந்தச் சட்டம் மிகவும் காலதாமதமாகவே அமலுக்கு வந்துள்ளது.  

தாமதமாக வந்தாலும் காப்பீட்டுத் திட்டத்தில் மனநோய்களைக் கொண்டுவந்தது மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று. அதே சட்டத்தில், மனநலம் பாதித்தவர்களை மாநில அரசோ, மத்திய அரசோ பராமரிக்க வேண்டியது கடமையாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் இல்லாததால்தான், மனநலம் பாதித்தோரை குடும்பத்தினரே கைவிடும் சூழல் உள்ளது. உதாரணத்துக்கு, வடமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் லாரிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றி அனுப்பும் அவலம் தொடர்கிறது. எனவே, இதுபோன்ற காப்பீட்டுத்திட்டங்களால் அவர்களுக்கு ஒருவகையில் பயன்கிடைக்கும். 

மனநலம் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை உறுதி செய்ய ஏற்கெனவே கைவிடப்பட்டவர்களை அரசே கண்டறிந்து அவர்களுக்கான மறுவாழ்வு மையங்களை அமைக்கவேண்டும். மேலும், அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தினருக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதேநேரத்தில் மனநல மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் இருக்கின்றன. இன்னொரு பக்கம் மனநல மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதால் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க மருத்துவ மாணவர்கள் தயங்குகின்றனர். இவற்றையெல்லாம் சரிசெய்தால் மருத்துவர்கள் பலன்பெறுவதுடன் மனநலம் பிரச்னையுள்ளவர்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்" என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளரும், மூத்த மருத்துவருமான ஜீவானந்தம்.



Trending Articles

Sponsored