நீங்கள் பீர் பிரியரா? சிறுநீரகக் கற்கள் கவனம் பாஸ்!



Sponsored


``ரொம்ப ஹீட்டா ஆகிடுச்சுடா உடம்பு’’ எனச் சொல்லப்போக, ``ஜில்லுனு ஒரு பீர் அடி... சரியாப் போயிடும்’’ என்கிற நண்பர்களின் பேச்சைக் கேட்டு பீர் குடிக்க ஆரம்பித்தவர்கள் அதிகம்.

Sponsored


Sponsored


``என்னடா நாளுக்கு நாள் ஒல்லியாகிட்டே போறே... வாரத்துக்கு ரெண்டு பீர் குடி... உடம்பு வெயிட் போட்டுடும்’’ என்று நம்மைவிட மூத்தவர்கள் சிலர் சொல்லும் பேச்சைக்கேட்டு குடிக்க ஆரம்பித்தவர்கள் பலர்.

இதில், ``பீர் ஒண்ணும் பிரச்னை பண்ணாது. உடம்புக்கு ரொம்ப நல்லது. விஸ்கி, பிராந்திதான் கெடுதல்’’ என்று  அட்வைஸ் வேறு.

``மற்ற மதுவகைகளைவிட பீர் உடலுக்கு நல்லது'' என ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவஹர் வேறு வெடி பற்றவைத்திருக்கிறார். 

பீரைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துகள் மாறி மாறி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த நிலையில் போன வாரம் அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்திருந்தார். என்ன காரணம் என்று விசாரித்தபோது 'சிறுநீரகக் கல் பாதிப்பு' என்றார். மேலும், அதற்கு அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது.

`` 'சிறுநீரகக் கல்லின் அளவு சிறியதாக இருக்கும்போது  பீர் குடித்தால் சரி ஆகிவிடும்' என்று நண்பர்கள் சிலர் தவறாக அறிவுரை கூறியுள்ளனர். அவர்களின் பேச்சைக் கேட்டு, தொடர்ச்சியாகக் குடித்ததால் இன்று கல்லின் அளவு பெரியதாகியிருக்கிறது,

மாத்திரைகளாலேயே கரைத்துவிடலாம் என்று சொன்ன மருத்துவர், இன்று அறுவைசிகிச்சை செய்தால்தான் கரைக்கமுடியும் என்று கைவிரித்திருக்கிறார்" என்றார்.

பீர் பற்றி நிலவும் கருத்துகளில் எது உண்மை? ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜிடம் கேட்டோம்.

"பீரில் அதிகமாக ஆக்ஸிலேட் மற்றும் யூரிக் ஆஸிட் அமிலங்கள் உள்ளன. சிறுநீரக பாதிப்புகள் உள்ள ஒருவர் பீர் குடிக்கும்போது இவை அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், மிகப்பெரிய பாதிப்புகள் உண்டாகும். 'வயிறு தொடர்பான தொந்தரவு உள்ளவர்கள்  பீர் குடித்தால் சரியாகிவிடும்' என்று தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருகின்றன. குடல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக பீர் அருந்தவே கூடாது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய்கள் உள்ளவர்கள், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எப்போதும் சூடான சூழலில் வேலை செய்யும் டிரைவர்கள், மெஷினில் வேலை பார்ப்பவர்கள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்கள் அனைவருமே பீரைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் என்று செய்திகள் பரப்பப்பட்டு வருகிறதே என்று சிறுநீரக சிறப்பு மருத்துவர் சேகரிடம் கேட்டோம். 

"பீரை தொடர்ச்சியாக குடித்து வருபவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஏற்கெனவே கல் இருப்பவர்களுக்கு, அதிகமாகவும் வாய்ப்புண்டு.  'பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்' என்பது  தவறான தகவல். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே நல்லது" என்றார்.

பீர், பல பிரச்னைகளுக்கு தீர்வு என்றும், பல நோய்களைத் தீர்க்கும் என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பீர் மதுவே அல்ல என்ற பிம்பமும் ஏற்படுத்தப்படுகிறது. உண்மையில், பீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு தீமைகளே உண்டாகின்றன.

தொடர்ந்து குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவும்  வாய்ப்புண்டு. மது ஒருபோதும் எந்த நோய்க்கும் மருந்தாகாது. அது தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் கேடுவிளைவிப்பதாக மட்டுமே இருக்கும். 



Trending Articles

Sponsored