`உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பு காரணம் இல்லை!’ - அமெரிக்க மருத்துவரின் கருத்தும் எதிர்வினைகளும்!Sponsored`உப்பு உடம்புக்கு நல்லதில்லை... அதை உணவில் அதிகம் சேர்க்காதீங்க! பிளட் பிரஷரில் தொடங்கி இதயம் வரை பாதிப்பு ஏற்படும்’ என்பது மருத்துவமனை தொடங்கி, மருத்துவ இதழ்கள் வரை அழுத்திச் சொல்லும் கருத்து. `ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கு மேல் உப்பு சேர்க்கக் கூடாது’ உயர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் டாக்டர்கள் தவறாமல் உச்சரிக்கும் வாசகம். `இது முழுக்க முழுக்க தவறு’ என அடித்துச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் டிநிகோல்ஆன்டோனியோ (James DiNicolantonio). இவர், செயின்ட் லூக்’ஸ் மிட் அமெரிக்கா ஹார்ட் இன்ஸ்டிட்யூடில் (Saint Luke's Mid America Heart Insititue) கார்டியோ வாஸ்குலர் ரிசர்ச் சயின்டிஸ்ட். பல மருத்துவ இதழ்களில் துணை ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர்.

இது பற்றி ஜேம்ஸ், `தி டெய்லி மெயில்’ பத்திரிகையில் விவரித்திருக்கும் காரணங்கள் கொஞ்சம் அழுத்தமானவை. ``உப்பைக் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக இதுவரை 500-க்கும் மேற்பட்ட மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்துவிட்டேன். குறைவான அளவில்தான் உப்பை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அழுத்தமான அறிவியல் காரணம் எதுவும் அவற்றில் இல்லை. மிகக் குறைவாக உப்பைச் சேர்த்துக்கொள்வது இன்சுலின் சுரப்பைத் தடுக்கும், உடலில் கொழுப்பு சேருவதை அதிகப்படுத்தும், சர்க்கரைநோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். இப்போதைய மருத்துவ கணக்குப்படி ஒருவர் ஒரு நாளைக்கு 2.4 கிராம் சோடியம் உட்கொள்ளலாம். அதாவது, 6 கிராம் உப்பு அல்லது ஒரு டீஸ்பூனுக்கும் சற்று குறைவான அளவு. ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது அல்லது அது வரும் வாய்ப்பு அதிகம் என்று வைத்துக்கொள்வோம். மருத்துவர், ஒரு நாளில் அந்த நபர் உட்கொள்ளும் உப்பின் அளவில் மூன்றில் இரண்டு பகுதியை (ஒரு டீஸ்பூனில்) குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்.  

Sponsored


இது, நம் உடலுக்கு மிக அவசியமான ஊட்டச்சத்து. அதன் அளவைக் குறைத்துக்கொள்ளும்படி சொல்வது, நம் இயற்கையின் இயல்புக்கு எதிரானது. ஒருவர் உப்பின் மேல் எவ்வளவுதான் விருப்பம் கொண்டவராக இருந்தாலும், ஒரு நாளைக்கு அவர் சாப்பிடும் உணவுக்கு ஒன்றரை டீஸ்பூன் உப்பு போதுமானது. இது உலகம் முழுக்க இருக்கும் எல்லா நாட்டினருக்கும், கலாசாரத்தினருக்கும், தட்பவெப்பநிலைக்கும் பொருந்தும். உப்பில்லாமல் நாம் வாழவே முடியாது என்பதுதான் உண்மை. இது, நம் வாழ்க்கைக்கு ஆதாரம். குறைவான அளவில் உப்பை சேர்த்துக்கொள்ளும் உணவுமுறை செக்ஸ் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும்; கருத்தரிக்கும் வாய்ப்பைத் தடுக்கும்; பிறக்கும் குழந்தையின் உடல் எடையையும் பாதிக்கும். சில மருத்துவ ஆய்வுகள், `குறைவான உப்பைச் சேர்த்துக்கொள்வதால் ஆண்மை எழுச்சி தடைபடும் அபாயத்தை அதிகரிக்கும்; களைப்படையச் செய்யும்; பெண்களுக்கு உரிய வயதில் கருத்தரிப்பு ஏற்படாமல் செய்துவிடும்’ என்கின்றன. 

