புரோட்டீன் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? #Alert



Sponsored



உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று சிலர் ஜிம்மில் தவம் கிடப்பார்கள். சிலர் 'டயட்' என்ற பெயரில் புதிய புதிய  உணவு முறைகளைப் பின்பற்றுவார்கள். சிலர், சிகிச்சை முறைகளை நாடுவார்கள். ஆனால், இதெல்லாம் பல பக்க விளைவுகளை உருவாக்குமேயொழிய பெரிய அளவில் பயனளிக்காது.  

``சிலர், உடல் எடைக்குக் காரணம் புரோட்டீன்தான் என்று நினைத்து, புரோட்டீன் உள்ள உணவுகளை முழுமையாகத் தவிர்த்துவிடுவார்கள். அப்படிச் செய்பவர்கள், ஒரு கட்டத்தில் நோயாளியாகி விடுவார்கள்" என்று எச்சரிக்கிறார், மூத்த உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன். 

Sponsored


``உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க பலரும் பல்வேறுவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உடலின் வளர்சிதை மாற்றத்தில் புரோட்டீன் சத்தின் பங்கு முக்கியமானது. இது உடலின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. இதைக் கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பதன்மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே, புரோட்டீன் உணவுகளைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க சிலர் முயல்கிறார்கள். இதனால், உடலுக்குக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காமல் உடல் மிகவும் சோர்வடைந்துவிடும். 

Sponsored


புரோட்டீன் உடலுக்குச் சக்தி தரக்கூடியது. தோல், சதை, ஜவ்வு ஆகியவற்றிலுள்ள அணுக்களின் வளர்ச்சியில் அது முக்கியப் பங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் புரோட்டீன் உணவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் ஆகியவற்றில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது. 100 கிராம் சோயாபீன்ஸில் 43 கிராம் புரோட்டீன் சத்து இருக்கிறது. பால் பொருள்கள், பருப்பு வகைகளிலும் புரோட்டீன் உள்ளது. 

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். பொதுவாக, நான்கு இட்லி சாப்பிட்டால் ஒருவருக்குப் பசி தீரும் என்றால், அவர் மூன்று இட்லி மட்டுமே சாப்பிடுவது நல்லது. சிலருக்கு சில உணவுகள் பிடிக்கும். அதை அளவில்லாமல் சாப்பிடுவார்கள். பிடித்த உணவை அதிகமாகச் சாப்பிடும்போது அவை கொழுப்பாக மாறி, உடலில் சேமிக்கப்படும். அதனால், உடல் எடை அதிகரிக்கும். அதேபோல, நொறுக்குத் தீனியை தவிர்ப்பதன்மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். 

அரிசி, சர்க்கரை, மைதா, உப்பு போன்ற வெள்ளை நிறமுடைய உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்படும் பொருள்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் உடல்நலத்தைப் பாதிப்பதுடன் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகும். உடல் எடையையும் அதிகரிக்கச்செய்யும். சரிவிகித உணவுகளை அளவாக உண்பதன் மூலம் உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைக்க முடியும். 

இனிப்புகள் அதிகம் உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். எனவே, இனிப்பு உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். பருவ காலங்களில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுவது உடல் எடை கூடாமல் தவிர்க்கப்படும். தினமும் அவரவர் வயது, உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சியை மேற்கொள்வதால் உடல் எடையைக் குறைக்கலாம். 

தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம். 

பட்டினி கிடப்பதைத் தவிர்ப்பதுடன் சரியான நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும். அது உடல் எடை கூடுவதைத் தடுக்கும். மனஅழுத்தம், கவலை போன்றவற்றிலிருந்து விடுபட மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றலாம். நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் மனம் விட்டுப் பேசுங்கள். தொடர்ந்து, உடலின் எடையைக் கண்காணித்து உயரத்துக்கேற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்” என்கிறார் தாரிணி கிருஷ்ணன். 

`புரோட்டீன் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைத்துவிடலாம்’ என எண்ணி, அத்தகைய உணவுகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து, உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள முயல்வோம்! 



Trending Articles

Sponsored