மெலனோமா தோல் புற்றுநோய்க்கு மருந்து! - சாதித்த ஆய்வாளர்கள்



Sponsored



உலக அளவில் அதிக உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் ஒன்று மெலனோமா (Melanoma). சரும புற்றுநோய் வகைகளில் ஒன்றான இது முகம், கை, கால், பிறப்பு உறுப்பு உட்பட உடலின் எந்தப் பாகத்திலும் வரக்கூடும். இந்தப் புற்றுநோய்க்கு இதுவரை சிகிச்சைகள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தது. இப்போது, குறுகிய காலத்திலேயே முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முதற்கட்டமாக, எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனை 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது.  

கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Scripps Research Institute) பேராசிரியர் போகர் (Prof. Boger) மற்றும் குழுவினர்தான் இந்த மருந்தைக் கண்டறிந்துள்ளனர். இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகள் யாவும், மெலனோமாவால் பாதிக்கப்பட்டவை. மூன்று பிரிவுகளாக எலிகளைப் பிரித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்டறியப்பட்டுள்ள புதிய மருந்து, டிப்ரோவோசிம் (Diprovocim) என்ற மூலக்கூறுகளால் ஆனது. புற்றுநோய்க்காக தரப்படும் மற்ற மருந்துகள் மற்றும் சிகிச்சைகளோடு சேர்த்து இந்த மருந்தையும் வழங்க வேண்டும்.

Sponsored


முதல் பிரிவு எலிகளுக்கு, நடைமுறையிலுள்ள புற்றுநோய் மருந்துகளும் இரண்டாவது பிரிவு எலிகளுக்கு நடைமுறையிலுள்ள புற்றுநோய் மருந்துகளோடு டிப்ரோவோசிம் (Diprovocim) மருந்தும் வழங்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு, நடைமுறையிலுள்ள புற்றுநோய் மருந்துகளோடு ஆலம் (alum) வகை ரசாயனம் அளிக்கப்பட்டது. 

Sponsored


முதல் பிரிவு எலிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் 'டிப்ரோவோசிம்' மருந்து தரப்பட்ட இரண்டாவது பிரிவு எலிகள், நூறு சதவிகிதம் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளன. அதுவும் 54 நாள்களுக்குள். மேலும், மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இந்த மருந்து தடுத்துள்ளது.  

மூன்றாவது பிரிவு எலிகள், 25 சதவிகிதம் மட்டுமே பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளன. டிப்ரோவோசிம் மருந்து செலுத்தப்பட்டு, குணமடைந்த எலிகளுக்கு, செயற்கையாக 'மெலனோமா' பாதிப்பை மீண்டுமொருமுறை ஏற்படுத்த ஆய்வாளர்கள் முயன்றார்கள். ஆனால், எலிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 

அடுத்தகட்டமாக மெலனோமாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் மனிதர்களுக்கு டிப்ரோவோசிம் மருந்து தரப்பட்டு ஆய்வு செய்த பிறகு மிக விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது இந்த மருந்து!



Trending Articles

Sponsored