மனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது - 8! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்Sponsoredமருத்துவர் கு.சிவராமன் 

Sponsored


சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது மெள்ள மெள்ள உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவம் பெறும். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்கத் தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று... கரிசனம் தரும் பேச்சு. மற்றொன்று... கனிவு காட்டும் முகமொழி. 

Sponsored


மன நோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவை. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும். அதற்குத் தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை. உலக சுகாதார நிறுவனம், ‘உடல்நலம்’ என்பதை, `நலம் எனப்படுவது, உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல்நலம்’  என வரையறுத்திருக்கிறது. கால மாற்றம், நவீன வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் என்பது எல்லோருக்கும் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. 

பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள். 

பெரும்பாலானவர்களுக்கு இரவு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் அறிகுறிதான். தூங்கச் செல்வதற்கு முன்னர் இனிமையான, மகிழ்வான தருணங்கள் அவசியம். உடற்பயிற்சியும் பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்.   

இங்கே மன அழுத்தம் குறைக்கும் உணவுகள் சில... 

* மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 

* மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.

* உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 

* பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும். 

* மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 

* தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. 

* எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும்; செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 

* உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோயை ஏற்படுத்தக் கூடியவை. நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். 

தொகுப்பு: பாலு சத்யாTrending Articles

Sponsored