உடல் உறுப்பு தானம்... எந்த உறுப்பை எவ்வளவு நேரத்துக்குள் பொருத்த வேண்டும்? #OrganDonationSponsoredதானத்தில் சிறந்தது அன்ன தானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி, இன்று உடல் உறுப்பு தானம்தான் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது. அதே நேரத்தில், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பைவிட கணிசமாக உயர்ந்துகொண்டிருந்தாலும், மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் மற்றொரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு உடல் உறுப்பு குறித்த முழுமையான விழிப்புஉணர்வு இன்னமும் பரவலாகவில்லை என்பதே முக்கியக் காரணம். குறிப்பாக, உடல் உறுப்பு தானம் செய்ய எங்கு பதிவுசெய்ய வேண்டும், எதையெல்லாம் தானம் செய்யலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே, உடல் உறுப்பு தானத்துக்கு யாரை அணுக வேண்டும், எங்கு பதிவு செய்ய வேண்டும், அதில் உள்ள நடைமுறைகள் என்னென்ன, ஒவ்வோர் உறுப்பையும் தானம் செய்வதற்கான கால வரையறை என்ன... எல்லாவற்றையும் விரிவாகப் பார்க்கலாம்.

 

உறுப்புகள் தானம் செய்வது எப்படி?

Sponsored


உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், அவர் இருக்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்.  அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இன்னொரு வழிமுறையும் உண்டு. உறுப்பு தானம் செய்ய விரும்புவோர் ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையை  தமிழக அரசு இதற்கென்றே அமைத்துள்ள (<<www.tnos.org>>,   <<http://www.transtan.org/>>)  என்ற  இணையதளத்துக்குப் போய் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  இந்த அட்டையில் பெயர்,  ரத்தப் பிரிவு, சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்... என எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும்.  உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துகொண்டவர்கள் கண்டிப்பாகத் தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தைத் தெரிவித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான்  இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் உறுப்பு கேட்டு வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.

Sponsored


 

அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது, மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்பவர்களையும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும்  இந்த ஆணையம்தான் ஒருங்கிணைக்கிறது. 

பின்பற்றப்படும் நடைமுறைகள்...

இறந்த ஒருவரின் உடலை உடல் உறுப்பு தானத்துக்காகவோ, உடல் தானத்துக்காகவோ பெறுவதில் உள்ள சிக்கலைவிட, மூளைச் சாவடைந்தவரிடம் இருந்து பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. சரி... ஒருவர் மூளைச் சாவடைந்தார் எப்படி உறுதி செய்வார்கள்?

விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த நிலையில் ஒருவரின்  உடல் செயலற்றுப்போவதை, டாக்டர்கள் 'கோமா நிலை' என்கிறார்கள். இதில், தன்னிலைக்கு மீண்டு வரக்கூடிய நிலை மற்றும் மீண்டுவர முடியாத நிலை என இரண்டு வகைகள் உள்ளன. இதில்  மீண்டு வர முடியாத நிலைதான் `மூளைச்சாவு’ எனப்படுகிறது. மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் துடிக்தாலும் அவரால் சுயமாக மூச்சுவிட முடியாது. எனவேதான் மூளைச்சாவு என்பது மரணமடைந்ததற்குச் சமம் என்கிறார்கள்.  மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு,  செயற்கை சுவாசம் கொடுக்கப்படாவிட்டால், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார்.  அந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள். 

அதே நேரத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்துவிட முடியாது. அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, ஒரு நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்... ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மூளைச்சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்துதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறாரா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

 

``மூளைச்சாவு அடைந்தவரின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், எலும்புகள், தோல் ஆகியவற்றையும் மற்றவர்களுக்குப் பயன்படுத்தலாம். அதேநேரத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகளைப் பதப்படுத்தி வைத்திருக்கவும், பயன்படுத்தவும்

 அதற்கென உரிய காலக்கெடு வரையறுக்கப்பட்டிருக்கிறது. மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம்.  எனவே, எத்தனை மணி நேரத்துக்குள் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்பதற்கான கால வரையறை உள்ளது’’ என்கிறார் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பொன்னம்பலநமசிவாயம். இது குறித்து அவர் மேலும் விளக்குகிறார்... 

``இதயம்  - 6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம்  (Kidney) - 72 மணி நேரம் வரையிலும்,  கல்லீரல்  (Liver) - 24 மணி நேரம் வரையிலும்,  நுரையீரல்  (Lungs) - 4 - 6 மணி நேரம் வரையிரலும்,  கணையம் (Pancreas) - 24 மணி நேரம் வரையிலும், கண் விழித்திரை (Corneas) - 14 நாள்கள் வரையிலும், எலும்பு மஜ்ஜை (Bone Marrow) -5  நாள்கள் வரையிலும், தோல் (Skin) - 5 வருடங்கள் வரையிலும், எலும்பு (Bone) -  5 வருடங்கள் வரையிலும், இதயத்தின் வால்வுகள் ( Heart valves) - 10 வருடங்கள் வரையிலும் பதப்படுத்தி வைத்திருந்து மற்றவருக்குப் பயன்படுத்த முடியும். எனவே, உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குப் பதிவு செய்வதோடு  உரிய நேரத்தில் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதும் அவசியம். எவ்வளவு விரைவாக உடல் உறுப்புகள் மாற்றப்படுகிறதோ, அந்த அளவுக்கு பயனாளி உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆகவே இது குறித்த விழிப்புஉணர்வை இளைஞர்களும் மாணவர்களும்தான் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்கிறார் பொன்னம்பலநமசிவாயம்.
 Trending Articles

Sponsored