சாலைவிபத்தில் சிக்கியவர்களை முழுமையாகக் காக்கும் `தாய் திட்டம்!'Sponsoredவிபத்து... கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழக்கூடிய ஒன்று. எதிர்பாராத சாலைவிபத்தில் சிக்கி ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடன் அவரது லட்சோப லட்சக் கனவுகளும் சேர்ந்து புதைக்கப்படும். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தால், பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு செயலைச் செயல்படுத்தும் மும்முரத்தில் இறங்கியிருக்கிறது தமிழக அரசு. 

இந்தியாவில் தினந்தோறும் 1,317 சாலை விபத்துகள் நடக்கின்றன. கடந்த 2016 - ம் ஆண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்தில் இறந்து போயிருக்கின்றனர்; ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இவையனைத்தும் கணக்கில் வந்த விபத்துகள்தாம்; கணக்கில் வராத விபத்துகள் ஏராளம். அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. 2016-ம் ஆண்டில் மட்டும் 17,200 பேர் சாலை விபத்தில் இறந்து போயிருக்கிறார்கள். ஆண்டுதோறும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Sponsored


இப்படி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொண்டுவரப்பட்டதே `தாய் திட்டம்'. விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் திட்டமாகக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. சாலை விபத்துகள் மட்டுமல்லாமல், மாரடைப்பு, ஸ்ட்ரோக், தீ விபத்து, விஷமருந்துதல், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என ஆறு விஷயங்களை முன்னிலைப்படுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Sponsored


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் விபத்து சிகிச்சைப் பிரிவுகளின் நடைமுறைகளைப் பின்பற்றி இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான ஒரு குழு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. விபத்து சிகிச்சைகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக விக்டோரியா மாநில அரசுடன் தமிழக சுகாதாரத் துறை புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. 

தாய் திட்டத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்ற சிகிச்சைகளைவிட எந்த விதத்தில் வேறுபடுகிறது? 

தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் மற்றும் தாய் திட்டத்துக்கான ஆணையர் தரேஷ் அகமதுவிடம் கேட்டோம். 

 ``விபத்துக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஓரிடத்தில் விபத்து ஏற்பட்டால், விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய முதல் பொறுப்பு விபத்து நடந்த இடத்தைச் சுற்றி வசிக்கும் மனிதர்களுத்தான் இருக்கிறது. அவர்கள்தாம் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவேண்டும். எனவே, அதிகமாக விபத்து நடக்கும் இடங்களைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், அந்த இடங்களைச் சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி (First responders training) அளிக்கிறோம். அதில் முக்கியமாக விபத்து நடந்தவுடன் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிச் சொல்லித் தருகிறோம்.

அதன்படி விபத்து ஏற்பட்டதும் 108 ஆம்புலன்ஸை அழைத்தால், அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்துவிடும். ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வோம். அங்கே சிகிச்சைகள் அளிக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் அங்கிருந்து அருகிலுள்ள மாநகர மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காகவே தனியாக ஆம்புலன்ஸ் வசதிகள் ( Inter facility transfer) உள்ளன. உதாரணமாகப் பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரிடத்தில் விபத்து ஏற்பட்டால், முதலில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவமனைக்கும் தேவைப்பட்டால் அங்கிருந்து திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 

தமிழ்நாட்டில் நடக்கும் விபத்துகள் பற்றி `ஜிபிஎஸ்' கருவி உதவியுடன் குறித்து வைத்துக் கொள்வோம். அதன்படி எந்தப் பகுதியில், எந்தக் காலகட்டத்தில் விபத்துகள் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகப்படுத்துவோம். உதாரணமாக பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லும் காலங்களில் தேனி, தென்காசி பகுதிகளில் அதிகமாக விபத்துகள் நடக்கும். அப்போது அந்தப் பகுதிகளில் ஆம்புலன்ஸ்களை அதிகப்படுத்துவோம். அதேபோல, பொங்கல், சமயபுரம் திருவிழா காலங்கள் என எந்தக் காலத்தில் எங்கே தேவையோ அங்கே ஆம்புலன்களை நிறுத்தி வைப்போம்.

சென்னையில்கூட காலையில் ஒரு பகுதியிலும், மாலையில் ஒரு பகுதியிலும் ஆம்புலன்ஸ்களை அதிகப்படுத்துவோம். வேறோர் இடத்திலிருந்து ஆம்புலன்ஸ் வருவதற்கு ஆகும் நேரங்களைத் தவிர்த்து, மரணங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம்.  ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போதே, மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்யுமாறு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். காயமடைந்தவர் மருத்துவமனைக்கு போய்ச் சேரும் முன்பே அவருக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகள் அனைத்தும் மருத்துவமனையில் தயாராக இருக்கும். மருத்துவர்களும் சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பார்கள்.

நோயாளியின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்களை சிவப்பு, பச்சை, மஞ்சள் எனப் பிரித்துவிடுவார்கள். சிவப்பு நிறம் என்றால் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டியவர்கள், மஞ்சள் என்றால் கொஞ்சநேரம் அப்சர்வேஷனில் வைத்திருக்க வேண்டியவர்கள், பச்சை என்றால் கொஞ்ச நேரத்திலேயே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்களாவர்.

உதாரணமாக, விபத்தில் காயமடைந்தவர்களுக்குப் பலவகையான சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். தலையில் ரத்தம் ஒழுகுதல், கால் எலும்புகள் கடுமையான பாதிப்பு, இதயத்துடிப்பில் தொய்வு என வேறுபட்ட பிரச்னைகள் இருக்கும். எனவே, அவரை முதலில் எங்கே அழைத்துச் செல்வது என்ற குழப்பம் வரும். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவே மல்டி டிசிபிளனரி கிரிட்டிக்கல் கேர் யூனிட் (Mdccu)இருக்கிறது. இதய மருத்துவர், நரம்பியல் மருத்துவர், எலும்பு மற்றும் மூட்டு நோய் மருத்துவர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி, முதலில் என்ன சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை விவாதித்து முடிவெடுப்பதற்காக இந்த யூனிட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தேவையான சிகிச்சை அளித்து முழுமையாகக் குணப்படுத்துகிறோம்.

 

அவசர சிகிச்சை முதல் குணமாகி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்வரை முறையாகக் கண்காணித்துச் சிகிச்சையளிக்கிறோம். தமிழ்நாட்டில் 75 மருத்துவமனைகளில் தற்போது இந்தத் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்காகவே தற்போது புதிய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது`` என்கிறார் தரேஷ் அகமது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் 8.3 சதவிகிதத்திலிருந்து 5.6 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் பேசினோம்.

 `` 'தாய்' திட்டத்தின்படி நோயாளி ஆம்புலன்ஸிலிருந்து இறங்குவது முதல் ஒவ்வொரு பரிசோதனைகளும் எவ்வளவு நிமிடங்களில் நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு என்னென்ன மருந்துகள் கொடுக்கவேண்டும் என்பது வரை சில வழிமுறைகள் இருக்கின்றன. உலகத் தரத்திலான இந்தத் திட்டத்தை, 24 மணி நேரமும் செயல்படுத்தி சிகிச்சையளித்து வருகிறோம். இந்தத் திட்டத்தின் வாயிலாகப் பலரது உயிரைக் காப்பாற்ற முடிகிறது`` என்கிறார் ஜெயந்தி.Trending Articles

Sponsored