அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!
நிலவு கண்டு
அல்லி மலரும்
ஓஹோ... அதனால்தான்
அவள் கூந்தலில்
வைத்தபோது மட்டும்
வாடுகிறதோ?

- கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில் வளரக்கூடிய ஒரு கொடியாகும்.

Sponsored


Sponsored


தாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில் மலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின் இதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும். எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும். நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும் கொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. அல்லியின் இலை, பூ, விதை, கிழங்கு மருத்துவக்குணம் நிறைந்தவை.

Sponsored


அல்லியில் அதன் பூக்களுக்குத்தான் மருத்துவக்குணம் அதிகம். பூவின் சாற்றுடன் சிறிதளவு செந்தூரம் (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சேர்த்து 20 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெள்ளை அல்லிப்பூவையும் ஆவாரம்பூவையும் சம அளவு எடுத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதித்துக் கூழ் போல ஆனதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஆற வைத்து காலை, மாலை பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு, சொட்டு மூத்திரம் மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும். மேலும் உடல் சூடு தணிவதோடு ரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வரும். வெள்ளைப்படுதல், வெட்டை நோய் மற்றும் சூட்டினால் வரக்கூடிய கண் நோய்களும் குணமாகும். கண் சிவத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெறும் அல்லி இதழ்களைக் கண்களின்மீது வைத்துக் கட்டி வந்தாலே குணம் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிகள், இதன் இதழ்களை மட்டும் நீர் விட்டுக் காய்ச்சி 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி பால், தேனில் கலந்து சாப்பிட்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்க முடியும். விதையைத் தூளாக்கிப் பாலுடன் சேர்த்துக் குடித்து வர ஆண்களுக்குத் தேகப் பலம் கிடைப்பதோடு கல்லீரல், மண்ணீரல் பலம்பெறும்.

விதையுடன் ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி 1 முதல் 2 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பலம் கிடைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

அவுரி இலைச்சாறு, மருதாணி இலைச்சாறு தலா 100 மில்லி அளவு எடுத்து 100 கிராம் அல்லிக்கிழங்குடன் 35 கிராம் தான்றிக்காய் சேர்த்து அரைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்துக் காய்ச்சி தைலப்பதம் வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும். இதைத் தலைக்குத் தேய்த்து வந்தால் இளநரை மறைவதோடு, தலைமுடி செழித்து வளரும். பித்தக்கோளாறுகளும் சரியாகும். இதயப் பலவீனம், இதயப் படபடப்பு, ரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ்களைச் சேர்த்துக் காய்ச்சி கசாயமாக்கி குடித்து வந்தால் பலன் கிடைக்கும். இதைக் காலை, மாலை டீக்குப் பதிலாகக் குடித்து வரலாம். இதை சர்பத் செய்தும் அருந்தலாம்.

இலையை நீர் விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். அல்லி மலரில் காணப்படும் மகரந்தப்பொடியை காய வைத்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எரிச்சல், ரத்த மூலம், மாதவிடாயின்போது வரக்கூடிய பிரச்னைகள் சரியாகும்.Trending Articles

Sponsored