Sponsored


உண்மை இப்படி இருக்க, பெரும்பாலான மருத்துவர்கள் உப்பை நல்லதல்ல என்று ஏன் சொல்கிறார்கள்? உப்பின் மீதான நம் பழைமையான மருத்துவப் பார்வை என்பது, நேரடியான அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. அது என்ன சொல்கிறதென்றால், அதிக அளவிலான உப்பு, அதிக அளவிலான ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அவ்வளவுதான். இது தவறான புரிதல். இதைப் பல எளிய அனுமானங்களின் மூலமே தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, உப்பை அதிகம் உட்கொண்டால், நா வறட்சி ஏற்படும்; அதனால், மிக அதிகமாகத் தண்ணீர் குடிப்போம். ரத்தத்தில் கலந்திருக்கும் உப்பை நீர்த்துப்போகச் செய்யவே அதிகத் தண்ணீர் தேவைப்படுகிறது. அதிகளவில் உடலில் சேரும் நீர், ரத்தத்தின் அளவை அதிகரிக்கும்; அது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும்; இதனால் இதய நோய், பக்கவாதம், மற்ற சீரியஸான நிலைகள் எல்லாம் ஏற்படலாம் என்கிறது பழைய தியரி. 

120-க்கு கீழே 80-க்கு மேலே இருப்பது ரத்த அழுத்தத்தின் இயல்புநிலை. இந்த இயல்பான ரத்த அழுத்தத்தோடு வாழும் 80 சதவிகிதம் பேருக்கு, அவர்கள் உப்பின் அளவைக் குறைக்காமல் அப்படியே உட்கொண்டாலும்கூட, பிரஷர் அதிகமாவதில்லை. `உப்பின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் உருவாகும்’ என்கிற கற்பனை 100 வருடங்களுக்கும் முன்னால் ஃபிரெஞ்ச் விஞ்ஞானிகள் அம்பார்டு மற்றும் பியூஜார்டு (Ambard and Beaujard) இருவராலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அவர்கள் இந்த உண்மையை வெறும் ஆறே நோயாளிகளைப் பரிசோதித்து, கண்டுபிடித்தார்கள். பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் புள்ளிவிவரங்களைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள்; தவறாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.  

1950-களின் முற்பகுதியில், டாக்டர் லெவிஸ் டால் (Dr. Lewis Dahl) இது தொடர்பாக எலிகளை வைத்து ஆய்வு செய்தார். அதில் உப்பை உண்ட எலிகள் பரபரப்பு அடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை, `Dahl salt-sensitive rats' என்றும் அழைக்கப்பட்டன. இந்தப் பரிசோதனை எலிகளை உதாரணமாகக் காட்டி, உப்பினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பதையும் அறிவித்தார். ஆக, உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்புதான் காரணம் என்பது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துபோய்விட்டது. 

உண்மையில், ஒரு சராசரி கொரிய குடிமகன், ஒரு நாளைக்கு உணவின் மூலமாக 4 கிராம் சோடியத்தை உட்கொள்கிறார். அவர்கள் தவறாமல் சாப்பிடும் ஒருவகை சூப்பில் உப்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இது மட்டுமல்ல, கொரியர்கள் சாப்பிடும் பல உணவுகளில் உப்பின் அளவு அதிகம்தான். இருந்தாலும், உலகளவில் ரத்த அழுத்தம், இதய நோய்கள், இதய வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களில், சதவிகிதக் கணக்கில் மிகக் குறைவாக உள்ளவர்கள் கொரியர்கள்தான். அதேபோல உலகளாவிய அளவில், இதய நோயால் இறப்பவர்களில் மிகக் குறைந்த சதவிகிதம் உள்ள நாடுகளில் ஃப்ரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இருப்பது தென் கொரியாதான். இந்த மூன்று நாட்டு மக்களுமே தங்கள் உணவில் அதிகளவில் உப்பைச் சேர்த்துக்கொள்பவர்கள் என்பது கவனிக்கவேண்டிய விஷயம். 

குறைந்தளவில் உப்பைச் சேர்த்துக்கொண்டால், பல பக்க விளைவுகள் உண்டாகும். இதயத் துடிப்பு அதிகரித்து இதய நோய்க்கான அபாயத்தைக் கூட்டும்; சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படலாம்; தைராய்டு பிரச்னை வரலாம்; இன்சுலின் சுரப்பு சீராக இருக்காது; கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தமோ, இதய நோய்களோ, சிறுநீரகக் கோளாறுகளோ ஏற்படுவது உடல்நலம் பாதிக்கப்படுவதால்தான். அதிலும், அதிகளவில் சர்க்கரையை உட்கொள்வதுதான் முக்கியக் காரணம். 

