ஐ.டி நிறுவனங்களில் பிரபலமாகும் `சேர்கோசைஸ்’ - உட்கார்ந்த இடத்தில் உடற்பயிற்சி! #VideoSponsored“எங்கேயும் அலைய வேண்டாம். கம்ப்யூட்டரில்தான் வேலை. ஆபிஸில் உட்கார்ந்த இடத்திலேயே வேலையை முடித்துவிடலாம்” என திருப்திபட்டுக்கொள்பவரா நீங்கள்? அப்படி என்றால், இதைக் கட்டாயம் படியுங்கள்.

“ஒரே இடத்தில் அமர்ந்து, கம்ப்யூட்டரில் பணியாற்றுவது என்பது உடல்நிலையில் பெரும் சிக்கலை உருவாக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். நீண்ட நேரம் அமர்ந்தபடி பணியாற்றும் ஊழியர்கள் மூட்டு நோய் பாதிப்புக்குள்ளாகுவது என்பது வெளிநாடுகளில் பரவலாகிவருகிறது. ‘ஆர்.எஸ்.ஐ’ (Repetitive strain injury) எனும் இந்த நோயின் பாதிப்பு இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 

Sponsored


ஆர்.எஸ்.ஐ நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை பார்க்கும் ஐ.டி ஊழியர்கள்தான். "வசதியற்ற நிலையில் மவுஸ் பிடித்து, கீபேர்டில் டைப் செய்து வேலை பார்க்கும்போது மணிக்கட்டில் துவங்குகிறது மூட்டுப் பாதிப்பு. இருக்கையைவிட்டு எழாமல், ஒரே இடத்தில் அமர்ந்து, அசைவின்றி வேலை பார்க்கும்போது உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இப்படியான பாதிப்புகளே ஆர்.எஸ்.ஐ (Repetitive strain injury) என சொல்லப்படுகிறது" எனக்கூறும் மருத்துவர்கள், 'உடற்பயிற்சி ஒன்றே இதற்கான தீர்வு' என்றும் சொல்கிறார்கள்.

Sponsored


சரியான நேரத்தில் தூக்கம், அதிகாலையில் எழுதல் போன்ற வழக்கமான பழக்க வழக்கங்களையே முறைப்படுத்த முடியாத ஐ.டி ஊழியர்கள், உடல் புத்துணர்ச்சிக்கு என  உடற்பயிற்சி எடுத்துக்கொள்வது என்பது பெரும்பாலும் இல்லை. 'தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கக் கூடாது. அரை மணி நேர இடைவெளியில் கம்ப்யூட்டரைவிட்டு எழுந்து நடக்க வேண்டும்' என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள் எல்லாம் ஐ.டி, கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நிச்சயம் சாத்தியமில்லை. 

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளைத் தடுக்க ஐ.டி  நிறுவனங்களில் உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்), யோகா மையம், விளையாட்டு மையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டபோதும் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. உடற்பயிற்சிக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், பணி நேரத்துக்கு முன்னரும் பின்னருமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது பணி நேரமான 8 மணி நேரத்துக்கு மிஞ்சிய நேரத்தில் மட்டுமே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. சரியான பணி நேரத்தில் வரும் ஐ.டி ஊழியர்கள், பணி முடிந்ததும் உடற்பயிற்சிக் கூடத்தில் நேரத்தைச் செலவிட விரும்புவதில்லை. பல நூறு பேர் பணியாற்றும் ஐ.டி நிறுவனத்தில், உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருக்க இது மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இச்சூழலில், பணி நேரத்தில் உட்கார்ந்த இடத்திலேயே அவர்களுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில், `சேர்கோசைஸ்’ (Chaircocise) எனும் நடனத்தின் மூலம் உடற்பயிற்சி செய்யும் முறை இப்போது பரவலாகிவருகிறது. சேர்கோசைஸ் என்பது உடற்பயிற்சியின் நடன வடிவமாகவே இருக்கிறது. பணியின்போது சேரில் அமர்ந்தபடியே இசைக்கேற்ப உடலை அசைத்து நடனமாடுவதுதான் சேர்கோசைஸ். மூட்டு நோய்களைத் தடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை அப்படியே நடனமாக்கிக் கொடுத்திருக்கிறார் டான்ஸ் மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சியாளர் எட்வின். 

