வளைந்த முதுகை நிமிர்த்த ரத்த இழப்பில்லாத `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி! #ModernMedicine #FusionlessScoliosisSponsoredமுதல் 18 வயது வரையிலான பெண்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடு, `முதுகுத்தண்டுவட வளைவு' எனப்படும் `ஸ்கோலியோசிஸ்'. இந்தியாவில் அண்மைக்காலமாக இந்தக் குறைபாட்டின் தாக்கம் அதிகமாகி வருகிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் இரண்டு சதவிகிதம் முதல் மூன்று சதவிகிதம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுகின்றனர். பிறவிக் குறைபாடான இதனால் பாதிக்கப்படும் சிறுமிகள், இயல்பாக நடக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உடல் வளைந்துவிடும். இதயம், நுரையீரல் பாதிப்புகளும் ஏற்படும். 

தொடக்க நிலையில் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்தால், முதுகைக் கிழித்து தண்டுவடத்தில் டிஸ்க் வைத்து நிமிர்த்தி சிகிச்சையளிப்பார்கள். பிற்காலத்தில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாக, `ஃப்யூஷன் ஸ்கோலியோசிஸ்' எனப்படும் அறுவை சிகிச்சை முறை வந்தது. இந்த சிகிச்சையில் ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். உடல் நிமிர்ந்தாலும் எதிர்காலத்தில் இயல்பாகச் செயல்பட முடியாது. 

Sponsored


இதற்கும் தற்போதைய நவீன மருத்துவம் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது. `ஃப்யூஷன் - லெஸ் ஸ்கோலியோசிஸ்' (Fusionless Scoliosis) என்ற நவீன அறுவை சிகிச்சைமுறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக, கடந்த வாரம் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயா என்ற சிறுமிக்கு,  நவீன `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார், முதுகுத்தண்டுவட நிபுணர் சஜன் கே ஹெட்ஜ். 

Sponsored


இந்தப் புதிய சிகிச்சை முறை குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மருத்துவர் சஜன். 

``குழந்தைகள் வளருங்காலத்தில், சிலருக்கு முதுகெலும்பு அதன் இயல்பான இடத்திலிருந்து விலகத் தொடங்கும். இந்த நிலையை மருத்துவ மொழியில் `அடலஸன்ட் இடியோபத்திக் ஸ்கோலியோசிஸ்' (Adolescent Idiopathic Scoliosis) என்று சொல்வோம். இவர்களுக்கு உடல்  வளையத் தொடங்கும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிப்படையும். இந்தியாவில் இந்தக் குறைபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏன் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. 45 டிகிரிக்கு மேல் எலும்பு வளைந்துவிட்டால், `ஃப்யூஷன்' என்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். தற்போது, `ஃப்யூஷன்' சிகிச்சைக்கு மாற்றாக `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' வந்திருக்கிறது. தண்டுவடத்தை நேராக்குவதுதான் இத்தகைய அறுவை சிகிச்சையின் நோக்கம். 

* முதுகுப்பகுதி முழுவதும் கிழிக்கப்பட்டு (open surgery), உள்ளிருக்கும் வளைந்த தண்டுவடத்தில் டிஸ்க் வைத்து அதன் மூலம் தண்டுவடம் நிமிர்த்தப்படுவது ஃப்யூஷன் சர்ஜரி. டிஸ்க், டைட்டானியம் (Titanium) உலோகத்தால் செய்யப்படுவது. பாரம்பர்ய முறையில் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சை, உயர வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம். மேலும் இவர்கள்  நடனம் ஆடக் கூடாது, வேகமாக ஓடக் கூடாது, சாகசங்கள் செய்யக் கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். குணமடைந்தது போல இருந்தாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். 

* தற்போது வந்துள்ள `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி'-யில், முதுகில் மேலும் கீழும் சிறிதளவு கிழித்து, அவற்றின் வழியாகத் தண்டுவடத்துக்கு இடையே `டியூபுலர் ரிட்ராக்டர்' (tubular retractor) என்ற கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி மூலம் தண்டுவடத்தில் தேவையான இடத்தில் திருகாணிகளைப் (Rods and screws) பொருத்திக்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து `ஸ்பெஷல் மைக்ரோஸ்கோப்' மற்றும் `ரியல் டைம் எக்ஸ்-ரே படங்கள்' (real-time X-ray images) மூலம் தண்டுவடத்தை முழுமையாகக் கண்காணித்து, திருகாணிகளின் வழியாக கேபிள் ஒன்று செலுத்தப்படும். பாலி எத்திலின் தெரபெதலேட் (polyethylene terephthalate) என்ற ரசாயனத்தின் மூலம் அந்த கேபிள் செய்யப்படுவதால், குழந்தை வளரும்போது தண்டுவடம் நீட்சியடைவதை எந்தவகையிலும் பாதிக்காது. இறுதியாக, செலுத்தப்பட்ட கேபிளை நிமிர்த்துவதன் மூலம் தண்டுவடம் நிமிர்த்தப்படும். 

பிறவிக்குறைபாடான `ஸ்கோலியோசிஸ்', 9 வயதுக்குப்பிறகுதான் தெரியத் தொடங்கும். பெரும்பாலும் பெண் குழந்தைகளே பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளின் வளர்ச்சி, ஒன்பது முதல் பதினேழு வயதுக்கு உட்பட்ட காலத்தில்தான் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் குழந்தையின் பரிணாம வளர்ச்சியில் எவ்விதச் சிக்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாது. `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' பாதுகாப்பான சிகிச்சை முறையாக இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. மேலைநாடுகளில், சில பெரியவர்களுக்கும்கூட இது செய்யப்படுகிறது. வருங்காலத்தில் இந்தியாவில் எல்லா வயதினருக்கும் இது சாத்தியமாகலாம்..." என்கிறார் டாக்டர்  சஜன்

இந்தியாவிலேயே முதல்முறையாக டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயாவுக்கு `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.  ஷ்ரேயாவுக்கு இப்போது 14 வயது.  பாஸ்கட்பால் பிரியையான ஷ்ரேயா, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அதன்பிறகு, எல்லாக் குழந்தைகளையும்போல, அவளும் இயல்பாக ஓடியாடி விளையாடுவாள். சாகசங்களுக்கு தயாராவாள்..!   Trending Articles

Sponsored