`பிக் பாஸ்’ ஓவியாவுக்குக் குவியும் ஆதரவு... இளைய தலைமுறையை ஆட்டிவைக்கும் செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்?! #BiggBossTamil



Sponsored



தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட இன்றைய காலத்திலும், பிரபலங்களின் மீதான ஈர்ப்பு கொஞ்சம்கூடக் குறையவில்லை பலருக்கு! பிடித்த நடிகரின் திரைப்படம் வெளியாகிற தினத்தில் முதல் ஷோ பார்த்துவிடும் வெறிகொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். `கட்அவுட்’ கலாசாரம், அதற்குப் பாலாபிஷேகம் இன்றும் நடக்கிறது. பிடித்த ஹீரோக்களின் நடை, உடை, பாவனையைப் பின்பற்றும்... ஏன்... அவர்களைப் போலவே ஹேர்ஸ்டைல் செய்துகொள்பவர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டும் அல்ல... சீரியல் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்... எனப் பலருக்குப் பல பிரபலங்களின் மீது இருக்கும் இந்த ஈர்ப்பு கொஞ்சம் கவலைகொள்ள வைப்பதுதான். `தெய்வ மகள்’ தொலைக்காட்சித் தொடர் நடிகை காயத்ரிக்கு ரசிகர் மன்றம் உண்டு. `பிக் பாஸ்’ ஓவியாவுக்கு ஆதரவு குவிகிறது. இவர்களாவது பரவாயில்லை. அமெரிக்க வ்ரெஸ்லிங் வீரர் ரோமன் ரீய்ன்ஸுக்கு (Roman Reigns) உள்ளூர் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது கட்அவுட் வைக்கிற ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதைத்தான் `செலிபிரிட்டி வொர்ஷிப் சிண்ட்ரோம்’ என வரையறுக்கிறது மருத்துவம்.

இது இயல்பானதுதானா, இது போன்ற ஈர்ப்பு பிரபலங்களின் மேல் ஏற்படுவதற்கு என்ன காரணம், இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன... என்பது பற்றி விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

Sponsored


``செலிபிரிட்டி வொர்ஷிப்... அதாவது, பிரபலங்களை வழிபடுதல் என்பது மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைதான். எண்ணச் சுழற்சிக் கோளாறுகளில் (Obsessive disorder) ஒரு வகை இது. இருந்தாலும், இதன் தன்மையைப் பொறுத்து இதை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை...

Sponsored


என்டர்டெயின்மென்ட் சோஷியல் (Entertainment social)

இதை, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் அணுகுவது. இந்தத் தன்மை உள்ளவர்கள், நண்பர்களுடன் தனக்குப் பிடித்த ஹீரோவைப் பற்றிப் பேசுவது, அவர் நடிக்கும் படங்களைப் பற்றி பேசுவது என்கிற அளவில் இருப்பார்கள். அதிகபட்சமாக தான் விரும்பும் நபரை யார் விரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் ஒரு குழுவாக இணைத்துக்கொண்டு அவரைப் பற்றி பேசி மகிழ்வார்கள். இது மிகவும் இயல்பான ஒன்று. மனிதர்கள் அனைவருமே சமூக விலங்குகள்தான். சமூகத்தில் பிறருடன் பேச, பழக ஒரு கருவியாக இது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. மேலும், தங்களுக்குப் பிடித்தவரைப் பற்றிப் பேசுவதால் அவர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இன்டென்ஸ் பெர்சனல் (Intense personal)

என்டர்டெயின்மென்ட் சோஷியல் நிலையில் உள்ளவர்கள் நேரம் கிடைக்கும்போது தங்களுக்குப் பிடித்த பிரபலங்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், இன்டென்ஸ் பெர்சனல் நிலையில் உள்ளவர்கள், தங்களுக்குப் பிடித்த பிரபலங்களுக்காகவே தங்கள் நேரம் முழுவதையும் செலவழிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிப்பார்கள். இதனால் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் சில பாதிப்புகள் உண்டாகும். மேலும், தனக்குப் பிடித்த நபர் மீது, தனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பிணைப்பு இருப்பதாகக் கருதுவார்கள். அவர்களைத் தன் நண்பராகவோ, காதலராகவோ கற்பனை செய்துகொள்வார்கள். அவர்களைப்போலவே தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

நல்ல மன நிலையில் உள்ளவர்களுக்கு இந்த நிலை ஆபத்தானது அல்ல. இருமுனை மனநிலைக் கோளாறு (Bipolar mood disorder) மற்றும் மனச்சிதைவு நோய் உள்ளவர்களுக்கு இது அதிகமான பாதிப்பை உண்டாக்கும்.

