சேவைக்கு மரியாதை! - தேசிய மருத்துவர்கள் தினப் பகிர்வு #NationalDoctorsDaySponsoredதன்னலம் பாராமல் பிறர் நலம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுபவர்கள் மருத்துவர்கள். நோய்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களின் பணி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. `கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினீர்கள்...' என்று எல்லோருமே சொல்லும் ரியல் ஹீரோக்கள் மருத்துவர்கள்தாம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களின் உதவியோடுதான் வாழ்க்கையைக் கடந்துவருகிறோம். `அன்னையர் தினம்’, `தந்தையர் தினம்’, `காதலர் தினம்’ வரிசையில் மருத்துவர்களையும் கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்திய மருத்துவ உலகின் பல பரிமாணங்களில் சிறப்பான சேவை புரிந்த டாக்டர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

Sponsored


பீஹார் மாநிலம், பாட்னா நகர் அருகே பாங்கிபோர் என்னும் சிற்றூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார் பிதான் சந்திராராய் என்கிற பி.சி.ராய். மருத்துவத்தைத் தொழிலாக எண்ணாமல், தனது வாழ்நாள் சேவையாகவே கருதி பணியாற்றிய அவரின் பிறந்த தினத்தையே தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடிவருகிறோம்.

Sponsored


மேற்கு வங்க முதல்வராகவும் பணியாற்றிய இவரின் தியாகமும் தொலைநோக்குத் திட்டங்களும் மறக்க முடியாதவை. சிறப்பான மருத்துவச் சேவை செய்பவர்களுக்கு இவரின் பெயரில் 1976-ம் ஆண்டு முதல், `டாக்டர் பி.சி.ராய் விருது’ வழங்கப்பட்டுவருகிறது. மருத்துவர் புகழ் சொல்லும் இந்த நாளில் மருத்துவர்களைப் பெருமையோடு நினைவுகூர வேண்டும் என்றே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அத்தோடு மருத்துவத் துறையை மேம்படுத்தும் தினமாகவும், இந்திய மக்களின் வாழ்நாளை நீட்டிக்கத் திட்டமிடும் நாளாகவும் இந்திய அரசு இந்த நாளைக் கொண்டாடுகிறது.

மருத்துவர்கள் தினம் என்றதும் எல்லா மருத்துவர்களும் ஒன்றாகக்கூடி உண்டு மகிழ்ந்து கொண்டாடித் தீர்ப்பது அல்ல. மாறாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையின் பிரச்னைகள் பற்றியும் இந்தியர்கள் அனைவருக்கும் நலவாழ்வு கிடைக்கச்செய்வதில் மருத்துவர்கள் அனைவரது பங்களிப்பு பற்றியும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தக்கூடிய தினமாக அது அமைய வேண்டும்.

உயிர்களை இந்த உலகத்துக்கு வெளியே கொண்டு வரவும், கொண்டு வந்த உயிரை அதன் கடைசி நிமிடம் வரை சிகிச்சை அளித்துக் காக்கவும் போராடும் தன்னமலற்ற ஒரு ஜீவன் என்றால், அது மருத்துவர்தான். உண்மையில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரே நம்பிக்கையான ஜீவனும் மருத்துவர்தான். தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அர்ப்பணிப்பு என்ற சிந்தனையோடு, நுட்பமான பணிகளில் தொடர்ந்து பணியாற்றும் மருத்துவர்களின் தியாகமும் உழைப்பும் என்றுமே மக்களால் கொண்டாடப்படவேண்டியவைதான்.

நகரங்கள் மட்டுமன்றி, எந்த அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்திலும், பாலைவனத்திலும், குளிர் சூழ்ந்த பனிமலைகளிலும், ஏன்... போர்முனைகளில்கூட இவர்கள் ஆற்றும் மருத்துவச் சிகிச்சைகள், `உண்மையிலேயே இவர்கள் போற்றத்தக்க மாண்பு கொண்டவர்கள்’ என்றே புகழச்செய்யும். கிடைத்த வசதிகளைக்கொண்டு சேவையாற்றும் அருமையான பல மருத்துவர்கள் இன்னும்கூட இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை இந்த நாளில் தலை வணங்கி வாழ்த்துவோம். எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் தன்னலம் பாராமல் சேவை ஆற்றும் மருத்துவர்களை இந்த நாளில் வாழ்த்தி மகிழ்வோம்.Trending Articles

Sponsored