அவரிடம் பேசினோம். "ஐ.டி. ஊழியர்கள் உடற்பயிற்சி செய்யாம இருக்க இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அவர்களுக்குப் போதிய நேரமில்லை. இரண்டாவது, உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை. ஐ.டி ஊழியர்களின் ஃபிட்னெஸுக்கு என்ன செய்யறது என யோசிச்சப்போதான் இந்த ஐடியா கிடைச்சது. சேர்கோசைஸ் என்பது வெளிநாடுகளில் பிரபலமான நடன உடற்பயிற்சி முறை. அதை இங்கே அமல்படுத்தலாம்னு முடிவு செஞ்சேன்.

வெறுமனே நடனமாக இல்லாமல், உடற்பயிற்சிக்கான அசைவுகளை நடனத்தில் கொண்டுவர திட்டமிட்டு, ஒரே நிலையில் அமர்ந்து இருக்கறதால ஏற்படுற பாதிப்பு சம்பந்தமா டாக்டர்கள்கிட்ட பேசினேன். அதைத் தவிர்க்க, அவங்க சொல்ற எக்சர்சைஸ் முறையை எல்லாம் கேட்டு, அதுக்கேத்த மாதிரி ஸ்டெப் அமைச்சு, இந்த நடனத்தை அமைச்சோம்.

இதுல ஆர்வமில்லாம போயிடக்கூடாதுங்கறதுக்காக இசைக்குத் தகுந்த மாதிரி நடனமுறைகளை அமைச்சோம். வேலை பார்த்த இடத்துல அப்படியே உட்கார்ந்து இந்தப் பயிற்சியை நீங்க செய்யலாம். ரொம்ப எளிமையா இருக்கும். உங்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும். அதே நேரத்துல மூட்டு நோய்கள்ல இருந்து உங்களை இந்த உடற்பயிற்சி முறை காக்கும். காலையில 10 நிமிஷம், சாயந்திரம் 10 நிமிஷம்னு மொத்தம் 20 நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இந்தப் பயிற்சியை செஞ்சிடுவாங்க. ஆபிஸும் உற்சாகமா இருக்கும்.

ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டுமில்லை, ஸ்கூல்லகூட இப்போ இந்த முறையை அமல்படுத்தி இருக்கோம். அவங்களுக்கு ரொம்ப ஈஸியா புரியற மாதிரி, குரங்கு, மான், யானை போன்ற விலங்குகளின் அசைவுகளை மையப்படுத்தி நடன முறையை அமைச்சிருக்கோம். குழந்தைங்க ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு இருக்காங்க. விளையாட்டு குறைஞ்சு போச்சு. அதை மனசுலவெச்சு, இந்த அசைவுகளை அமைச்சோம். குழந்தைங்க ரொம்ப ஆர்வத்தோட இதைச் செய்யறாங்க.

இதே மாதிரி பெண்கள் வேலை செய்யுற அலுவலகத்துலயும் இந்தப் பயிற்சி முறையை அமல்படுத்தி இருக்காங்க. அம்மிக்கல்லில் அரைக்கறது, ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுறது, துணி துவைக்கிறது மாதிரியான இயக்கங்களை மையமாகவெச்சு அவங்களுக்கு இந்த நடனம் வடிவமைக்கப்பட்டிருக்கு. 

பணிக்கிடையே குறிப்பிட்ட நேரத்தில், அலுவலகத்தில் இசை இசைக்கும். உட்கார்ந்தபடியே இசைக்குத் தகுந்த மாதிரி ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்பட்ட அசைவுகளைச் செய்யணும். அவ்வளவுதான். ரொம்ப ஈஸியா இருக்கும். அதே நேரத்துல புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஒரே ஸ்டெப் போர் அடிக்குங்கறதால குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை பாட்டையும் ஸ்டெப்ஸையும் மாத்திக்கொடுத்துடுவோம்" என்றார் எட்வின்.

கோவை, சென்னை... எனப் பல இடங்களில்டி,  ஐ.டி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் இப்போது இந்த முறை அமலாக்கப்பட்டுள்ளது. உடம்பின் மொழி அறிந்து, சோர்வை நீக்கும் இந்தப் பயிற்சி, இப்போது ஐ.டி நிறுவனங்களிலும், சில அலுவலகங்களிலும் பரவலாகிவருகிறது. கழுத்தை நெரிக்கும் நேர நெருக்கடி, மனஅழுத்தம் இவற்றுக்கிடையே அமர்ந்த இடத்திலேயே ஆடும் இந்தப் பயிற்சி உடலையும் மனதையும் ஒரு சேர ரிலாக்ஸ் ஆக்குகிறது.

குனிந்து நிமிர்வதுகூட அதிசயமாகிப் போனதால், புத்துணர்வுக்கு எத்தனை மெனக்கெடவேண்டி இருக்கிறது?Trending Articles

Sponsored