கால்களில் வியர்வை... ஏன், எதற்கு, தீர்வுகள்! #HealthTipsSponsoredவியர்த்து வழிந்து, தொப்பலாக நம் உடல் நனைந்து போவதை அனுபவப்பூர்வமாக உணரும் கோடை காலம் இது. காற்று வீசாத இடம், கொஞ்சம் வெப்பமான சூழல், கூட்ட நெரிசல் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லோருக்கும் வியர்க்கும். இது சகஜம். சிலருக்கோ சாதாரண நாள்களிலேயே அநியாயத்துக்கு வியர்க்கும். குறிப்பாக உடலின் மற்ற இடங்களைவிட கால்களில் மட்டும் அதிகமாக வியர்வை பொங்கிப் பெருகும். செருப்பையோ, ஷூவையோ கழற்றி வைத்திருந்தாலும்கூட கால்கள் சொதசொதவென நீரில் நனைந்த மாதிரி காணப்படும். இப்படி கால்களில் அதிகம் வியர்க்கக் காரணம் என்ன, அதற்கான சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் விளக்குகிறார் டாக்டர் சௌந்தரராஜ்...

``வியர்வை என்பது நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும் ஒரு செயல்பாடு. இது சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். மனிதனின் உடல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டைத்தான் கொண்டிருக்க வேண்டும். அதற்கும் அதிகமானால் ஏதோ தொற்று, அதன் காரணமாக ஜுரம், வேறு உடல்நலக் கோளாறு எனப் புரிந்துகொள்ளலாம்.

Sponsored


காலில் வியர்வை வடிவது என்பது ஒவ்வொரு மனிதரின் உடல் அமைப்பைப் பொறுத்து நடக்கும் ஒரு செயல். சிலருக்குச் சளி பிடித்தால் ஒரு நாளில் சரியாகும்; சிலருக்கு ஏழு நாள்களில் சரியாகும். அதுபோல வியர்வை என்பது மனிதர்களின் அவரவர் உடல் அமைப்பைப் பொறுத்து, பிறப்பிலிருந்தே நிர்ணயிக்கப்படுகிறது. உடலில் இரண்டுவிதமான நரம்பு மண்டலச் செயல்பாடுகள் (Nervous system) இருக்கின்றன. ஒன்று, நாம் இயக்கும்படி இயங்கும்; மற்றொன்று, நமது அனுமதியின்றி தானாகவே இயங்கும். அப்படி இயங்குபவை இதயம், கண், மூக்கு, நுரையீரல், குடல் ஆகியவை. இந்த வகையிலான நரம்பு மண்டலச் செயல்பாடு தனது வேலையை மிதமிஞ்சிச் செயல்படுத்தினால், `Fear anxiety’ என்று சொல்லக்கூடிய பய உணர்வு, படபடப்பு, மனக் குழப்பம் எல்லாம் உண்டாகும். முன்னர் சொன்னதுபோல பிறப்பிலிருந்தே இது தீர்மானிக்கப்படும்.

Sponsored


இப்படிப்பட்ட உணர்வுகள் உள்ளவர்களுக்குத்தான் அதிக வியர்வை ஏற்படும். காலில் மட்டுமல்லாமல் உள்ளங்கைகளிலும் வியர்வை ஏற்படக்கூடும். இதனால், பிறர் நம்மைத் தொடும்போது அவர்களுக்குக் கொஞ்சம் அருவருப்புகூட ஏற்படலாம். சிலர் நம்மிடம் நெருங்கவே தயங்குவார்கள். கைகளில் வியர்வை ஏற்படுவதைத் தடுக்க கைக்குட்டையை உபயோகிக்கலாம்; பவுடர் தடவிக்கொள்ளலாம். இதுவே காலில் ஏற்பட்டால், மருத்துவத்தில் இதை `பிளான்டர் ஹைபர்ஹைட்ரோசிஸ்’ (Plantar hyperhidrosis) என்கிறார்கள். நாம் வெறும் காலில் நடக்கும்போது கீழே அழுக்குடன் சேர்ந்து உள்ளங்காலில் அச்சுப் படியும்; செருப்புகளில் கரை படிந்திருக்கும்; ஷூ அணிந்தால், துர்நாற்றம் வீசும். இது மாதிரியான சூழல்களைத் தவிர்க்க சாக்ஸில் பவுடர் பூசி ஷூவை உபயோகிப்பது நல்லது.

இப்படிக் கால்களில் வியர்ப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாது. சிலர் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள்; ஆனால் அதே நேரத்தில் அதிகம் பயப்படுவார்கள்; சிலர் எப்போதும் ஏதோவொரு படபடப்புடனேயே செயல்படுவார்கள். இவர்களுக்கெல்லாம் கால்களில் வியர்க்கும் பிரச்னை இருக்கும். இதைக் குறைத்துக்கொள்ள ஒரு நாளைக்கு 15 நிமிடங்களுக்கு தியானம், யோகாசனம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். அப்படியும் இந்தப் பிரச்னை தீரவில்லை எனக் கருதுபவர்கள், அருகிலுள்ள மருத்துவரிடம் சென்று கவுன்சலிங் பெறலாம். இந்த வழிமுறைகளால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

சிலர் தங்களுக்கு வியர்வை வடிவதே வெளியில் தெரியாது என்று கூறுவார்கள். அவர்களுக்கும் வியர்வை வடியும்தான். ஆனால், வெளியில் தெரியாததற்கான காரணம், அவர்களது உடம்பு வெப்பத்தைத் தாங்கக்கூடிய பலம் பெற்றதாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

கால்களில் வியர்க்கும் பிரச்னை மரபுரீதியாக வருமா என்றால், அதற்கும் மரபுக்கும் சம்பந்தமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன வழிமுறையைக் கையாண்டாலும், கால்களில் வியர்வை ஏற்படும் பிரச்னை தீராமல் இருந்தால், மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது. இதற்கு 98 சதவிகிதம் வரை மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. அவரவர் வயது மற்றும் உடல் அமைப்பைப் பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படும்.’’

- பா.பிரியதர்ஷினி (மாணவப் பத்திரிக்கையாளர்)Trending Articles

Sponsored