சூடு தணிக்கும், புண்களை ஆற்றும், மனக்கோளாறு நீக்கும் அகத்திக்கீரை!Sponsoredஅகத்தி... ‘செஸ்பேனியா கிராண்டி ஃப்ளோரா’ (Sesbania grandiflora) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சிறுமரம். 63 வகை சத்துகள் அகத்திக்கீரையில் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

அகத்தி என்றால், `அகம் தீ’ என்பது பொருள். உள் உறுப்புகள் அனைத்திலும் தீயை உண்டாக்குவதுடன் அகத்தில் (இதயத்தில்) தீயை உண்டாக்கி, ரத்த ஓட்டத்தைச் சமப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதாலேயே `அகத்தி’ எனப்படுகிறது. மேலும், குறிப்பாக உடலின் உள் உறுப்புகளைச் சுத்தப்படுத்தும் பணியைச்செய்கிறது.

Sponsored


இது, பெரும்பாலும் கொடிக்கால்களில் வெற்றிலைக்கொடி படர்வதற்கும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக்கொடி படர்வதற்கும் வளர்க்கப்படுகிறது. அகத்தி, சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி ஆகியவை இதன் குடும்பமாகும். பொதுவாக இதில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக்கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

Sponsored


அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். மனக்கோளாறுகள் நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தம் செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.

இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசிவந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில் ஆறும். தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

அகத்திக்கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடம்பில் உள்ள விஷம் மலத்துடன் வெளியேறும். அதுமட்டுமல்ல புகைப்பிடிப்பதில் உள்ள ஆர்வமும் குறையும். அகத்திப்பூவுடன் மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும்.

அகத்திப்பட்டையை 50 கிராம் எடுத்து இடித்து, 8 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி இரண்டு அவுன்ஸ் குடித்தால் அம்மை நோய் இறங்கிவிடும். விஷம் குடித்தவர்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்தால் விஷம் இறங்கிவிடும். இதேபோல் ஆண் - பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கக்கூடியது இது.

வைகுண்ட ஏகாதசியின்போது இரவு முழுவதும் கண்விழித்திருப்பதால், உடல் சூடாகிவிடும். அதைத் தணிக்க, அதற்கு அடுத்த நாள் அகத்திக்கீரையைக் குழம்பாகச் செய்து சாப்பிட்டால் சூட்டைத் தணிப்பதுடன் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும். இதேபோல் இறந்தவர்கள் வீடுகளில் உடல் அடக்கம் நடக்கும் வரை பட்டினிகிடப்பார்கள். இதனால் உடல் சூடாவதோடு வருத்தத்துடன் இருப்பதால், ரத்த அழுத்தம் காணப்படும். இதற்கு நிவாரணம் பெற மறுநாள் கீரைச் சாம்பார் செய்து உண்பது வழக்கத்தில் உள்ளது.

அகத்தி, மருந்துகளை முறிக்கும் தன்மைகொண்டது. ஆகவே, சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக் கூடாது. பொதுவாக  இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாகச் செயல்படவேண்டியது அதற்கு எதிராகச் செயல்பட்டு சொறி, சிரங்கை ஏற்படுத்திவிடும். அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது; மது அருந்திவிட்டும்  இந்தக் கீரையைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.Trending Articles

Sponsored