கேரளாவிலிருந்து வருகிறது எலிக்காய்ச்சல்... செருப்பில்லாமல் நடக்காதீர்கள்! #Leptospirosis



திர்பாராமல் கொட்டித்தீர்த்த மழை ஏற்படுத்திய இழப்புகளிலிருந்து கேரள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். பேரிடர் ஏற்படுத்திச்சென்ற பொருளாதார இழப்புகளைக் காட்டிலும், சுகாதாரப் பிரச்னைகளே அங்கு வாழும் மக்களையும் ஆளும் அரசையும் பரிதவிக்க வைத்துள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவி மக்களை வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவற்றையெல்லாம் விட கேரள மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பது `லெப்டோஸ்பைரோசிஸ்' (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான்.

இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்தக் காய்ச்சலின் தாக்கம் தமிழகத்திலும் பரவக்கூடும் என்கிறார்கள். தமிழக சுகாதாரத்துறை இது தொடர்பான ஆய்விலும் தற்காப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

Sponsored


Sponsored


எலிக்காய்ச்சல் என்றால் என்ன? அது எப்படிப் பரவும்? அறிகுறிகள் என்னென்ன?

Sponsored


பொது மருத்துவர் அர்ஷத் அகிலைச் சந்தித்துக் கேள்விகளை முன்வைத்தோம். 

``எலிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் எலிக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு. அசுத்தமான தண்ணீரில் 'லெப்டோஸ்பைரா'

(Leptospira) என்ற நுண்ணுயிர் இருக்கும். அந்தத் தண்ணீரை குடிக்கும்போதோ, அந்த தண்ணீர் உடலில் படும்போதோ எலியின் உடலை அந்த நுண்ணுயிர் தாக்கும். அப்படித் தாக்கப்பட்ட எலிகளின் எச்சில், சிறுநீர் மூலமாகத்தான் மனிதர்களுக்கு `லெப்டோஸ்பைரோசிஸ்' (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது. 'லெப்டோஸ்பைரா' நுண்ணுயிரில், `லெப்டோஸ்பைரா இன்டெரோகன்ஸ்' (Leptospira interrogans), `லெப்டோஸ்பைரா பைஃபிளக்சா' (Leptospira biflexa) என இரண்டு வகைகள் உண்டு. இதில் முதல் வகை மிகவும் ஆபத்தானது.  

மழைக்காலத்தில், வீட்டில் பயன்படுத்தும் நீரிலும், வீதியில் தேங்கியிருக்கும் நீரிலும் எலியின் கழிவுகள் கலக்கும்.  அந்த நீரில் வெறுங்காலுடன் நடந்தால் எலிக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு. பாதத்தில் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் இருந்தால்   'லெப்டோஸ்பைரா'  நுண்ணுயிர் எளிதாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இந்த நுண்ணுயிர் உடலுக்குள் சென்றவுடன், காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. காய்ச்சலின் முதல் நிலையிலேயே பிரச்னை சரியாகிவிடும். இப்படி, எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் தாங்கள் பாதிக்கப்பட்டது தெரியாமலே அந்த நோயைக் கடந்திருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும், பாதிப்பு அதிகமாகும். இரண்டு நாள்கள் முதல் இருபத்தைந்து நாள்களுக்குள் காய்ச்சலின் வீரியம் அதிகரித்து, பாதிப்புகள் அதிகமாகும். படிப்படியாக உறுப்புகள் செயலிழக்கும். இறுதியில் உயிரிழப்பு கூட நேரலாம்.

அறிகுறிகள் 

கடுமையான தலைவலி, குளிர்க்காய்ச்சல், உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி மற்றும் குமட்டல், வயிற்றுப்போக்கு, கண்கள் சிவப்பது போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். ஒரு வாரத்துக்கும் மேலாக பாதிப்புகள் நீடிப்பதுடன், அதன் தீவிரத்தன்மை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போகும்.

கவனிக்காமல் விட்டால் உடல் உறுப்புகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக  மூளை, கல்லீரல், நுரையீரல் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், உடலின் ஏதாவதொரு பகுதியிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படத் தொடங்கும். எந்த உறுப்பு முதலில் பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப அடுத்தகட்ட பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக, கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் வீக்கம், கல்லீரல் அழற்சி, மஞ்சள்காமாலை ஏற்படும். நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் நிமோனியா  வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்துடன் ரத்தம் கசியும். 

சிகிச்சை

இந்நோயைக் கண்டறிய, `ஐ.ஜி.எம் எலிசா ரேபிட் டெஸ்ட்' (IgM ELISA Rapid Test) என்ற பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகளைப் பொறுத்து உடலில் எந்த உறுப்பு பாதிப்படைந்துள்ளது என்பது கண்டறியப்படும். அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்படும்.  

பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தே, சிகிச்சை இருக்கும். உதாரணமாக, காய்ச்சல் நிலையிலேயே கண்டறியப்பட்டால் மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். ஒரு வாரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்தால், உறுப்புகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கும். அதைப்பொறுத்தே சிகிச்சைகள் அமையும். இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது..." என்கிறார் அர்ஷத் அகில்.

எலிக்காய்ச்சல் வராமல்  தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

*  காய்கறிகளை நன்றாகக் கழுவியபிறகு பயன்படுத்த வேண்டும். நீரை, காய்ச்சிக் குடிக்க வேண்டும். 

* பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்படும் நீரில் எலியின் கழிவுகள் கலக்க வாய்ப்புகள் அதிகம். அந்த நீரைக்கொண்டு முகம் கழுவினாலோ, குளித்தாலோ எலிக்காய்ச்சல் வரலாம். 

* செருப்பணியாமல் வெளியே செல்லாதீர்கள். 

* வீடு திரும்பியதும், கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

* வீடுகளில் எலித்தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலி, பெருச்சாளி நடமாட்டம் இருக்கும் வீடுகளில், அனைத்துப் பாத்திரங்களையும் இறுக்கமாக மூடிவைக்க வேண்டும். காய்கறி, பழங்களையும் பாத்திரங்களில் போட்டு மூடிவைக்க வேண்டும். 

* உடலில் காயம், சிராய்ப்பு, புண் ஏற்பட்டால் தாமதிக்காமல் `டி.டி' தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* வீட்டில் எந்த இடத்திலும் தண்ணீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

* காய்ச்சல் வந்தவுடன், தாமதிக்காமல் மருத்துவமனை சென்று ஆலோசனை பெற வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், பரிசோதனை செய்து 'எந்த வகைக் காய்ச்சல்' என தெரிந்துகொள்வது நல்லது.

* எலி மட்டுமன்றி, பூனை, நாய், ஆடு, பன்றி, குதிரை போன்ற செல்லப்பிராணிகளின் சிறுநீர், கழிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்! 

எலிக்காய்ச்சல் பீதி தமிழகத்திலும் பரவி வருகிறது. இதுபற்றி தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம். 

``கேரளாவில் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருப்பதால்தான் அங்கு எலிக்காய்ச்சல் அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது வரை பாதிப்புக்கான சூழல் இல்லை. கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும், கேரள மக்கள் வருகை அதிகமுள்ள கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மிருகங்களிடமிருந்து பரவும் தொற்றுநோய்களைத் தடுக்க, உடல்ரீதியாக பாதிப்புள்ள விலங்குகளுக்கு கால்நடை மருத்துவக்குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம்" என்றார்.

தமிழகத்தில் இதுவரை எலிக்காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், பருவமழை தொடங்க இருப்பதால் இப்போதிருந்தே நாம் விழிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்!



Trending Articles

Sponsored