குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள்... அனைவருக்குமான கண் பராமரிப்பு டிப்ஸ்!Sponsored'வட்டக் கரிய விழி... வானக் கருமை கொள்ளோ' என்று பாரதி முதல் 'நீலக் கருவிழி' என்று தற்போது உள்ளவர்கள் வரை கண்களை வர்ணிக்காத பாடல் ஆசிரியர்களே இல்லை. நாம் இந்த உலகைப் பார்க்க உதவும் ஒளித்திரை, கண்கள். இப்படியான கண்ணின் விழித்திரைக்கு பல செயல்களால் பாதிப்பை உண்டாக்குகிறோம். நாம் செய்யும் சில காரியங்களால் ஏற்படும் பாதிப்புகளை, சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது, வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சரிசெய்ய முடியும். பொதுவாக அனைத்து வயதினரும் பின்பற்றவேண்டிய கண் பராமரிப்புக்கான டிப்ஸ்கள் இங்கே...

பார்வைக்குறைபாடு, பார்வை இழப்புக்கான காரணங்கள்...

Sponsored


கண் பகுதிகளில் ஏற்படும் விபத்துகள், கிருமித்தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கண் குறைபாடு, சரியான கண் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் பார்வைக் குறைபாடோ, பார்வை இழப்போ ஏற்படலாம்.

Sponsored 

பிறந்த குழந்தைகளுக்கு...

* பிறந்த குழந்தையின் கண்களில் இரண்டு வாரங்கள் வரை கண்ணீர் சுரக்காது. அந்த நாள்களில் கண்ணில் நீர் சுரந்தால், உடனடியாக கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

* குழந்தைகளின் கண்களில் பாதிப்பு பெரியதாகவோ, சிறியதாகவோ இருந்தாலும் உடனடியாக கண் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

* பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று, `நாட்டு வைத்தியம்’ என்கிற பெயரில் குழந்தைகளின் கண்களில் தாய்ப்பால், எண்ணெய் போன்றவற்றை விடக் கூடாது. அது கண்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும்.

* உரிய காலத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது, சொட்டு மருந்து கொடுப்பது போன்றவற்றை செய்துவிட வேண்டும்.

* நோய்க் கிருமிகளின் தொற்று ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கலாம்.

* தினமும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யலாம். இது கண் மட்டுமல்லாமல், உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க உதவும்.


வளரும் குழந்தைகளுக்கு...

* வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அவர்களின் உணவு முறை அடிப்படையான ஒன்று. பீட்டாகரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை தினசரி உணவாகக் கொடுக்கலாம்.

* பச்சைக்காய்கறிகள் (கேரட்), ஃபிரெஷ்ஷான பழங்கள் (பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு) போன்றவற்றை ஜூஸாகக் கொடுக்காமல் அப்படியே சாப்பிடச் செய்யலாம்.

* குறைந்த ஒளியில் படிப்பது, வேலை பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்லித் தரலாம்.

* குழந்தைகள் டிவி பார்க்கும்போது, டிவியைவிட்டு தூரமாக அமர்ந்து பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

* வளரும் குழந்தைகளை அதிக நேரம் கணினி மற்றும் மொபைல்களைப் பார்ப்பதைத் தவிர்க்கப் பழக்கலாம்.

* வளரும் குழந்தைகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டால், குணமானதும் கண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

* நீச்சல் பயிற்சிக்குச் செல்லும் குழந்தைகள், கண்களுக்கு ஐ-கிளாஸ் அணிந்து நீச்சல் பயிற்சி செய்யலாம். இது, நீரில் உள்ள கிருமிகள் கண்களைப் பாதிப்பதைத் தடுக்கும்.

* காலை 9 மணிக்கு மேல் வெயிலில் செல்வதைத் தடுக்கலாம். ஏனென்றால், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் கண்களைத்தாக்கி,  கண்புரை ( Cataract) போன்ற பல கண் நோய்களை ஏற்படுத்தலாம்.

* குழந்தைகள் விளையாடி முடித்த பின்னர் கை, கால், முகம் மற்றும் கண்களைக் கழுவுவது நல்லது. இது பல நோய்த் தொற்றுகளிடம் இருந்து காக்கும்.


இளைஞர்களுக்கு...

* ஆரோக்கியமான கண்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அவசியம். வைட்டமின் ஏ, பி, சி, டி, இ மற்றும் கே நிறைந்த உணவுகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பச்சைக்காய்கறிகள் (கேரட்), ஃபிரெஷ்ஷான பழங்கள் (பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு) போன்றவற்றை ஜூஸாக அல்லாமல் அப்படியே சாப்பிடலாம்.

* வெளியில் செல்லும்போது புகை, மாசுபட்டக் காற்றிடமிருந்து தப்பிக்க சன் கிளாஸ் பயன்படுத்தலாம். இவை காற்றினால் ஏற்படும் கிருமித் தொற்றைத் தடுக்க உதவும்.

* அதிக நேரம் கண்விழித்து இருப்பது நல்லதல்ல. தினசரி 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இது கண்களுக்கு மட்டுமின்றி பல உடல் உபாதைகளிலிருந்தும் நம்மைக் காக்கும்.

* கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போனின் ஒளித்திரையின் பிரைட்னஸ் அளவை மிதமாக வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

* சுத்தமில்லாத கைகளால் கண்களைத் தொடவோ, கசக்கவோ கூடாது.

* கண்களில் தூசிபட்டால், அவற்றை கண் கழுவ வேண்டும். அதைவிட்டுவிட்டு, கைகளால் கண்களைக் கசக்குவது, துணியால் கண்களைத் துடைப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதித்து, கண் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது நல்லது.

* கண்ணாடி அணிபவர்கள் அவரவரின் கண்களுக்கு உரிய லென்ஸ்களை அணிய வேண்டும்.

* கண்களுக்கு அழகுசாதனப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

* கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் உரிய நேரத்தில் அவற்றைச் சுத்தம் செய்வது நல்லது. இல்லையென்றால் தேவையற்ற கண் எரிச்சல், கண் சிவப்பது, கண்ணில் நீர்வடிதல் போன்றவை ஏற்படலாம்.


 

வயதானவர்களுக்கு...

* வயதானவர்களுக்கு எவ்வித நோய் ஏற்பட்டாலும், முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் கண்தான்.

* வயது முதிர்ச்சியால் ஏற்படும் வெள்ளை எழுத்து, கண்ணில் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் மங்கலாகத் தெரிதல் போன்ற கண் பாதிப்புகள் இயற்கையாகவே ஏற்படும். அவற்றை வருமுன் காப்பது சிறந்தது.

* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ளலாம். கண் பராமரிப்பில், கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளவேண்டியது அவசியம்.

* கண்களுக்குப் பொருத்தமான மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.

* கண்களில் லேசர் சர்ஜரி அல்லது அறுவைசிகிச்சை ஏதேனும் செய்திருந்தால், கண்களை மருத்துவரின் அறிவுரைப்படி முறையாகப் பராமரிக்க வேண்டும்.

* அதிக வெயிலில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. கட்டாயமாகச் செல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் சன் கிளாசஸ் அணிந்து செல்லலாம்.


எப்போதும் ஆன்லைனில் இருக்கும் ஆன்லைன் வாசிகளுக்கு...

* கம்ப்யூட்டர், செல்போன் அல்லது லேப்டாப்பின் ஸ்க்ரீனின் பிரைட்னஸை குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

* அடர் இருளில் கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு இருளில் பயன்படுத்துவது பார்வைத்திறனைக் குறைக்கும். கண் நலத்தைக் கெடுக்கும்.

* ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியின்போதும், தொலைவில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை சில நிமிடங்கள் உற்றுநோக்கிப் பார்க்கலாம்.

* ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவலாம்.


கர்ப்பிணிகளுக்கு...

* கருவுற்றத் தாய்மார்கள், தேவையான அளவு பால், முட்டை, பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் இதமான வெயிலில் நடப்பது நல்லது. இளஞ்சூரியனை வெறும் கண்களால் பார்க்கலாம். (காலையில் சூரிய உதயம் 7 மணிக்கு முன், மாலையில் சூரிய அஸ்தமனம் 6 மணிக்கு மேல்) சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிப்பது நல்லது.

* கருவுற்றத் தாய்மார்களுக்கு அம்மை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால், குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் கண்களை கண் மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது.


 

அனைத்து வயதினருக்கும்...

வைட்டமின் குறைபாடுகளும் அவற்றுக்கான உணவுகளும்:

* ஜெராஃப்தால்மியா (Xerophthalmia) என்னும் கண்கள் உலர்ந்துபோகும் பிரச்னை, மாலைக்கண் நோய் போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும்.

* பார்வை நரம்பில் ஏற்படும் கோளாறு, வைட்டமின் பி குறைபாட்டால் ஏற்படும்.

* கண்களில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி அவசியம்.

பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பப்பாளி, முட்டை, கேரட், அரிசி, கோதுமை, முளைகட்டிய தானியங்கள், பீன்ஸ், ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்ற உணவுப்பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


 

தவிர்க்க... தடுக்க!

* குறைந்த வெளிச்சத்தில் படிக்கவோ வேலை செய்யவோ கூடாது.

* கண் கூசும் அளவு வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது. உற்றுநோக்கிப் பார்க்கும் அளவுக்கு ஒளி குறைவாக உள்ள இடத்தைத் தவிர்ப்பது நல்லது.

* தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றால் ஏற்படும் கண் சோர்வைக் குறைக்க, ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்கலாம். இது கண் சோர்வைக் குறைக்கும்.

* வெயிலில் வெளியில் செல்லும்போது கண்களுக்கு கூலிங்கிளாஸ் பயன்படுத்தலாம்.

* தினசரி கண் பயிற்சிகள் செய்யலாம். இவை பார்வைத்திறனை மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

வருமுன் காப்பது எவ்வளவு சிறந்ததோ, அதே அளவுக்கு ஒரு நோயை அதன் ஆரம்பகட்ட நிலையில் சரிசெய்ய முயல்வதும் முக்கியம். கண்களை முறையாகப் பாதுகாப்போம். ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவோம்.Trending Articles

Sponsored