"கவர்மென்ட்டு டாக்டருங்கதான் என் புள்ளைக்கு சாமி!" ஒரு தாயின் கலக்கம்Sponsoredகுழந்தை பிரசவத்தின் போது ஏற்படும் ரத்தப்போக்கு அதிகரிப்பதால் பிரசவிக்கும் பெண்களின் மரண எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டு மிகவும் சிக்கலான சூழ்நிலையில் வந்த பெண்ணை தங்களுடைய முயற்சியால் காப்பாற்றி உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள். ''கவர்மென்டு டாக்டருங்கதான் என் புள்ளைக்கு சாமீ'' என்று கையெடுத்து கும்பிடுகிறார் அப்பெண்ணின் தாய் பழனியம்மாள்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆர்.டி.மலையைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மகாலெட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமுற்றார்.

Sponsored


இவர்களின் முதல் குழந்தை பிறந்ததும் இறந்துபோனதால் மிகுந்த எதிர்பார்ப்போடு தன்னுடைய இரண்டாவது பிரசவத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் மகாலெட்சுமி. அவரை வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் செக்கப்புக்காக காண்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, மகாலெட்சுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, வழக்கமாகக் காண்பிக்கும் தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தார் மனோகரன்.

Sponsored


அதன்பிறகு நடந்ததை விவரித்தார் மகாலெட்சுமி.“அன்னிக்கு திடீர்னு வயித்த வலி தாங்க முடியல. கூடவே ரத்தப்போக்கு. பயந்து போயிட்டேன். எங்க ரெண்டாவது குழந்தையையும் இழந்திருவேனோனு அலற ஆரம்பிச்சுட்டேன். நாங்க வழக்கமா பாக்கிற ஆஸ்பத்ரிக்கு போனோம். அங்க என்னைய செக் பண்ணின டாக்டர்ஸ் ஐ.சியூக்கு அனுப்பி வைச்சாங்க. ஆனாலும் உதிரப்போக்கு நிக்கவே இல்ல.

தொடர்ந்தார் அவரின் தாயார் பழனியம்மாள்,

“இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தபிறகும்கூட, பிள்ளைக்கு உதிரப் போக்கு குறையவே இல்லை.  அதனால் மூச்சுப்பேச்சு இல்லாமல் போனது. ஆறுநாள் அவசர சிகிச்சைப் பிரிவுல வைச்சுப் பார்த்தாங்க. கடைசியில குழந்தையை காப்பாத்த முடியாதும்மா... உங்க பொண்ணை காப்பாத்த முயற்சி பண்றோம்னு அவங்க சொன்னப்ப வெடிச்சு அழுதுட்டேன். ஆனாலும் மகளாவது கிடைக்கனும்னு வேண்டிகிட்டேன்.

டாக்டருங்க போராடினாங்க. பாட்டில் பாட்டிலாக ரத்தம் ஏத்தினாங்க. பெரும் போராட்டம் நடத்தி, பிள்ளையை உயிர் பிழைக்க வைச்சாங்க. அவங்க இல்லைன்னா இன்னிக்கு என் புள்ளைகூட என் முன்னாடி நின்னுட்டு இருக்க மாட்டாங்க" என்கிறார்கள் கண்ணீருடன். மகாலெட்சுமிக்கு நடந்த சிகிச்சை விவரங்களை விவரித்தார் அரசுபொதுமருத்துவமனை டீன் மேரி லில்லி.


“மகாலெட்சுமி இங்கு வரும்போது, அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்தது. அதிகமான உதிரப்போக்கினால், அவரின் நாடித்துடிப்புகள் குறைந்து கொண்டே இருக்கவே, அவரைக் காப்பாற்ற, அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்த 1¾லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டது. பிரசவத்தில் உண்டாகும் நஞ்சு கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புகளிலும் பரவியிருந்ததால், அடுத்தநாளும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அவற்றைச் சரி செய்தோம். தொடர் சிகிச்சை மற்றும் அவருக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கினாலும், அவரது உடலில் ரத்தம் அளவு மிக மோசமடைந்தது. அதனை அடுத்து அவருக்கு உரிய நேரத்தில், அடுத்தடுத்து 14 யூனிட் ரத்தம், 13 யூனிட் ரத்த சிவப்பணுக்கள், 30 யூனிட் ரத்த பிளாஸ்மா என 16.8லிட்டர் ரத்தம் அவரின் உடலில் ஏற்றினோம். இது மிக சிரமமான விஷயம். கொஞ்சம் தவறினாலும் நோயாளியை காப்பாற்ற முடியாது என்பதால், மிக கவனமாக இருந்தோம். ஒரு நோயாளிக்கு இவ்வளவு ரத்தம் ஏற்றி அவரை குணமடைய வைத்ததில், எங்கள் மருத்துவர்கள், பிரபா, சீனிவாசன், ஷகிலா பேகம், செல்வக்குமார், பூவதி, திருநிறைச்செல்வி ஆதிரை, பிரபா, மற்றும் பரத் எனப் பலரும் 6நாட்கள் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களை பாராட்ட வேண்டியது என் கடமை.முன்பெல்லாம் பிரசவ காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு பிரச்னைக்கு 30 ஆயிரம் பெண்களில் ஒருவர் என்கிற அளவில் பாதிப்புக்குள்ளானர்கள். இப்போ 500 பேருக்கு ஒருவர் என்கிற நிலையை அடைந்திருக்கிறார்கள்.

கர்ப்ப காலங்களில் கர்ப்பிணியின் உறவினர்கள், பெற்றோர்கள் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மருத்துவரிடம் தொடர்ச்சியாக பரிசோதனைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டியது அவசியம். உரிய நேரங்களில், முறையான சிகிச்சை, உரிய மருத்துவம் கொடுக்கவில்லை என்றால் உயிரைக் காப்பாற்றுவது கடினம்” என எச்சரித்தார்.

தாய்மார்களை காப்பாற்றுவோம்.Trending Articles

Sponsored