அதேபோல `ஒபிசிட்டி’ எனப்படும் உடற்பருமன் பிரச்னையையே எடுத்துக்கொள்வோம். மருத்துவர்கள் குறைவாகச் சாப்பிட்டு அதிக கலோரிகளை எரிக்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது என்பது வெளிப்படையாகவே தெரியும் ஒரு விஷயம். குறைவாக உப்பை உட்கொண்டால், அது சர்க்கரையின் மீதான ஈர்ப்பைத்தான் அதிகரிக்கும். அதிகம் சர்க்கரை சாப்பிட்டால், எடை கூடும். அதோடு, உடலில் அயோடின் குறைபாடு ஏற்படும். தைராய்டு செயல்பாட்டுக்கு மிக அவசியமானது அயோடின். இது இல்லையென்றால், வளர் சிதை மாற்றத்திலும் பாதிப்பு உண்டாகும். இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பு தடைப்படும்...’’ என அடுக்கிக்கொண்டே போகும் டாக்டர் ஜேம்ஸ் இறுதியாக ஒன்றையும் சொல்கிறார்... ``உப்பைக் கொஞ்சம் அதிகம் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறதா தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்.’’

சரி... ஜேம்ஸ் சொல்லும் கருத்து நம் நாட்டுச்சூழலுக்கு ஏற்புடையதுதானா... உண்மையில், உப்பைக் குறைப்பதற்கும் ரத்த

அழுத்தத்துக்கும் சம்பந்தம் இல்லையா... நம் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? 

சதானந்த் - இதய நோய்  மருத்துவர் 
மனிதன் உயிர்வாழ்வதற்கு சோடியம் மிக அவசியமான ஒன்று. அதே சமயம் சோடியம் நம் உடம்பில் அதிகமாகும்போது நம் உடலில் பல்வேறு தொந்தரவுகள் வர ஆரம்பிக்கின்றன. சோடியமும் தண்ணீரும் நண்பர்கள் போன்றவை. சோடியம் செல்லும் இடமெல்லாம் தண்ணீரும் போகும். சோடியத்தின் அளவு அதிகமாகும்போது, அது அதனுடன் தண்ணீரையும் எடுத்துச் செல்வதால், நமக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இது சோடியத்தால் உருவாவதில்லை. ஆனால், சோடியத்தால் உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் உடல்வாகையும் பொறுத்துதான் சோடியத்தால் ஏற்படும் விளைவுகள் இருக்கும். சோடியமே தேவை இல்லை என்கிற கருத்து தவறானது. உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது. மேலும் நாம் உண்ணும் உப்பானது சோடியம் குளோரைடே தவிர, சோடியம் கிடையாது.

சுந்தரராமன் - பொதுநல மருத்துவர்
இந்தக் கருத்து, இந்திய மருத்துவத்தில் உள்ள புத்தகங்களில் இருப்பதற்கு எதிராக உள்ளது. இதைப் பற்றி உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. டாக்டர் ஜேம்ஸ் சொன்ன கருத்து குறித்து, ஒரு விரிவான வாசிப்பு தேவைப்படுகிறது. நம் உணவுகளுக்கும், மேற்கத்திய உணவுகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். உலகிலேயே ஜப்பானில்தான் ஹார்ட் அட்டாக் குறைவாக ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், வேறு காரணங்களும் இருக்கின்றன. அவர்கள் வாழும் முறைதான் அதற்குக் காரணம். அவர்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான ஓய்வும் காரணமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது. உப்பால் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எனினும், இதைப் பற்றி ஒரு தீவிர வாசிப்பும் ஆய்வும் தேவைப்படுகின்றன என்பதே என் கருத்து.

சிவராம கண்ணன் - பொதுநல மருத்துவர் 


நம் உடலுக்கு சால்ட் தேவை என்பது உண்மைதான். ஏனென்றால், இது வியர்வை மூலமாகவும், சிறுநீர் மூலமாகவும் அதிகமாக வெளியேறுகிறது. சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் உப்பைப் பொறுத்தவரை கவனமாக இருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைந்த அளவே, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரஷர் மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக மாத்திரைகள் வேலை செய்யாது.

கார்த்திக் - பொதுநல மருத்துவர்  
டாக்டர் ஜேம்ஸே இந்த ஆய்வை நேரடியாக நடத்தியதாகத் தெரியவில்லை. இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்தான் அவர் கூறுகிறார். அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதைக் கூற முடியாது. ஆனால், இதுவரை நாம் உப்பைப் பற்றி நம்பி வந்த விஷயங்களுக்கு முற்றிலும் எதிரானதாக அவர் கருத்து இருக்கிறது. இதைப் பற்றி இன்னும் விரிவாக ஆராய்வதின் மூலம்தான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.Trending Articles

Sponsored