உதாரணமாக, பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால், தங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் திரைப்படத்தில் நாயகிகளிடம் சொல்லும் வசனங்களைக்கூட தன்னிடம் சொல்வதாக நினைத்துக்கொள்வார்கள். அதோடு, அவர்கள் தன்னைக் காதலிப்பதாகவும் கற்பனை செய்துகொள்வார்கள்.

ஆண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், தங்களுக்குப் பிடித்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்வது, மெயில் அனுப்புவது போன்ற செயல்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். மேலும், தனக்குப் பிடித்த நாயகிகளைக் காதலியாகவோ, மனைவியாகவோ கற்பனை செய்துகொண்டு வாழ்வார்கள். இளைஞர்கள் மட்டும் அல்லாமல் வயதானவர்களும் இந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.

திரைப்படத்தில், சீரியலில் வரும் நல்ல கதாபாத்திரங்களை தங்கள் மகளாக, மகனாக நினைத்துக்கொண்டு வாழ்வார்கள். இந்த நிலையில் உள்ளவர்கள் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.

பார்டர்லைன் பேத்தலாஜிக்கல்: ( Borderline pathological)

இந்த நிலையில் உள்ளவர்கள் சராசரி மனிதர்களைப்போல் இருக்க மாட்டார்கள். ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டுமா அல்லது அவர்களுக்குப் பிடித்த பிரபலங்களின் கைக்குட்டை வேண்டுமா என்று கேட்டால், `கண்டிப்பாகக் கைக்குட்டைதான் வேண்டும்’ என்று சொல்வார்கள்.

அவர்களுக்குப் பணத்தைவிட தங்கள் ஆதர்ச நாயகர்கள் பயன்படுத்திய பொருள்களின் மீதே அதிகமான விருப்பம் இருக்கும்.

திரைப்பட நடிகர்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் மீதும்கூட இப்படி அதீத ஈர்ப்போடு இருப்பார்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், திரைப்பட ஹீரோக்கள் தங்களை விரும்புவதாக நினைத்துக்கொள்வார்கள். இவர்கள் கண்டிப்பாக மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

ஆண்கள் தாங்கள் விரும்பியவராகவே மாற நினைப்பார்கள், வாழ நினைப்பார்கள்.

என்ன காரணம் ?

சிறுவயதில் ஆண் குழந்தைகள் தங்கள் அப்பாவையும், பெண் குழந்தைகள் தங்கள் அம்மாவையும் தங்கள் ஹீரோக்களாக நினைத்துக்கொள்வார்கள். ஒருவேளை வீட்டில் தங்களுக்கான ரோல்மாடல் கிடைக்காதவர்கள், வெளியில் தேடுவார்கள். நல்ல மனிதர்களை, அறிவாளிகளைத் தங்கள் ரோல் மாடல்களாக எடுத்துக்கொள்பவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். ஆனால், சினிமாவில் நடிப்பவர்களை, சினிமா பிரபலங்களை ரோல்மாடல்களாக எடுத்துக்கொள்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையைக்கூட பின்பற்றத் தொடங்குவார்கள். இது சில நேரங்களில் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். யாரைப் பின்பற்றினாலுமே தீவிரமான நிலை என்பது ஆபத்தானதே.

எப்படி மீள்வது ?

என்டர்டெயின்மென்ட் சோஷியல் நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. அதே நேரத்தில், பிரபலங்களைப் பற்றிப் பேசும், சிந்திக்கும் நேரத்தை அவர்கள் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ளாகவே கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, மற்ற வேலைகளில் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும்.

இன்டென்ஸ் பெர்சனல் நிலையில் உள்ளவர்கள், தனிப்பட்ட முறையில் பிறருக்கு இது தொடர்பாக மெசேஜ் செய்வது போன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், பிரியமானவர்களுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். வேறு ஏதேனும் பொழுதுபோக்குகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

பார்டர்லைன் பேத்தலாஜிக்கல் நிலையில் உள்ளவர்கள், தங்கள் நிலையைத் தாங்கள் உணர முடியாதவர்கள். இந்த நிலையில் உள்ளவர்களைப் பெற்றோர்களோ, நண்பர்களோதான் மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அவருக்குத் தேவையான கவுன்சலிங் கொடுப்பதன் மூலம் இந்த நிலையில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும்.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். தங்களுடைய தனித்திறன்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர்களாக மாற நினைக்கக் கூடாது. யாராலும் நிச்சயமாக அடுத்தவராக மாறவோ, வாழவோ முடியாது. அப்படி முயற்சி செய்தால் அது ஆபத்தைதான் தேடித் தரும்.



Trending Articles

Sponsored